www.jananayakam.net.ms or www.jananayakan.tk, Email: jananayakam.gmail.com ....

Monday, December 10, 2007

மனித உரிமைகள் தினத்தில் ஈ.பி.டி.பி விடுக்கும் செய்தி.!


மனித உரிமை மீறல்களை தடுத்து நிறுத்த வழியென்ன...?

மார்கழி பத்து! சர்வதேச மனித உரிமைகள் தினம். வருடந்தோறும் மனித உரிமை தினங்கள் வந்து போகின்றன!
மனித உரிமை மீறல்களுக்கு எதிரான கண்டன அறிக்கைகளையும், ஆர்பாட்ட ஊர்வலங்களையும் மட்டும்தான் இந்த மனித உரிமை தினங்கள் எம் கண்முன் காட்டிவிட்டுப்போகின்றன. ஆனாலும், மனித உரிமை மீறல்கள் தொடரப்பட்டே வருகின்றன.
மானுட உலகம் வெட்கித்தலைகுனியும் வகையில் இலங்கைத்தீவிலும் தொடரும் மனித உரிமை மீறல்கள் மக்களின் வாழ்வியல் உரிமைகளை மறுத்து வருகின்றன. இவ்வகையான மனித உரிமை மீறல்களை தடுத்து நிறுத்தி மக்களின் வாழ்வியல் உரிமைகளை பாதுகாப்பதற்கான நடைமுறைகள் உருவாக்கப்பட வேண்டும் என்பதே மனித உரிமைகளை நேசிக்கும் எமது விருப்பங்களாகும். வேர்கள் இருக்கும் போது இலைகளை மட்டும் பிடுங்கி எறிவதால் எதுவும் ஆகிவிடப்போவதில்லை. மனித உரிமை மீறல்களுக்கு காரணமாக இருக்கின்ற போர்ச்சூழல் தொடர்ந்தும் இருக்கும் போது, மனித உரிமை மீறல்களை தடுத்து நிறுத்த கோருவது வெறும் கண்துடைப்புகளுக்கான கண்டனங்களாக மட்டுமே கருதப்பட வேண்டும்.

முதலில் இந்த அழிவு யுத்தத்தை தடுத்து நிறுத்த வேண்டும். தமிழ் பேசும் மக்களின் விருப்பங்களுக்கு மாறாக வெறும் சுயலாப நோக்கில் விடுதலைப்போராட்டம் என்ற பெயரில் முடிவற்ற ஒரு அழிவு யுத்தம் எமது மக்களின் மீது திணிக்கப்பட்டு வருகின்றது. அரசியல் தீர்விற்கு விருப்பமின்றி, அமைதிப்பேச்சுகளுக்கான சந்தர்ப்பங்கள் பலவற்றையும் திட்டமிட்டு தவறாக பயன்படுத்தும் சுயலாப அரசியல்தான் அழிவு யுத்தத்தை நடத்தியும், நடத்த தூண்டியும் வருகின்றது. இந்த அழிவு யுத்தம் தனிமனித சுதந்திரங்களை அடக்கி ஒடுக்கி வைத்திருக்கின்றது. அப்பாவி மனிதர்களை கொன்றொழிக்கின்றது, கொல்லக்கொடுக்கின்றது. சாதாரண குடி மக்களின் சிறார்களை கட்டாய இராணுவப்பயிற்சிக்கு கடத்திச்செல்கின்றது, அவர்களை யுத்த முனையில் பலி கொடுத்து வருகின்றது, ஆட்கடத்தல், அச்சுறுத்தல், அனாமதேய பேர்வழிகளின் முக்காட்டினுள் மறைந்து நின்று கப்பம் கோருதல், கண்ட இடத்தில் சுட்டுக்கொல்லுதல் என வன்முறைகளை நடத்திக்கொண்டிருக்கின்றது. மனித உரிமைகளுக்காகவும், மக்களுக்காகவும் உழைக்கும் ஐனநாயக தலைமைகள் மீது மனித வெடி குண்டுகளை ஏவிட்டுக்கொண்டிருக்கின்றது. அப்பாவி மக்கள் கூடும் இடங்களில் வெடிகுண்டுத்தாக்குதல்களை நடத்திக்கொண்டிருக்கின்றது, இதனால் தொடரப்படும் கைதுகளும், சிறைவைப்புகளும் தூண்டிவிடப்படுகின்றன. முடிவற்று, இலக்கற்று தொடரும் இந்த அழிவு யுத்தம் தமிழ் பேசும் மக்களை மட்டுமன்றி, அப்பாவி சிங்கள சகோதர மக்கள் மீதும், அப்பாவி முஸ்லிம் சகோதர மக்கள் மீதும் இலக்கு வைத்து அவர்களை பலியெடுத்து வருகின்றது. இனங்களுக்கிடையிலான பகைமையை தூண்டிவிட்டு அதில் சுயலாபம் தேடும் வன்முறை அரசியலை நடத்தி வருகின்றது. இவைகளுக்கு மேலாக இந்த யுத்தம் சாதாரண குடி மக்களை சொந்த இடங்களை விட்டு துரத்தியும், அகதி முகாம்களுக்குள் வாழ நிர்ப்பந்தித்தும் வருகின்றது.
சுதந்திரமாக பேசவும், நடமாடவும், விரும்பிய அரசியல் பாதையை தேர்ந்தெடுக்கவும், மரணங்களை காணாத மனித இனமாக வாழவும், இன சமத்துவத்துடனும், இன ஐக்கியத்துடனும் உரிமைகளோடு முகமுயர்த்தி வாழும் ஒரு சமாதான தேசத்தை உருவாக்க வேண்டும். இந்த அழிவு யுத்த சூழைல மாற்றியமைக்க வேண்டும். இதுவே மனித உரிமை மீறல்களை அடியோடு தடுத்து நிறுத்த இருக்கின்ற வழியாகும். நடைமுறைச்சாத்தியமான வழிமுறையில் அரசியலுரிமை சுதந்திரம் நோக்கி நகர வேண்டும். அதை அடையும் கால இடைவெளிக்குள் தமிழ் பேசும் மக்களின் பெயரால் யுத்தம் நடத்தும் வன்முறையாளர்களையும், அப்பாவி தமிழ் பேசும் மக்களையும் இனம் கண்டு, இரு வேறு தரப்பினரையும் வேறுபடுத்தி பார்க்கும் நடைமுறைகள் தொடரப்படவேண்டும்.
மனித உரிமை மீறல்களை தடுத்து நிறுத்த அனைத்து ஐனநாயக அரசியல் சக்திகளும், மனித நேயவாதிகளும், சர்வ மதங்களின் தலைவர்களும், வழி காட்டிகளும், சமூக அக்கறையாளர்களும், சமூகப்பெரியார்களும், புத்திஐPவிகளும், சர்வதேச சமூகமும் தொடர்ந்தும் உறுதியுடன் உழைக்க வேண்டும்!
இதுவே எமது மக்களின் மகிழ்ச்சிக்காக மனித உரிமை மீறல்களை தடுத்து நிறுத்த மனித உரிமைகள் தினத்தில் ஈ.பி.டி.பி விடுக்கும் வேண்டுகோளாகும்!

தகவல் தொடர்பு செயலாளர்
ஈழ மக்கள் ஐனநாயக கட்சி ஈ.பி.டி.பி 10.12.2007

Tuesday, December 4, 2007

பரீட்சார்த்த முயற்சி

ஜனநாயகத்தின் குரல்வளை
நசிக்கப்பட்டு வரும் இன்றைய நிலையில்,
தடைகளை உடைத்து
ஜனநாயகத்திற்கு உரமூட்டும் முயற்சியாக
இக் களம் உருவாக்கப்பட்டுள்ளது.