www.jananayakam.net.ms or www.jananayakan.tk, Email: jananayakam.gmail.com ....

Wednesday, April 22, 2009

வன்னியில் இருந்து இடம்பெயரும் மக்கள் - வீடியோ பதிவு

Monday, April 20, 2009

வன்னி யுத்த சூனியப் பிரதேசத்தில் இருந்து அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு இடம் பெயர்ந்த மக்கள் - வீடியோ இணைப்பு


வன்னி யுத்த சூனியப் பிரதேசத்தில் இருந்து அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு இடம் பெயர்ந்த மக்கள் - வீடியோ இணைப்பு

அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்த மக்கள் - வீடியோ இணைப்பு



யுத்த சூனிய வலயத்தில் இருந்த 35 ஆயிரம் மக்களும் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வருகை.



தமிழீழ விடுதலைப் புலிகளின் பிடியில் சிக்குண்டு யுத்த சூனியப் பகுதியான வலைஞர்மடம், புதுமாத்தளன் மற்றும் அம்பலவன்பொக்கணை போன்ற இடங்களில் இருந்த பொது மக்களை மீட்கும் பொருட்டு இன்று திங்கட்கிழமை அதிகாலை இராணுவத்தின் 58ஆம் படையணி, 55ஆம் படையணி, 11வது காலாற்படை, கெமுனு வொட்ச் - 9, கஜபா ரெஜிமன்ட் - 8, விசேட படையணி மற்றும் இராணுவக் கொமாண்டோ படையணி ஆகியன இணைந்து பாதுகாப்பு வலயமான புதுமாத்தளன் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளால் அமைக்கப்பட்டிருந்த 2.5 கிலோமீற்றர் நீளமான மண்ணணையினை இராணுவம் கைப்பற்றியுள்ளது.

இம் மண்ணணையை ஊடறுத்துச் சென்ற இராணுவத்தினர் பாதுகாப்பு வலயத்தில் சிக்குண்டு இருந்த 35000 பேருக்கும் அதிகமான மக்களை மீட்டிருப்பதாக செய்திகள் கூறுகின்றன, அத்துடன் பழமாத்தளன் பகுதியில் சிக்குண்டிருந்த 3000 பேருக்கும் மேற்பட்ட மக்களை 55ஆம் படையணி நிலைகொண்டிருந்த சாளையின் தெற்குப் பகுதிக்கு வந்திருப்பதாகவும் இராணுவ தகவல்கள் கூறுகின்றன.

இன்று மதியம் 12 மணியில் இருந்து 24 மணித்தியாலத்தினுள் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் திரு.வே.பிரபாகரன் மற்றும் அவரது இயக்க உறுப்பினர்களைச் சரணடையுமாறு இராணுவம் காலக்கெடு விதித்துள்ளது.

மக்களைத் தடுத்து நிறுத்தும் நோக்கில் விடுதலைப் புலிகளால் மூன்று தற்கொலைத் தாக்குதல் மற்றும் துப்பாக்கித் தாக்குதல் நடத்தியதில் பல பொதுமக்கள் கொல்லப்பட்டும் காயமடைந்தும் உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

மக்கள் சாரிசாரியாக இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்து கொண்டிருப்பதாகவும், இதனை ஆகாயத்தில் இருந்து ஆளில்லா விமானத்தின் மூலம் எடுக்கப்பட்ட வீடியோ படம் உறுதிப்படுத்துவதாகவும், இவர்களை வவுனியாவிலுள்ள நலம்புரி நிலையங்களுக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அரசதரப்புச் செய்திகள் கூறுகின்றன.

விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த புதுமாத்தளன், வலைஞர்மடம் மற்றும் அம்பலவன்பொக்கனை பகுதிகளில் இருந்து 35,000 பொதுமக்களை இராணுவத்தினர் விடுவித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.


Sunday, April 19, 2009

புதுமாத்தளன் பகுதியிலிருந்து பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் புதுக்குடியிருப்பு பகுதிக்கு வருகை.

ஸ்ரீலங்கா அரசாங்கம் அறிவித்துள்ள யுத்த சூனியப் பிரதேசத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பிடியில் கேடயமாக்கப்பட்டுள்ள மக்களை மீட்கும் பொருட்டு இன்று 2009.04.20 ஆம் திகதி காலை புதுமாத்தளன் பகுதியில் விடுதலைப் புலிகளால் அமைக்கப்பட்ட மண்ணரணை ஸ்ரீலங்கா இராணுவ தரப்பு கைப்பற்றியுள்ளது.

இதனைத் தொடர்ந்து யுத்த சூனியப் பிரதேசத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் சிக்கியுள்ள பொது மக்களை பாதுகாப்பாக வெளியேற்ற பாதை அமைக்கப்பட்டுள்ளதாகவும், இதனைப் பயன்படுத்தி பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இன்று ஸ்ரீலங்கா படையினர் நிலை கொண்டுள்ள புதுக்குடியிருப்பு போன்ற பகுதியை நோக்கி வந்துள்ளதாகவும் அறிய முடிகின்றது.

நேற்றைக்கு முன்தினம் 2009.04.18 ஆம் திகதி புதுமாத்தளன் பகுதியிலிருந்த 1253 சிறார்கள், 853 பெண்கள், 732 ஆண்கள் அடங்கலான 2838 பேர் ஸ்ரீலங்கா இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

Saturday, April 18, 2009

ஸ்ரீலங்கா ஜனாதிபதி கிளிநொச்சி விஜயம்.


கடந்த 2009.04.16ம் திகதி ஸ்ரீலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கிளிநொச்சிக்கு விஜயம் செய்து அங்கு நிலைகொண்டுள்ள இராணுவத்துடன் சிங்கள புத்தாண்டைக் கொண்டாடியதுடன் தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றிய இராணுவ ஆயுத தளபாடங்கள் மற்றும் இடங்களையும் பார்வையிட்டார்.

கிளிநொச்சி விஜயம் தொடர்பாக அமைச்சர் முரளிதரன் மற்றும் பொது மக்களின் கருத்தும் கொண்ட விவரண வீடியோ ஒளிப்பதிவு.

கிழக்கில் இருந்து வடக்கு வரை படை நகர்வு - வீடியோ விவரணம்


கிழக்கில் இருந்து வடக்கு வரை இராணுவத்தினரின் படை நகர்வு விவரணம்.

கருணா அம்மானால் திறந்து வைக்கப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அலுவலகம்.


தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், ஜனநாயக வழிக்குத் திரும்பியதைத் தொடர்ந்து ஸ்ரீலங்கா ஜனாதிபதி திரு.மஹிந்த ராஜபக்ஷவினால் நியமன பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அங்கத்துவத்தைப் பெற்ற கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தனது அரசியல் முகவரி கூறிய தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அரசியற் காரியாலங்களை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் காரியாலயமாக மாற்றிக் கொண்டிருக்கின்றார், இதற்காக பாராளுமன்ற உறுப்பினர் முரளிதரனுக்கு அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் பதவி ஜனாதிபதியினால் அண்மையில் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அலுவலகத்தைத் திறந்து வைத்து அமைச்சர் முரளிதரன் உரையாற்றினார்.

பிரபாகரன் காட்சிப் படலம்


தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் திரு.வே.பிரபாகரன், திருமதி.மதிவதனி பிரபாகரன், சாள்ஸ் அன்ரனி, துவாரகா மற்றும் பாலச்சந்திரன் போன்றோரை மையமாக வைத்து ஸ்ரீலங்கா ஊடகம் ஒன்றில் ஒளிபரப்பான காட்சிப் படலம்.

Wednesday, April 15, 2009

தீவகத்துக்கு விஜயம் மேற்கொண்ட மக்கள் தலைவர்.


வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வவுனியாவில் உள்ள நிவாரணக் கிராமங்களில் வாழும் மக்களைச் சந்தித்து அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியில் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா கடந்த வாரம் யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்டு மக்களைச் சந்தித்து வருகின்றார்.

அமைச்சரின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதியின் மூலம் நிர்மாணிக்கப்பட்ட எழுவைதீவு புனித தோமையார் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க கட்டடத்தை கடந்த 2009.04.13 ஆம் திகதி தீவகப் பகுதிகளுக்குச் சென்ற அமைச்சரினால் திறந்து வைக்கப்பட்டது.

கடந்த வருட இறுதியில் ஏற்பட்ட நிஷா புயல் மற்றும் மழை வெள்ளத்தினால் பாரிய அனர்த்தத்துக்குள்ளாகி புனரமைப்பு மேற்கொள்ளப்பட்டு வரும் தீவக இறங்கு துறைகளையும் அதனோடிணைந்த வீதிகளையும் நேரில் சென்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பார்வையிட்டார்.

நாதஸ்வர, மேள தாள இசையுடன் அனலைதீவு மக்களால் அழைத்து வரப்பட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அனலைதீவு மக்களின் நீண்ட நாட் கனவான மின்சார விநியோகத் திட்டத்தை கடந்த 2009.04.13 ஆம் திகதிஆரம்பித்து வைத்தார்.

இந் நிகழ்வில் அரசாங்க அதிபர் திரு.கே.கணேஷ், ஊர்காவற்றுறை உதவி அரசாங்க அதிபர் திரு.ஸ்ரீமோகனன், வடபிராந்திய இலங்கை மின்சார சபை உதவிப் பொது முகாமையாளர் திரு.முத்துரத்தினானந்தசிவம், தீவக கடற்படை கட்டளைத்தளபதி லெப்டினன் கொமாண்டர் வித்தானாச்சி, தீவக கடற்படை உயரதிகாரிகள், மதகுருமார் மற்றும் கிராம உத்தியோகத்தர்கள் அடங்கலாக பொதுமக்களும் பலரும் பங்கு கொண்டனர்.

நிஷா புயல், மழை மற்றும் வெள்ளம் காரணமாக தீவகப் பரப்பில் வீழ்ந்து கிடக்கும் பனை மரங்களையும், வயது முதிர்ந்த பனை மரங்களையும் வெட்டி விற்பதற்கு அனுமதி பெற்றுத் தருமாறு கோரிய தீவக பிரதேச பொதுமக்களின் பேச்சைச் செவிமடுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறிப்பிட்ட அப் பனை மரங்களை வெட்டி விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை பிரதேச பொது நோக்கங்களுக்கு பயன்படுத்த நடடிக்கை எடுக்குமாறு அரசாங்க அதிபருக்கு அமைச்சர் பணிப்புரை வழங்கினார்.

தீவகப் பகுதிகளுக்கு விஜயம் செய்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மக்களோடு மக்களாக எழுவைதீவிற்கு கால் நடையாகவே சென்று அப் பிரதேசம் எங்கும் சென்று பார்வையிட்டார். அனலைதீவிற்கு மக்களோடு மக்களாக இ.போ.சபையின் பேரூந்தில் பயணம் மேற்கொண்டார்.

Tuesday, April 14, 2009

புத்தாண்டு வாழ்த்துக்கள்

புத்தாண்டு வாழ்த்துச் செய்தி - டக்ளஸ் தேவானந்தா

அரசியல் உரிமைச் சுதந்திரத்தைப் பெற்றுக் கொள்வதற்குப் புதிய நம்பிக்கையோடு அனைவரும் உழைப்போம் - செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா

பிறக்கின்ற சித்திரைப் புத்தாண்டுகள் ஒவ்வொன்றும் ஒளிமயமான எதிர்காலத்தின் வருகைக்கான பாதையைத் திறக்கின்ற வாசல்களாக இருக்க வேண்டும் என்பதே அனைவரினதும் மன விருப்பமாகும்.

கடந்து போன ஆண்டுகளில் பிறந்து வந்த புத்தாண்டுகள் ஒவ்வொன்றும் மகிழ்ச்சி தரும் நிகழ்வுகளுக்கு மாறாக துயரங்களையும், அவலங்களையுமே எமது மக்களின் வாழ்வின் மீது அதிக சுமைகளாக்கிச் சென்றுள்ளன.

இதுவரை காலமும் முடிவற்றுத் தொடர்ந்து வந்த அழிவு யுத்தமே இதற்குக் காரணமாக இருந்து வந்திருக்கிறது, எமது மக்களின் வாழ்வியல் உரிமைகள் மீது வலிகளை மட்டும் தந்து கொண்டிருந்த யுத்த சூழல் மெல்ல மெல்ல அகன்று வரும் இத்தருணத்தில் அடுத்து வரும் காலம் வலிமை பெற்ற மகிழ்ச்சி தரும் வாழ்வின் தொடக்கத்தைத் தரும் என்ற நம்பிக்கை ஒளி எம் கண் முன் தோன்றி வருகிறது.

இந்த ஆண்டிலும் இன்னொரு புத்தாண்டு பிறக்கவுள்ளது, எமது தேசமெங்கும் புதுவசந்தம் வீச எமது மக்களின் இல்லங்கள் தோறும் புன்னகை பூத்துக் குலுங்க பிறக்கின்ற புத்தாண்டு வழி சமைக்க வேண்டும் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பாகும்.

பிறக்கின்ற புத்தாண்டு எமது மக்களின் வாழ்வியல் உரிமைகளை உறுதிப்படுத்தும் ஆண்டின் தொடக்கமாக இருக்க வேண்டும் என்பதே எமது விருப்பமாகும். எமது மக்கள் அச்சமின்றி உயிர் வாழவும், தேசமெங்கும் சுதந்திரமாக நடமாடவும் உண்மைகளைப் பேசவும் விரும்பியவாறு சுதந்திரமாகத் தொழில் புரிவதற்கேற்ற சூழலை உருவாக்குவதற்கு நாம் தொடர்ந்தும் உழைப்பதே பிறக்கின்ற புத்தாண்டை அர்த்தமுள்ளதாக ஆக்குவதற்கு நாம் ஆற்றும் பாரிய பணியாகும்.

அன்றாட அவலங்களுக்கான தீர்வும் அபிவிருத்தியும் அரசியல் உரிமைச் சுதந்திரமும் பெற்ற அமைதி மிக்க சமாதான தேசம் ஒன்றை நோக்கிப் பிறக்கின்ற புத்தாண்டில் புது நம்பிக்கையோடு அனைவரும் சேர்ந்து உழைப்போம்.

பிறக்கவிருக்கும் புத்தாண்டு அனைவருக்கும் மகிழ்ச்சியானதாக அமையும் என்ற நம்பிக்கையோடு சித்திரைப் புத்தாண்டைக் கொண்டாடும் அனைவரினதும் உணர்வுகளோடு நாமும் இணைந்து கொள்கிறோம்.


கே.என்.டக்ளஸ் தேவானந்தா
செயலாளர் நாயகம்
ஈபிடிபி.

Monday, April 13, 2009

நோர்வேயிலுள்ள ஸ்ரீலங்கா தூதரகம் சேதமாக்கப்பட்டுள்ளது (வீடியோ இணைப்பு)



நேற்று 2009.04.12 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை வன்னியில் இடம்பெறும் யுத்தத்தை நிறுத்தக் கோரி நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் ஆர்ப்பாட்டம் நடத்திய ஆற்பாட்டக்காரர்கள் ஸ்ரீலங்கா தூதரகத்தின் மீது தாக்குதலை நடத்தியுள்ளார்கள்.

இச் சம்பவத்துக்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் காட்டமான எதிர்ப்பைக் குறிப்பிட்டதுடன், தாக்குதல் நடத்தியவர்களைக் கைது செய்ய வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளது, இத் தாக்குதல் தொடர்பாக நோர்வே தனது வருத்தத்தை ஸ்ரீலங்காவுக்கு தெரிவித்துள்ளது.

இத் தாக்குதலில் சம்பந்தமான வீடியோப் பதிவு கிடைக்கப்பட்டுள்ளதாகவும், சம்பந்தப்பட்டோர் விரைவில் கைது செய்யப்படுவார்களென நோர்வே பாதுகாப்பு தரப்பு குறிப்பிட்டுள்ளது.

தாக்குதல் தொடர்பான வீடியோ பதிவு

Friday, April 10, 2009

ஜெனீவாவின் சர்வதேச பிரதிநிதிகள் மாநாட்டில் டக்ளஸ் தேவானந்தா.

எதிர் வரும் 2009.04.20 ஆம் திகதியிலிருந்து ஆரம்பமாகும் ஜெனீவாவின் பிரதிநிதிகள் ஒன்று கூடும் சர்வதேச உயர்மட்ட மாநாட்டில் சமூக சேவைகள் அமைச்சரும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா இனம், கல்வி மற்றும் வறுமை ரீதியாக உருவாகி வரும் பாகுபாடுகளை நீக்கி அவற்றை உறுதிப்படுத்துவது தொடர்பாக உரையாற்றவுள்ளார்.

ஏற்கனவே இது குறிந்த சர்வதேச மாநாடு 2001 ஆம் ஆண்டு நடைபெற்றதென்பது குறிப்பிடத்தக்கது.

Wednesday, April 8, 2009

யாழ் - கொழும்பு பயணிகளுக்காக வான்படை விமான சேவை

யாழ்ப்பாணம் - கொழும்பு பயணத்தினை மேற்கொள்ளும் பயணிகள் போக்குவரத்தில் அசௌகரியப்படுவதனை நிவர்த்திக்கும் நோக்கில் ஸ்ரீலங்கா வான்படையினரின் விமானமூடாக பயணிகள் விமான சேவையை நடாத்துவதற்கு சமூக சேவைகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஏற்பாடு செய்துள்ளார்.

யாழ் - கொழும்பு பயணிகள் விமான சேவை தனியார் நிறுவத்தினால் நடைபெறுவதனால் காலதாமதம் ஏற்படுவதுடன் விமானப் பயணத்திற்கு பெருந்தொகையான பணச் செலவு ஏற்படுகின்றது, அத்துடன் கப்பல் சேவையினை எதிர்பார்த்து பெருமளவு பொதுமக்கள் பலத்த சிரமங்களுக்கு மத்தியில் திருகோணமலையிலும் தங்கியுள்ளனர், இவை அனைத்தையும் குறைக்கும் நோக்கில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நேரடிக் கண்காணிப்பில் தரகர்களின் மோசடிகளுக்கிடமின்றி இவ் விமானப் பயண சேவை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் - கொழும்பு பயணம் மேற்கொள்ள விரும்பும் பயணிகள் ஒரு வழிப் பயணச் சீட்டுக்கு 4400.00 + 500.00 = 4900.00 ரூபாய் செலுத்த வேண்டும். இவ் விமான சேவை பதிவுகள் அனைத்தும் கொழும்பு - 5, இசிப்பத்தன மாவத்தை, இல. 61, இல் அமைந்துள்ள சமூக சேவைகள் அமைச்சு பணிமனையில் மேற்கொள்ளப்படும், அத்துடன் 0112-584322 எனும் தொலைபேசி இலக்கத்தினூடாகவும் தமது பதிவுகளை மேற்கொள்ளலாமென சமூக சேவைகள் அமைச்சு அறிவித்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் பகிரங்க அழைப்பு! - டக்ளஸ் தேவானந்தா

புலிகள் இயக்க உறுப்பினர்களே! நீங்கள் மக்களின் பக்கமா? அல்லது உங்கள் தலைமையின் பக்கமா?... சுயமாகச் சிந்தித்து தீர்மானம் எடுங்கள்!

புலிகள் இயக்க உறுப்பினர்களுக்கு ஓர் பகிரங்க அழைப்பு!

தூக்கிய துப்பாக்கிகளும், மனித வெடிகுண்டுகளும் விடுதலையை ஒரு போதும் பெற்றுத் தராது! நான் சொல்லும் அறிவாயுதத்தையும் உங்கள் கருத்தில் எடுத்து ஒரு கணம் நீங்கள் சித்தித்து பார்க்க வேண்டிய தருணம் இது.

நீங்கள் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்களாக இருக்கலாம். ஆனாலும் உங்களை நான் புலிகள் என்று ஒரு போதும் கருதவில்லை. எமது தேசத்தின் புதல்வர்களாகவே நாம் உங்களை பார்க்கின்றோம். நாம் நேசிக்கும் எமது மக்களின் பிள்ளைகளாகவே நாம் உங்களை கருதுகின்றோம்.

உங்களில் பலர் புலித் தலைமையினால் பாலாத்காரமாக ஆயுதப் பயிற்சிக்கு பிடித்து செல்லப்பட்டவர்கள். புலித் தலைமையின் தவறான பரப்புரைகளை நம்பி நீங்களாகவே விரும்பியும் உங்களில் சிலர் புலித் தலைமையோடு இன்னமும் இணைந்திருக்கிறீர்கள். இதை நான் புரிந்து கொள்கின்றேன்.

உங்களில் பெருந்தொகையானவர்கள் அமைதியை விரும்புகின்றீர்கள், சமாதானத்தை விரும்புகின்றீர்கள், அர்த்தமுள்ள ஓர் அரசியல் தீர்வை விரும்புகின்றீர்கள்.
ஆனாலும் உங்களில் சிலர் இன்னமும் புலித் தலைமையின் அழிவு யுத்தத்திற்கும் வன்முறைக்கும் தொடர்ந்தும் பலியாகி வருவது கண்டு நான் மனத் துயரம் அடைகின்றேன்.
முடிவற்று தொடரும் அழிவு யுத்தத்திற்கு நீங்கள் மட்டும் பலியாகவில்லை. புலித் தலைமையின் அழிவு யுத்தத்தினால் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் அவலங்களையும், அழிவுகளையும் சந்தித்து வருகின்றார்கள்.

யாருக்காக நீங்கள் யுத்தம் நடத்துவதற்கு புலித் தலைமையால் தூண்டி விடப்பட்டீர்களோ அதே மக்கள் இந்த அழிவு யுத்தத்தினால் பேரவலங்களைச் சந்தித்து வருகிறார்கள் என்பதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். எமது மக்கள் இன்று சொந்த வீடிழந்து, சொந்த நிலமிழந்து, சொந்தங்களை இழந்து நடுத்தெருவில் நிற்பதற்கு புலித்தலைமையே பிரதான பொறுப்பு என்பதை நீங்கள் உணராமல் இருந்துவிட முடியாது.

அதற்காக சாதாரண புலி உறுப்பினர்களாகிய உங்களை நான் தவறு என்று கூற விரும்பவில்லை. உங்களை அழிவு யுத்தம் நடத்துவதற்கு தூண்டி விட்டுக்கொண்டிருக்கும் புலித் தலைமையே இன்று வரை எமது மக்களுக்கு மாபெரும் வரலாற்று துரோகங்களை இழைத்து வருகின்றது.

நான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் புலி உறுப்பினர்களாகிய உங்கள் மீது குற்றம் சுமத்தியது கிடையாது என்பதை நீங்கள் அறிவீர்கள். புலித்தலைமையே எமது மக்களுக்கு துயரங்களை சுமத்தி வருகின்றது என்றுதான் நான் எப்பொழுதும் கூறி வருகின்றேன்.

புலிகளின் பிரச்சினை வேறு! தமிழ் பேசும் மக்களின் பிரச்சினை வேறு! அது போலவே புலித்தலைமையின் பிரச்சினை வேறு! புலி உறுப்பினர்களாகிய உங்களின் பிரச்சினை வேறு என்றுதான் நான் இன்னமும் கருதி வருகின்றேன்.

நீங்கள் இள வயதானவர்கள், தமிழ் பேசும் மக்களின் உரிமைப் போராட்ட வரலாறு உங்களில் பலருக்கும் தெரிந்திருக்க நியாயமில்லை. சமாதானத்தையும், அமைதியையும், அரசியல் தீர்வையும் விரும்பும் எங்களை எமது மக்களின் உரிமைக்கு எதிரானவர்கள் என்றே புலித் தலைமை உங்களுக்கு பரப்புரை செய்து வருகின்றது.

ஆனாலும் வரலாற்றை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என நான் விரும்புகின்றேன்.
ஆயுதப்போராட்டம் என்பதை நான் முழுமையாக நிராகாரிப்பவன் அல்ல. நாங்களும் அன்று ஆயுதம் ஏந்தி எமது மக்களின் உரிமைக்காக போராடியிருந்தவர்கள் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

ஆனாலும் ஆயுதப்போராட்டம் என்பது புலித்தலைமையின் ஏக பிரதிநித்துவம் என்ற தனியியக்க கொள்கையினால் தடம் புரண்டு திசை மாறிப்போயிருந்ததை நீங்கள் அறிந்திருக்க வேண்டும்.

புலித் தலைவர் பிரபாகரன் தான் மட்டும் தலைவர் என்று கருதி எமது விடுதலைக்காக போராட புறப்பட்ட அனைத்து தமிழ் தலைவர்களையும் கொன்றொழித்த கொடுமைகளை நீங்கள் தெரிந்திருக்க வேண்டும்.

ஆயுதப்போராட்டத்தில் ஈடு பட்டிருந்த தலைவர்கள் முதற்கொண்டு, ஐனநாயக வழியில் போராடிக்கொண்டிருந்த அனைத்து தமிழ் தலைவர்களையும் புலித்தலைவர் பிரபாகரனே கொன்றொழித்து வந்திருக்கின்றார்.

இது வரை கொல்லப்பட்ட எந்தவொரு தமிழ் தலைவர்களையும் புலித் தலைமையே கொன்றொழித்திருக்கின்றது. எந்தவொரு தமிழ் தலைவர்களையும் அரச படையினர் கொன்றொழித்த வரலாறு கிடையாது.

தமிழ் பேசும் மக்களின் உரிமைக்காக போராட புறப்பட்ட தமிழ் தலைவர்களை மட்டுமன்றி, அயிரக்கணக்கான சக இயக்க போராளிகளை மட்டுமன்றி, தம்மோடு முரண்பட்டு நின்று ஏன் என்று கேள்வி எழுப்பிய உங்களது சொந்த இயக்கத்தின் உறுப்பினர்கள் பலரையும் புலித் தலைமையே இறுதிவரைக்கும் கொன்றொழித்து வந்திருக்கின்றது.

இவ்வாறு சொந்த இனத்தையே கருவறுத்து வருகின்ற புலித் தலைமை தமிழ் பேசும் மக்களுக்காகவே தாம் யுத்தம் நடத்துவதாக கூறி வருவதை நீங்கள் நம்புகின்றீர்களா என்று நான் உங்களிடம் கேட்கின்றேன்.

தமிழ் பேசும் மக்களுக்கான உரிமைப்போராட்டம் என்பது தமிழர்களை தமிழர்களே கொன்றொழிக்கும் வன்முறைக்களமாக எமது போராட்டம் திசை வழி மாறி சென்றிருந்த போதுதான் இலங்கை இந்திய ஒப்பந்தம் என்ற பொன்னான வாய்ப்பு எமக்கு ஏற்பட்டிருந்தது.

இலங்கை இந்திய ஒப்பந்தம் வரைக்கும் உங்களது புலித்தலைமை 652 உறுப்பினர்களை மட்டுமே யுத்த களத்தில் பலிகொடுத்திருந்தது, ஆனாலும் இலங்கை இந்திய ஒப்பந்தம் என்ற பொன்னான வாய்ப்பை பயன்படுத்த தவறிய உங்களது புலித்தலைமை இந்திய அமைதிப்படையோடு யுத்தத்தை தொடங்கியிருந்தது.

இதனால் யுத்த களத்தில் பலி கொடுக்கப்பட்ட உங்களைப்போன்ற புலி உறுப்பினர்களின் எண்ணிக்கை கடந்த 2008 நவம்பர் வரைக்கும் 22 ஆயிரத்திற்கும் அதிகமாக அதிகரித்து சென்றிருக்கின்றது, இந்த தொகை இன்று இன்னும் பல ஆயிரங்களை தொட்டு நிற்கின்றது.

புலித் தலைமையின் அடங்காத யுத்த வெறியினால் இதுவரை பலிகொடுக்கப்பட்ட உங்களது சக உறுப்பினர்களை நான் புலிகளாக ஒரு போதும் கருதியதில்லை. அவர்கள் அனைவருமே எமது தேசத்தின் புதல்வர்கள். அவர்களையும் எனது பிள்ளைகளாகவே நான் கருதுகின்றேன்.

அன்று இலங்கை இந்திய ஒப்பந்தத்தை ஏற்று அதை புலித் தலைமை நடை முறைப்படுத்தியிருந்தால் பலிகொடுக்கப்பட்ட புலி உறுப்பினர்களின் எண்ணிக்கை 652 ஆகவே இருந்திருக்கும். கொல்லப்பட்ட அப்பாவி பொது மக்களின் எண்ணிக்கையும் குறைவாகவே இருந்திருக்கும். ஆகவே இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்கு பின்னரான அழிவுகளுக்கும், இழப்புகளுக்கும் காரணமானவர்கள் உங்களது புலித் தலைமையே தான் என்பதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள்.

பிரேமதாசா - புலிகள் பேச்சு வார்த்தை, சந்திரிகா - புலிகள் பேச்சு வார்த்தை, ரணில் விக்கிரமசிங்க - புலிகள் புரிந்துணர்வு ஒப்பந்தம் என்று தொடர்ந்து இறுதியாக ஐனாதிபதி மகிந்த ராஜபக்ஷ் - புலிகள் பேச்சு வார்த்தை என்று பல்வேறு சந்தர்ப்பங்களும் கனிந்து வந்திருந்ததை நீங்கள் அறிவீர்கள்.

கிடைத்த சந்தர்ப்பங்களை உங்களது புலித்தலைமை சரிவரப் பயன்படுத்தியிருக்கவில்லை என்பது தான் எனது ஆதங்கம், அவ்வாறு பயன்படுத்தியிருந்தால் இன்று உங்களது உறவுகளான எமது மக்கள் பேரவலங்களைச் சந்திக்க வேண்டிய துயரம் நடந்திருக்காது. உங்களோடு கூட இருந்த உங்களது சக உறுப்பினர்களை நீங்கள் பறி கொடுத்திருக்க வேண்டிய துயரங்கள் நிகழ்ந்திருக்காது.

இழந்த நிலங்களை தாம் மறுபடியும் மீட்போம் என்று புலித் தலைமை ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் கூறி வந்திருக்கிறது, யாரை நம்பி புலித் தலைமை இந்த வாக்குறுதிகளை எமது மக்களுக்கு கொடுத்து வந்திருக்கின்றது என்பதை நீங்கள் உணர வேண்டும்.

கைவிட்டு ஓடிய நிலங்களை மறுபடியும் மீட்பதற்கு புலிகளின் உறுப்பினர்களாகிய உங்களையே புலித் தலைமை களத்தில் இறக்கி பலிகொடுத்து வருகின்றது. ஆனால் புலித் தலைவர்களும் சரி, அவர்களுக்கு சுயலாப நோக்கில் ஆதரவளிக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் சரி தங்களது பிள்ளைகயை யுத்த களத்திற்கு அனுப்பியிருந்தார்களா என்பதை நீங்கள் சிந்திக்க வேண்டும்.

தங்களது பிள்ளைகளை மட்டும் பொத்தி வளர்த்துக் கொண்டு, வெளிநாடுகளில் உயர் கல்வி கற்பதற்கு அனுப்பி வைத்து விட்டு ஊரார் விட்டுப் பிள்ளைகளான உங்களை மட்டும் யுத்த களத்திற்கு அனுப்பி புலித்தலைமை பலி கொடுத்து வருகின்றது.

இது போலவே புலிகளின் தயவில் சுயலாப அரசியல் நடத்தி வரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரும் தங்களது பிள்ளகளை மட்டும் பாதுகாப்பாக வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்து விட்டு எமது தாயக தேசமெங்கும் யுத்த சூழலை தூண்டிவிட்டு அப்பாவி மக்களான அடுத்தவன் பிள்ளைகளை மட்டும் யுத்த களத்திற்கு பலி கொடுத்து வருகின்றார்கள்.

இதனால் கண்ட மிச்சம் என்ன என்பதை நீங்கள் இன்று உணர்ந்திருப்பீர்கள். அழிவுகளும், அவலங்களும் மட்டும் தான் எமக்கு மிஞ்சியிருக்கின்றன. எமது சொந்த மக்களை பலி கொடுக்கும் துயரங்களே இங்கு மிஞ்சியிருக்கின்றன. கொன்று பலியாக்கப்பட்ட எமது தேசத்தின் இளைஞர் யுவதிகளின் சமாதிகளே இங்கு எஞ்சியிருக்கின்றன.

போராட்டம் என்பது நாங்களும் போராடினோம் என்ற வீராவேசத்தை விளம்பரப்படுத்துவதற்காகவோ அன்றி, சுயலாப நோக்கங்களுக்காகவே அல்ல. அடைய வேண்டிய உரிமைகளை அடைவதற்காகவே போராட்டம் நடத்தப்பட வேண்டும். இது வரை புலித் தலைமை பெற்றுத் தருவதாக கூறிய விடுதலையை உங்களுக்கு பெற்றுத் தந்தார்களா என்று நான் உங்களிடம் கேட்கிறேன்.

இழந்தவற்றை பெற்றுத்தருவோம் என்று வாக்குறுதி கொடுத்த புலித் தலைமை இருந்ததையும் இழந்து போய் எமது தமிழ் சமூகத்தையே நடுத் தெருவிற்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கின்றது. இருந்த நிலங்களையும் இழந்து, வளங்களையும் இழந்து, பலங்களையும் இழந்து, எமது சமூகத்தின் பெருமைகளையே அழித்து சிதைத்திருக்கின்றது புலித் தலைமை.

இந்த அழிவுகளுக்கும் அவலங்களுக்கும் அடுத்தவர்கள் தான் காரணம் என்று புலித் தலைமை பொய்யான பரப்புரைகளை கட்டவிழ்த்து வருகின்றது. உனது கால்களில் குத்திய முட்கள் ஒவ்வொன்றும் யாரோ தூவி விட்டவைகள் அல்ல, அது என்றோ ஒரு நாள் உனக்கு நீயே தூவி விட்டவைகள். இவ்வாறு தமிழில் ஒரு அறிவுரை உள்ளதாக நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

இது போலவே புலித் தலைமை இன்று இருந்த நிலங்களையும் கைவிட்டு ஓடிக் கொண்டிருப்பதற்கு காரணம் புலித் தலைமை தாமாகவே தமது வரலாறெங்கும் விட்ட தவறுகள் தான் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

பண்டைக் காலத்தில் யுத்தம் புரியும் அரசர்கள் தமக்கு எதிராக வரும் வாள் வீச்சுக்களையும், வேல் வீச்சுக்களையும் தாம் வைத்திருக்கும் கேடயங்களால் தடுத்து நிறுத்துவார்கள், ஆனால் புலித் தலைமை இன்று தம்மை நோக்கி நடத்தப்படுகின்ற தாக்குதல்களை தடுத்து நிறுத்துவதற்கு அப்பாவி மக்களின் உயிர்களையே கேடயமாக பயன்படுத்தி வருகின்றது.

ஆகவே தான் இன்று தமது கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் எமது மக்களான உங்களது உறவுகளை புலித் தலைமை சுதந்திரமாக வெளியேற விடாமல் அவர்களை தம்மை பாதுகாப்பதற்கான மனித கேடயங்களாக தடுத்து வைத்திருக்கின்றது.

மக்களை காப்போம், மண்ணை மீட்போம் என்று வாக்குறுதி கொடுத்திருந்த புலித் தலைமை தங்களது அடங்காத யுத்த வெறிக்காக சாதாரண உறுப்பினர்களாகிய உங்களையே களப் பலி கொடுத்து வருகின்றது.

அமைதிப் பேச்சின் ஊடாக அர்த்தமுள்ள அரசியல் தீர்வையே புலித் தலைமை பெற்றிருக்க வேண்டும், ஆனால் அதற்கு மாறாக யுத்தத்தின் மூலம் தாம் வெல்ல முடியும் என்று நம்பிக்கை கொடுத்திருந்த புலித் தலைமையினால் எந்த இலக்கையும் அடைய முடியாமல் அழிவுகளை மட்டும் எமது மக்களுக்கு உருவாக்க முடிந்திருக்கிறது.

இது எம்மிடையே தீராத மனத்துயங்களை உருவாக்கியிருக்கின்றது, நான் இன்னொரு அரசியல் சார்ந்தவன் என்பதற்காக புலித் தலைமையை பிழை என்று கூற வரவில்லை, போட்டி அரசியலுக்காக இந்த கருத்துக்களை நான் கூற வரவில்லை, அவலப்படுகின்ற எமது மக்களின் நலன்களில் இருந்தும், அநியாயமாக பலி கொள்ளப்படுகின்ற புலிகளின் உறுப்பினர்களாகிய உங்களது நலன்களில் இருந்தும்தான் நான் இந்த கருத்துக்களை கூறுகின்றேன்.

என் அன்புக்கும் நேசத்திற்கும் உரிய இளையோர்களே!உங்கள் விருப்பங்களுக்குமாறாக நீங்கள் பாலாத்காரமாக புலிகள் அமைப்போடு இணைக்கப்பட்டிருக்கலாம், இன்னும் உங்களில் சிலர் நீங்களாகவே புலிகள் இயக்கத்தின் சுயலாப அரசியலைச் சரியாக புரிந்து கொள்ளாமல் அவர்களோடு விரும்பியும் இணைந்திருக்கலாம், இதை என்னால் உணர முடிகின்றது.

உங்களது தியாகங்களை நாம் ஒரு போதும் கொச்சைப்படுத்த விரும்பியவர்களல்ல, உங்களது அர்ப்பண உணர்வுகளை நான் வரவேற்கின்றேன். ஆனாலும் நீங்கள் புரிகின்ற தியாகங்கள் எமது மக்களுக்கு பயன்பட வேண்டும் என்பதையே நான் விரும்புகின்றேன். ஆனால் இருந்த உரிமைகளையும் பறி கொடுப்பதற்காகவே புலித் தலைமை உங்களை பலி கொடுத்து வருவதுடன், வெறும் அழிவுகளுக்காகவே புலி உறுப்பினர்களாகிய உங்களது தியாகங்களையும் பயன்படுத்தி வருகின்றது.

ஆகவே நான் உங்களிடம் கோருவது ஒன்றை மட்டும்தான், உங்களை தற்கொலை குண்டு தாரிகளாக புலித் தலைமை என் மீது ஏவி விட்டிருந்தாலும், உங்களது கைகளில் கொலைக் கருவிளைத் திணித்து எங்கள் தோழர்களை உங்கள் தலைமை கொன்றொழிக்குமாறு உங்களை தூண்டி விட்டிருந்தாலும், எமது மக்களின் நலன்களை கருத்தில் கொண்டு உங்களையும் எனது பிள்ளைகளாகவே நான் கருதுகின்றேன், எமது தேசத்தின் புதல்வர்களாகவே கருதுகின்றேன். எமது மக்களின் பிள்ளைகளாகவே நான் உங்களை கருதுகின்றேன்.

நீங்கள் தமிழ் பேசும் மக்களின் நிம்மதியான வாழ்வை விரும்புபவர்களாக இருந்தால், உங்களது உறவுகள் ஒரு சமாதான தேசத்தில் வாழ வேண்டும் என நீங்கள் விரும்பினால், வெறும் அழிவுகளை மட்டும் தந்து கொண்டிருக்கும் உங்கள் ஆயுதங்களை கையளித்து அமைதி வழிக்கு திரும்மாறு நேசக்கரம் நீட்டி உங்களை அழைக்கின்றேன்.

சமாதான தேசத்தையே நாம் விரும்புகின்றோம், அமைதியையும், அரசியலுரிமையுடன் கூடிய சுதந்திரத்தையும் நாம் விரும்புகின்றோம். எமது மக்களுக்கு உயிர் வாழும் உரிமை வேண்டும்.

சுதந்திரமாக எமது மக்கள் எமது தேசமெங்கும் நடமாட வேண்டும், சுதந்திரமாக எதையும் பேச வேண்டும், சுதந்திரமாக எமது மக்கள் தொழில் புரிய வேண்டும்.


பிரியமுடன்

தோழர் டக்ளஸ் தேவானந்தா
செயலாளர் நாயகம்
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி)

Tuesday, April 7, 2009

லசந்தவுக்கு உலக பத்திரிகைச் சுதந்திர விருது

ஐக்கிய நாடுகள் சபையின் யுனெஸ்கோ அமைப்பினால் 2009 ஆம் ஆண்டுக்கான உலக பத்திரிகைச் சுதந்திர விருதை சண்டேலீடர் பத்திரிகையாசிரியர் லசந்த விக்ரமதுங்கவுக்கு வழங்கவுள்ளதாக யுனெஸ்கோவின் பணிப்பாளர் கொய்சிரோ மற்சூறா அறிவித்துள்ளார்.

ஸ்ரீலங்காவில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள போரியலுக்கெதிராக நடுநிலை நின்று செயற்பட்ட லசந்த விக்ரமதுங்க பரஸ்பர புரிந்துணர்வு, இணக்கப்பாடு, கருத்துவெளிப்பாட்டுச் சுதந்திரம் ஆகிய முக்கிய பண்புகளை தனது ஊடகவியலில் கடைப்பிடித்ததற்காக இவ்விருது அவருக்குப் பொருத்தமானது என்றும் பணிப்பாளர் கொய்சிரோ மற்சூறா தெரிவித்துள்ளார்.

14 பேரைக் கொண்ட சர்வதேச யூரிகள் சபையால் லசந்தவின் பெயர் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டதாகவும், தனக்கு ஏற்படவுள்ள ஆபத்தை உணர்ந்தும் தனது மரணம் வரை ஜதார்த்தத்தைப் பேசியதால் இவ்விருதுக்கான தெரிவுக்கு லசந்தவின் பெயர் ஏற்கப்பட்டதாக தேர்வாளர் குழுவின் தலைவர் ஜோ தொலோலோ தெரிவித்தார்.

சண்டேலீடர் பத்திரிகைக்காக லசந்தவினால் எழுதப்பட்ட ஆசிரிய தலையங்கம், அவர் கொல்லப்பட்ட ஜனவரி 8 ஆம் திகதிக்குப் பின்னரான மூன்று நாட்களின் பின்னரே ஜனவரி 11 ஆம் திகதியே பிரசுரமானதாகவும் தேர்வுக்குழுத் தலைவர் தெரிவித்தார்.

உலக பத்திரிகைச் சுதந்திர தினமான 2009.05.03 ஆம் திகதி டோகா - கட்டாரில் வைத்து இவ்விருது வழங்கப்படவுள்ளதாக யுனெஸ்கோ தெரிவித்துள்ளது.

Monday, April 6, 2009

புதுக்குடியிருப்பு பூரணமாக ஸ்ரீலங்கா படை வசம்

வன்னி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ஸ்ரீலங்கா படையினர் தமிழீழ விடுதலைப் புலிகளின் இறுதிக் கோட்டையாகக் கருதப்பட்ட புதுக்குடியிருப்புப் பகுதியை நேற்று (05.04.2009) பூரணமாக தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக ஸ்ரீலங்கா அரச ஊடகங்கள் தெரிவித்தன.

இப் படை நடவடிக்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய படைத் தளபதிகளான தீபன், நாகேஷ், விதுஷா, துர்க்கா, கமலினி உட்பட 300 பேருக்கும் அதிகமான விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள் என படை அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

புதுக்குடியிருப்பு படை நடவடிக்கையில் 58 ஆம் படைப் பிரிவினர் வடக்கு எல்லைப் பக்கமாகவும் 53 ஆம் படைப் பிரிவினர் தெற்கு எல்லைப் பக்கமாகவும் தாக்குதலைத் தொடுத்து முன்னேறிய வேளை, விடுதலைப் புலிகள் 58 ஆம் படைப் பிரிவினரால் சுற்றிவளைக்கப்பட்டு 150 பேருக்கும் அதிகமான விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர், இத் தாக்குதலிலேயே தளபதி தீபன், மட்டக்களப்பு படைத் தளபதியாக இருந்த நாகேஷ், பெண் படைத் தளபதிகளான விதுஷா, துர்க்கா மற்றும் கமலினி போன்றோரின் சடலங்கள் ஸ்ரீலங்கா படையிரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக அரச ஊடக செய்திகள் குறிப்பிட்டுள்ளன.


அரச ஊடக வீடியோ பதிவு : 06.04.2009


விடுதலைப் புலிகளின் தளபதி தீபன்

விடுதலைப் புலிகளின் தளபதி விதுஷா

வன்னியின் இன்றைய நிலை - வரைபடம்

வன்னியின் இன்றைய நிலையை வரைபடத்தின் மூலம் ஸ்ரீலங்கா பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ளது. <--- அழுத்தவும்

Sunday, April 5, 2009

பொலிஸ் அத்தியட்சகர் ஜமால்தீன் சுட்டுக் கொலை

மட்டக்களப்பு கல்லடி பொலிஸ் பயிற்சிக் கல்லூரின் பணிப்பாளரும், பொலிஸ் அத்தியட்சகருமான ஜனாப் எச்.எல். ஜமால்தீன் கல்முனை மருதமுனை பெரிய பள்ளிவாசலில் இன்று (05.04.2009) இரவு 7.30மணியளவில் தொழுகையை முடித்து விட்டு வெளியே சென்ற போது துப்பாக்கிதாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகவும், சடலம் தற்போது கல்முனை அஷ்ரப் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் றஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு ஸ்ரீலங்கா காவல்துறை பயிற்சி கல்லூரியின் பணிப்பாளரான காவல்துறை அத்தியட்சகர் ஒருவர் இன்று இரவு 7:30 நிமிடமளவில் மருதமுனை பகுதியில் வைத்து எம்மால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளாரென தமிழீழ விடுதலைப் புலிகளால் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் இடம்பெயர்ந்தோருக்கான விஷேட மாநாடு

வவுனியா நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களின் வாழ்வில் கவனம் செலுத்திய சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா 26 கோரிக்கைகள் அடங்கிய மகஜரை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் அண்மையில் சமர்ப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இவ் 26 கோரிக்கைகளை ஆராயும் முகமாக ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷவின் பணிப்பின் பேரில் இன்றைய தினம்
(05.04.2009) விஷேட உயர்மட்ட மாநாடொன்று வட மாகாண ஆளுனரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றுள்ளது.

இந்த விஷேட மாநாட்டில் வட மாகாண ஆளுனர் டிக்ஷன் தெல பண்டார, சமூகசேவைகள் அமைச்சரும் வடமாகாண விஷேட செயலணித் தலைவருமான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அனர்த்த நிவாரண மீள்குடியேற்ற அமைச்சர் ரீஷாத் பதியுதீன், வவுனியா அரசாங்க அதிபர் திருமதி பி.எம்.எஸ்.சாள்ஸ், வன்னி மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் ஜயசூரிய, வவுனியா மாவட்ட சிவில் ஒருங்கிணைப்பாளர் பிரிகேடியர் எல்.சி.பெரேரா, வவுனியா மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நந்தன குணசேகர மற்றும் வட மாகாண பிரதம செயலாளர் ரங்கராஜன் உட்பட பல்வேறு உயர்மட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

¤ வவுனியா மாவட்ட பாடசாலைகளில் தங்க வைக்கப்பட்டுள்ள இடம்பெயர்ந்த மக்களை ஒன்றரை மாதகாலத்தில் நிவாரணக் கிராமங்களில் குடியமர்த்துவதின் மூலம் பாடசாலைகளில் மாணவர்கள் கல்வியைத் தொடர நடவடிக்கை எடுத்தல்.

¤ இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள நலன்புரி நிலையங்களிலும் நிவாரணக் கிராமங்களிலும் அவர்களது உறவினர்கள் சந்திப்பதற்கான ஏற்பாடுகளை மெற்கொள்ளல்.

¤ இம் மக்களின் குடி நீர் மற்றும் சுகாதார வசதிகளை மேம்படுத்துதல்.

¤ இந் நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களின் தேவைகளை அவ்வப்போது இனங்கண்டு அவற்றினை உடனுக்குடன் நிவர்த்தி செய்தல்.

இம் விஷேட மாநாட்டில் இவ்வாறான முக்கிய தேவைகளுக்கு உடன் தீர்வு காணப்பட்டதுடன் இவற்றை உடன் நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுப்பதென தீர்மானிக்கப்பட்டது.

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்துள்ள மக்கள் சார்பில் ஜனாதிபதிக்கு நன்றி

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியா நலன்புரி நிலையங்களில் தற்காலிகமாகத் தங்க வைக்கப்பட்டிருக்கும் மக்களைச் சந்தித்து அவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில் ஈடுபாடு காட்டி வரும் ஈபிடிபி செயலாளர் நாயகமும், சமூக சேவைகள் அமைச்சரும், மற்றும் வடக்கிலங்கை விசேட செயலணித் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா இவ் நலன்புரி நிலையங்களில் முன்னெடுக்கப்பட வேண்டிய முக்கிய நடவடிக்கைகள் தொடர்பாக 26 கோரிக்கைகளை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்துள்ளார்.

இக் கோரிக்கைகள் தொடர்பாக ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷவுக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்குமான கலந்துரையாடலுடன் கூடிய மாநாடு நாளை இடம்பெறவுள்ளது.

இந்த மாநாட்டில் சமூகநலத்துறை அமைச்சரும் வடக்கிலங்கை விசேட செயலணித் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா, மீள்குடியேற்ற அமைச்சர் ரிஷாத் பதியுதீன், வட மாகாண ஆளுனர், வவுனியா அரசாங்க அதிபர், பாதுகாப்பு அமைச்சின் வவுனியாப்பகுதி ஒருங்கிணைப்பாளர், தேச நிர்மாண அமைச்சின் வவுனியா இணைப்பாளர் மற்றும் பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பங்குபற்றுவார்களென எதிர்பார்க்கப்படுகின்றது.

நிவாரணக் கிராமங்களுக்கு தொலைபேசி வசதி செய்து கொடுக்க வேண்டுமென ஈபிடிபி விடுத்த கோரிக்கைக்கு செவிமடுத்து இவ் நிவாரணக் கிராமங்களுக்கு தொலைபேசி வசதி செய்து கொடுத்த ஜனாதிபதிக்கு இடம்பெயர்ந்த மக்கள் சார்பில் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இவ்வாறே மற்றைய கோரிக்கைகளையும் ஜனாதிபதி விரைவில் செயற்படுத்துவாரென அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.

Saturday, April 4, 2009

மக்களை நேசிக்கும் மக்கள் தலைவன்

வன்னி மக்களைக் கவர்ந்த மக்கள் தலைவன்