www.jananayakam.net.ms or www.jananayakan.tk, Email: jananayakam.gmail.com ....

Sunday, October 12, 2008

ஈழத்தமிழர்கள் சார்பாக தமிழக தலைவர்களுக்கு ஓர் பகிரங்க மடல்!

தமிழக மண்ணுக்கும் தமிழக அரசியல் தலைவர்களுக்கும் வணக்கம்!!

தமிழகம் ஈழத்தமிழர்களின் வேரடி மண்!
ஈழத்தமிழர்களாகிய நாம் செழித்து வளர எங்கள்
வேருக்கு நீர் வார்த்தது தமிழகம்!

இந்த நன்றியுணர்வோடு நான் உங்களுடன் மனம் திறந்து
சில வார்த்தைகள் பேச விரும்புகின்றேன்.
காலத்தின் கட்டளையை ஏற்று மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற எங்கள் கொள்கை வழி நின்று எமது மக்கள் சார்பாக இலங்கை மத்திய அரசில் நான் அமைச்சராக பங்கெடுத்திருந்தாலும் ஈழத்தமிழர்களின் ஐனநாயகப்பிரதிநிதியாகவே நான் உங்களுடன் பேச விரும்புகின்றேன்.

ஈழத்தமிழர்களை காப்பாற்றுமாறு கோரி நீங்கள் தமிழகமெங்கும் எழுச்சிப்போராட்டங்களில் ஈடுபட்டிருப்பதில் எமக்கு மட்டற்ற மகிழ்ச்சி! இது குறித்து எமது மக்களின் சார்பாக நான் நன்றி தெரிவிக்கின்றேன்.

ஆயிரம் பூக்கள் மலரட்டும் என்ற பன்முகச்சிந்தனையோடு தமிழகமெங்கும் பல்வேறு கட்சிகளும் கூட்டாக இணைந்து போராட்டங்களை நடத்தும் போது ஈழத்தமிழர்களுக்கு கிடைத்திருக்காத வாய்ப்பு தமிழக மக்களுக்கு கிடைத்திருப்தையிட்டு ஒரு புறம் மகிழ்ச்சியும் மறு புறம் வேதனையும் பிறக்கின்றது.

உங்களுக்கு தெரியும்…. ஈழத்தமிழர்களின் உரிமைக்காக நாமும் அன்று பல்வேறு அமைப்புகளாக சுதந்திரமாகவும் கூட்டாகவும் இணைந்து போராடியிருந்தவர்கள். அதற்கு ஆதரவு தேடி நாம் தமிழகம் வந்த போது எம்மை நேசக்கரம் நீட்டி எமக்கு களம் கொடுத்தீர்கள், பலம் கொடுத்தீர்கள்.
ஆனாலும் பல்வேறு விடுதலை அமைப்புகளும் இருக்க வேண்டும் என்ற எமது மக்களின் ஐனநாயக விருப்பங்களுக்கு மாறாக புலித்தலைமை சக விடுதலை அமைப்புகள் அனைத்தையும் அழிக்க முற்பட்டனர். இதனால் ஆயிரக்கணக்கான சக இயக்க போராளிகள் புலித்தலைமையால் கொல்லப்பட்டார்கள். இது போன்ற தனித்தலைமை வெறிபிடித்த ஐனநாயக மறுப்புகளுக்கு மத்தியில்தான் எமது மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்..

எமது மக்களின் பிரச்சினைகள் குறித்து பேச வேண்டிய ஈழத்தமிழ் தலைவர்கள் அனைவரும் புலித்தலைமையினால் கொன்றொழிக்கப்பட்டு விட்ட நிலையில் அவர்கள் விட்டுச்சென்ற இடைவெளியில் நின்றுதான் நான் உங்களோடு பேசுகின்றேன். ஈழத்தமிழர்களுக்கு இருக்க வேண்டிய முதல் உரிமை பல கட்சி ஐனநாயக உரிமை! தமிழகத்தலைவர்கள் போல் பல கட்சி தலைவர்களும் ஒன்று திரண்டு குரல் கொடுக்க முடிந்த ஐனநாயக சூழல் தமிழக மக்களுக்கு கிடைத்திருப்பது போல் தமக்கு மட்டும் கிடைத்திருக்கவில்லை என்பதே ஈழத்தமிழர்களுக்கு வேதனை தரும் விடயம்.

ஆனாலும், நாம் இன்னமும் மக்கள் மத்தியில்தான் வாழ்ந்து வருகின்றோம். மரணங்களுக்குள்ளேயே வாழ்ந்து வருகின்றோம். எமது மக்களின் கருத்துக்களை நாம் சரி வர அறிந்து அவர்கள் எதை விரும்புகிறார்கள் என்பதை நேரில் சந்தித்து அறிந்து வருகின்றோம்.

இந்திய இலங்கை ஒப்பந்தம் ஈழத்தமிழர்களுக்கு கிடைத்திருந்த பொன்னான வாய்ப்பு. அதை ஏற்று நடைமுறைப்படுத்தியிருந்தால் இன்று எமது மக்கள் நடைமுறையில் சுயநிர்ணய உரிமையை அனுபவித்திருப்பார்கள். ஆனால் புலித்தலைமை அதை ஏற்றிருக்கவில்லை. மாறாக இந்திய அமைதிப்படையோடு யுத்தம் நடத்தினார்கள். அன்னை இந்திராவின் புதல்வாரன முன்னாள் இந்திய பிரதமர் ரஐPவ் காந்தியை கொன்றொழித்தார்கள். இதனால் ஈழத்தமிழர்களுக்கும் தமிழக மக்களுக்கும் இடையிலான தொப்புள்க்கொடி உறவை அறுத்துப்போட்டார்கள். எமது நேச நடான இந்தியாவின் பகமையை வளர்த்துக்கொண்டார்கள்.

இந்த தீராத வடுக்களுக்கு மத்தியிலும் அறுந்து போன எமது தொப்புள்க்கொடி உறவை
தமிழக தலைவர்களாகிய நீங்கள் உங்கள் உணர்வுகளால் மறுபடியும் ஒட்ட வைத்திருப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன்.

இந்திய இலங்கை ஒப்பந்தம் ஒரு புறமிருக்க, பிரேமதாசா - புலிகள் பேச்சு வார்த்தை, சந்திரிகா - புலிகள் பேச்சு வார்த்தை, ரணில் விக்கரமசிங்க - புலிகள் பேச்சு வார்த்தை, மகிந்த ராஐபக்ச - புலிகள் பேச்சு வார்த்தை என்று பல்வேறு சந்தர்ப்பங்களிலும் எமது மக்கள் சமாதானத்தையும் அரசியல் தீர்வையும் விரும்பி காத்திருந்தார்கள். ஆனால் புலித்தலைமை அர்த்தமற்ற நிபந்தனைகளை விதித்து அமைதிப்பேச்சுக்களை முறித்துக்கொண்டு திரும்பி வந்தார்கள்.

அரசியல் தீர்விற்கான எந்த கோரிக்கைகளையும் புலித்தலைமை இலங்கை அரசாங்கத்திடம் முன்வைத்திருக்கவில்லை. எமது மக்கள் ஏமாந்தார்கள். ஆனால் அதற்கு எதிராக ஏன் என்று புலித்தலைமையை பார்த்து கேள்வி கேட்பதற்கு எமது மக்களுக்கு சுதந்திரம் இல்லை.
இந்த சந்தர்ப்பங்களின் போது புலிகளை நோக்கி அரசியல் தீர்விற்கு உடன் படுங்கள் என்று தமிழகத்தில் போராட்டங்கள் நடத்தப்பட்டிருந்தால் நான் இன்னும் பல மடங்கு மகிழ்ந்திருப்பேன். இன்று நீங்கள் போராட்டம் நடத்த வேண்டிய தேவை இருந்திருக்காது.

2006 செப்பரம்பர் 9 இல் புலிகள் யாழ் குடாநாடு நோக்கி பெரும் படையெடுப்பை நடத்தியிருந்தார்கள். அதில் நூற்றுக்கணக்கான இளைஞர் யுவதிகளை அழிவு யுத்தத்திற்கு பலி கொடுத்துவிட்டு திரும்பி விட்டார்கள். இதனால் யாழ் குடாநாட்டிற்கான பிரதான வினியோகப்பாதையான ஏ 9 வீதியை மூட வேண்டிய சூழலை புலித்தலைமையே உருவாக்கிக்கொண்டது. கடல் வழியாக உணவு மருந்து மற்றும் அத்தியாவசியப்பொருட்கள் என்பன யாழ் குடாநாட்டு மக்களுக்காக அரசாங்கத்தால் அனுப்பப்பட்டது. அந்த உணவுக்கப்பல்கள் மீதும் புலித்தலைமை தாக்குதல்களை நடத்தினார்கள்.

இது எதற்றாக என்று நீங்கள் உணர்ந்திருப்பீர்கள்.. எமது மக்கள் பட்டினிச்சாவில் நலிய வேண்டும், அதை வைத்து மக்களுக்கு உணவில்லை என்று கூறி தங்களது அழிவு யுத்தத்திற்கு ஆட் திரட்டுவதுதான் புலித்தலைமையின் நோக்கம்.

புலித்தலைமையினர் அரசுடன் பேச்சு நடத்த யப்பான் போனார்கள், நோர்வோ போனார்கள், சுவிஸ் போனார்கள். அர்த்தமற்ற நிபந்தனைகளை விதித்து அமைதிப்பேச்சுக்களை தாமாகவே முறித்துக்கொண்டு திரும்பினார்கள்.

அரசியல் தீர்வை முன்வையுங்கள் என்று பேச்சு வார்த்தை மேசையில் புலித்தலைமை இலங்கை அரசிடம் கோரியிருந்தால் இன்று எமது மக்கள் அழிவு யுத்தத்தை சந்தித்திருக்க வேண்டிய துயரம் நிகழ்ந்திருக்காது. அதன் பின்னர் கிழக்கு மகாணத்தில் மாவிலாறு அணைக்கட்டை புலித்தலைமை மூடியதால் பாரிய மோதல் வெடித்தது. கிழக்கு மாகாணத்தை முற்றாக இழந்து புலிகள் ஓடி விட்டார்கள்.

இன்று வடக்கு நோக்கிய படை நகர்வு நடந்து கொண்டிருக்கின்றது. புலித்தலைமையின் அழிவு யுத்தத்திற்கு அஞ்சி எமது மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி நகர முடியாமல் தவிக்கின்றார்கள். பொது மக்களை பாதுகாப்பான இடம் நோக்கி வருமாறு அரசாங்கம் அறிவித்திருக்கின்றது. ஆனால் புலித்தலைமையோ வழமைபோல் மக்களை மனிதக்கேடயங்களாக தமது அழிவு யுத்தத்திற்கு பயன்படுத்தி வருகின்றார்கள். பாதுகாப்பான இடம் நோக்கி எமது மக்கள் நகர்வதை புலித்தலைமை தடுத்து வைத்திருக்கின்றது.

புலித்தலைமையின் பலாத்காரப்பிடிக்குள் இருந்து பாதுகாப்பான இடம் நோக்கி சொல்ல முடியாமல் தவிக்கும் எமது மக்களை, அதிலிருந்து மீட்பதற்காகவும் நீங்கள் குரல் எழுப்ப வேண்டும் என்று உங்களிடம் மனிதாபிமான வேண்டுகோள் விடுக்கின்றேன்.


புலித்தலைமையினர் அரசியல் தீர்விற்கான அனைத்து சந்தர்ப்பங்களையும் தவறவிட்டு விட்டனர். அழிவு யுத்தத்தை நடத்தி அதில் எமது மக்கள் கொல்லப்பட வேண்டும் என்பதையே புலித்தலைமை விரும்புகின்றது. அதை வைத்து ஒப்பாரி வைப்பதும் ஆதரவு தேடுவதும்தான் அவர்களது நோக்கம். புலித்தலைமையின் இந்த விசித்திரமானதும் வேதனையானதுமான சுயலாப அரசியலை எமது மக்கள் வெகுவாகவே புரிந்திருக்கின்றார்கள்.

ஈழத்தமிழர்கள் இந்த அழிவு யுத்தத்தை விரும்பவில்லை. அவர்கள் ஜனநாயகவழியையே விரும்புகிறார்கள். அரசியல் தீர்வையும் சமாதானத்தையும் விரும்புகின்றார்கள். ஆனால் புலித்தலைமையோ அழிவு யுத்தத்தை விரும்புகிறது.

ஆகவே ஈழத்தமிழர்களின் பிரச்சினை வேறு! புலித்தலைமையின் பிரச்சினை வேறு என்பதை நீங்கள் புரிந்திருப்பீர்கள். அழிவு யுத்தத்தில் இருந்து ஈழத்தமிழர்களை காப்பதற்காக நீங்கள் தமிழகத்தில் நடத்தும் போராட்டங்களை நான் வரவேற்கின்றேன். ஆனாலும் நீங்கள் நடத்தும் போராட்டங்கள் புலித்தலைமையின் அழிவு யுத்தத்திற்கு பலம் சேர்பதற்காக அமைந்து விடக்கூடாது என்பதுதான் எமதும் எமது மக்களினதும் விருப்பங்களாகும்.

இந்த அழிவு யுத்தத்திற்கு பிரதான காரணமாக இருப்பவர்கள் புலித்தலைமைதான் என்பதை நீங்கள் புரிந்திருப்பீர்கள். புலித்தலைமை ஐனநாயக வழிக்கு வருவார்கள் என்;றோ, அழிவு யுத்தத்தை கைவிட்டு அரசியல் தீர்வை ஏற்பார்கள் என்றோ இங்கு யாருக்கும் நம்பிக்கை இல்லை.

யுத்தத்தை நிறுத்துமாறு நீங்கள் கோரிக்கை எழுப்புவது தவறானது அல்ல. ஆனாலும் புலித்தலைமை தாம் பலவீனமடையும் போது யுத்த நிறுத்தம் செய்வதும், பின் தங்களை பலப்படுத்திக்கொண்டு மறுபடியும் அழிவு யுத்தத்தை தொடங்குவதும்தான் இதுவரை கால வரலாறு.

தம்மிடம் இருந்த பலத்தை ஈழத்தமிழர்களின் அரசியல் தீர்விற்காக புலித்தலைமை ஒருபோதும் பயன்படுத்தியதில்லை. பலம் வந்தால் யுத்தம், பலவீனமானால் பேச்சு வார்த்தை என்று தொடர் துயரங்களுக்குள் எமது மக்களை புலித்தலமை சிறை வைத்து வருகின்றது. விவேகம் இல்லாத வெற்று வீரத்தால் எமது மக்கள் அவலப்படுகின்றார்கள்.

புண்ணுக்கு வலியா?,… மருந்துக்கு வலியா?.... புண்ணுக்குத்தான் வலி! எமது மக்களின் வலியை உணர்ந்து எமது தமிழர் தரப்பினர்தான் உரிமைகளை பெற முயன்றாக வேண்டும். இலங்கை இந்திய ஒப்பந்தத்திலானான 13 வது திருத்தச்சட்டத்தை அரசாங்கம் நடைமுறைப்படுத்த தொடங்கியிருக்கின்றது. கிழக்கு மாகாணத்தில் மாகாணசபைக்கான தேர்தல் நடத்தப்பட்டு அது மக்கள் பிரதிநிதிகளிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றது.

அது போலவே வடக்கு மாகாணத்திலும் தேர்தல் நடத்தும் சூழல் உருவாகும் வரைக்கும்
வடக்கு மக்களுக்கான இடைக்கால ஏற்பாடாக ஒரு சிறப்பு நிர்வாகத்தை அரசாங்கம் உருவாக்கியிருக்கின்றது.
பட்டு வேட்டி பற்றிய கனவில் இருந்தால் கட்டியுள்ள கோவணமும் களவாடப்பட்டு விடும்.
கிடைப்பதை எடுத்துக்கொண்டு இன்னும் எடுக்க வேண்டியதற்காக நாம் ஜனநாயக வழியில்
போராட வேண்டும்.

தமிழக மக்களின் எழுச்சியும், இந்திய அரசின் பக்கபலமும் இருந்தால் ஈழத்தமிழர்களை அழிவுகளில் இருந்து காப்பாற்ற முடியும். இலங்கைத்தீவில் அரசாங்கம் முன்னெடுக்கும் இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்கு நாம் புத்துயிர் கொடுக்க முடியும்.

இந்திய இலங்கை ஒப்பந்தத்தினால் அரசியல் தீர்வாக உருவாக்கப்பட்ட
மாகாணசபை முறையை முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் ஆரம்பித்து
இறுதித்தீர்வை நோக்கி செல்வதற்கு நீங்கள் உதவ வேண்டும். இதற்கு தடையாக
இருந்து வரும் புலித்தலைமக்கு நீங்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும்
என்பது எமது நியாயமான எதிர்பார்ப்பாகும்.


இந்திய இலங்கை ஒப்பந்தத்தை மறுபடியும் நடைமுறைப்படுத்தினால் ஈழத்தமிழர்களை அழிவுகளில் இருந்து காப்பாற்ற முடியும். அப்போது எமது மக்களுக்கு நம்பிக்கை பிறக்கும்.
எமது மக்கள் முன்னரை விடவும் முழுமையாகவே அரசியல் தீர்வின் பக்கம் அணி திரண்டு வருவார்கள்.

அரசியல் தீர்வு பலப்படும் போது புலித்தலைமையும் தவிர்க்க முடியாத நிர்ப்பந்தத்தில்
அரசியல் தீர்வு நோக்கி வருவார்கள். யுத்தம் நிறுத்தப்படும். எமது மக்கள் அச்சம் தரும் வாழ்வையும் கடந்து அழிவுகளற்ற அமைதிப்ப+ங்காவில் ஆனந்தக்களிப்போடு வாழும் சூழல் பிறக்கும். இதுவே எமது மக்களின் நிரந்தர மகிழ்ச்சி!

எம் இனிய உடன் பிறப்புகளே!...

உங்களது எழுச்சிப்போராட்டங்கள் தொடர்வதாயின் தொடரட்டும்.. ஆனாலும் அவைகள் புலித்தலைமையின் யுத்த வெறிக்கு துணை போய்விடக்கூடாது. நடை முறைச்சாத்தியமான அரசியல் தீர்வு முயற்சிகளை முன்நகர்த்தி செல்வதற்கு உங்கள் போராட்டம் பங்களிப்பதே சிறப்பானதாகும்.

புலிகள் அமைப்பின் கிழக்கு மாகாண போராளிகள் தமது தலைமையின் தவறுகளை உணர்ந்து திருந்தி ஜனநாயக வழிக்கு திரும்பி விட்டார்கள். வடக்கிலும் புலித்தலைமையில் இருந்து பலர் வெளியேறுவதற்காக சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றார்கள்.

ஈழத்தமிழர்களின் தேசியத்தலைவர் அமிர்தலிங்கம் போன்றவர்களும், இலங்கை தமிழ் இடது சாரி தலைவர்களான தோழர்கள் அண்ணாமலை, மற்றும் விஜயானந்தன் போன்றவர்கள் எம் மத்தியில் இல்லை. அன்று ஆயுதப்போராட்டம் நடத்திய சக இயக்கத்தலைவர்களும் இன்று உயிருடன் இல்லை. அனைவருமே புலித்தலைமையால் கொன்றொழிக்கப்பட்டு விட்டார்கள்.

அவர்களின் கொள்கை வழி சார்பாகவும், எமது மக்களின் விருப்பங்கள் சார்பாகவும்
இந்த மனிதாபிமான வேண்டுகோளை நான் உங்களிடம் விடுக்கின்றேன்.

ஈழத்தமிழர்களுக்கும் தமிழக உறவுகளுக்குமான
தொப்புள்க்கொடி உறவு தொடரட்டும்.!
இலங்கை இந்திய நட்புறவு வளரட்டும்.!!
ஈழத்தமிழர்களின் நிரந்தர மகிழ்ச்சிக்காக மட்டும் குரல் கொடுங்கள்!

பிரியமுடன்

அவலப்படுகின்ற ஈழத்தமிழர்கள் சார்பாக
டக்ளஸ் தேவானந்தா
செயலாளர் நாயகம்
ஈழ மக்கள் ஐனநாயக கட்சி (ஈ.பி.டி.பி)

Thursday, October 9, 2008

சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி ஜனநாயகத்தை பலப்படுத்த நேசக்கரம் நீட்டி அழைக்கின்றேன்!

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் கருணா அவர்களின் பாராளுமன்றத்திற்கான வருகை ஐனநாயகத்தை மேலும் பலப்படுத்துவதற்கான ஒர் அரிய சந்தர்ப்பமாகும்.! எனவே அவரது வருகையை நான் நேசக்கரம் நீட்டி வரவேற்கின்றேன்.

பாராளுமன்றம் சந்தர்ப்பவாதிகளின் இடமல்ல! அது சந்தர்ப்பவாதிகளுக்கு இடம் கொடுக்கும் களமாகிவிடக்கூடாது என்பதே எமது விருப்பம். தமிழ் பேசும் மக்களின் உரிமைப் போராட்டம் அகிம்சையில் தொடங்கிய போது பாராளுமன்றமும் அதற்கு ஒரு களமாக திகழ்ந்திருந்தது. ஆனாலும் ஆயுதப் போராட்டத்தின் எழுச்சியானது பாராளுமன்றத்தின் ஊடாக எந்தப் பிரச்சினைகளுக்கும் தீர்வுகாண முடியாது எனக் கருதி அந்தப் பாதையை முழுமையாக நிராகரித்திருந்தது.

முடிவற்று தொடரும் அழிவு யுத்தமும், தமிழர்களை தமிழர்களே கொன்றொழிக்கும் சகோதரப் படுகொலைகளும், இவைகளால் விளையும் அவலங்களும், எமது ஆயுதப்போராட்டம் பெற்றுத்தந்த இலங்கை இந்திய ஒப்பந்தமும் தமிழ் பேசும் மக்களை மறுபடியும் பாராளுமன்றத்தை நோக்கியே அழைத்து வந்திருக்கின்றது.

எமது மக்களுக்கான ஐனநாயக உரிமைகள் மறுக்கப்பட்ட சூழலில், எமது மக்களின் வாக்குப்போடும் சுதந்திரம் கூட பலாத்காரமாக பறிக்கப்பட்ட ஒரு சூழலில், தவறான முறையில் பாராளுமன்றம் வந்தவர்கள் பலரும் தங்களது பாராளுமன்ற பதவிகளை வெறும் சுயலாப அரசியலுக்காகவே
இன்று வரை பயன்படுத்தி வருகி;றார்கள்.

வெறும் பரபரப்பு காட்டுவதற்காகவும், பத்திரிகைச் செய்திகளுக்காகவும் பாராளுமன்றத்தில் வீராவேசமாக பேசுவதோடு மட்டும் அவர்கள் திருப்தியடைந்து விடுகிறார்கள்.

ஆனாலும் எமது மக்களின் நிம்மதியான வாழ்விற்காக, நிரந்தர அமைதிக்காக, அரசியலுரிமை சுதந்திரத்திற்காக தங்களது பாராளுமன்ற பதவிகளை அவர்கள் இதுவரை சரிவரப் பயன்படுத்தியிருக்கவில்லை என்பது உலகறிந்த உண்மையாகும்!

இந்நிலையில் பராளுமன்றத்தின் தேசியப்பட்டியலில் வெற்றிடமாக இருக்கும் இடத்தை நிரப்புவதற்கான சந்தர்ப்பம் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் கருணா அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

ஆயுதப்போராட்டத்தில் ஈடுபட்டு பின்னர் ஐனநாயக வழிக்கு வந்தவர்களில் நானும் ஒருவனாக பாரளுமன்றத்தில் அங்கம் வகித்தாலும் புலித்தலைமையின் தவறுகளை புரிந்து கொண்டு அதை விட்டு விலகி பாராளுமன்றத்திற்கு முதன் முதலாக அந்த அமைப்பில் இருந்து வந்திருப்பவர் விநாயகமூர்த்தி முரளிதரன் கருணா என்பதால் இது வரலாற்றின் முக்கியப் பதிவாகவே
கருதப்படுகின்றது.


அழிவு யுத்தம் நடத்திக் கொண்டிருக்கும் புலித்தலைமையின் தவறுகளைப் புரிந்து கருனாவும், அவரது போராளிகளும் பிரிந்து வந்த போது முதன் முதலாக, வெளிப்படையாகவே அவர்களது வருகையை ஆயிரம் பூக்கள் மலரட்டும் என்று எண்ணி அவர்களை நாம் வரவேற்றிருந்தோம்.

அதன் பின்னர் தனது பாதையை அவராகவே அவர் வகுத்திருந்த போது எங்கிருந்தாலும் வாழ்க என்று வாழ்த்தியவர்களும் நாங்கள் தான். இன்று ஒரு பாராளுமன்ற பிரதிநிதியாக கருணா விநாயகமூர்த்தி முரளிதரன் அவர்களை மறுபடியும் நாம் நேசக்கரம் நீட்டி வரவேற்றிருக்கின்றோம். கருணா விநாயகமூர்த்தி முரளிதரன் அவர்களின் வழியைப் பின்பற்றி முடிவற்று தொடரும் அழிவு யுத்தத்தில் இருந்து ஏனையவர்களும் விடுபட்டு வரவேண்டும் என நாம் விரும்பி வரவேற்கின்றோம்.

கருத்தியல் ரீதியாக வேறு பட்டு நின்றாலும் வேற்றுமைக்குள் ஒற்றுமை காண்போம்!

அரசியலுரிமை சுதந்திரத்தை வென்றெடுக்க ஒன்றிணைந்து உழைப்போம். தொடரப்போகும் மக்கள் சேவைக்கு எமது ஆதரவு என்றும் உண்டு!

எதிர்காலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியாக
பாராளுமன்றம் வருவதற்கு எமது வாழ்த்துக்கள் என்றென்றும் உரித்தாகும்!.

பொறுப்புள்ளவர்களின் பொறுப்பற்ற செயல்களினால் பொன்னான செயல்கள் யாவும் உறங்கிக் கொண்டிருக்கின்றன. வடிகின்ற எம் மக்களின் கண்ணீரைத் துடைக்க, சொரிகின்ற எம் மக்களின் குருதியை தடுத்து நிறுத்த நாம் அனைவரும் சேர்ந்துழைப்போம்.


டக்ளஸ் தேவானந்தா பா.உ
செயலாளர் நாயகம் - ஈ.பி.டி.பி
சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர்

Wednesday, October 1, 2008

சர்வதேச வயோதிபர் தினத்தை முன்னிட்டு சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் செய்தி


01.10.2008 - புதன்கிழமை


முதியோர்கள் எம் கண்முன்னால் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கும் முன்னோர்கள், இதுவரை வாழ்ந்து முடித்துவிட்ட சாதனையோடும், இன்னமும் வாழ்வோம் என்ற எதிர்கால நம்பிக்கையோடும் இந்த ஆண்டிலும் வருகின்ற வயோதிபர் தினத்தை முதியோர்களான நீங்கள் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி!

வாழ்வின் அனுபவங்களில் முதிர்ச்சி அடைந்தவர்கள் நீங்கள் என்பதால் வயோதிபர்களை முதியோர்கள் என்று அழைப்பதில் நான் பெருமையடைகின்றேன்.

நீங்கள் பெற்றிருக்கும் முதுமைக்கு மரியாதை செலுத்தும் தினமே வயோதிபர் தினமாகும். முதியோர்களாகிய உங்களுக்கு செலுத்துகின்ற மரியாதை என்பது நாம் வாழும் தேசத்திற்கும் மானுட சமூகத்திற்கும் செலுத்துகின்ற மரியாதை என்றே நான் கருதுகின்றேன்.

அனுபவங்கள்தான் சிறந்த படிப்பினைகள். இந்த வகையில் நீங்கள் ஒவ்வொருவரும் தேர்ந்த அனுபவங்களாகவே கருதப்படுகின்றீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் எமது இளம் சந்ததியினர் படிக்க வேண்டிய பாடப் புத்தகங்கள். உங்களில் பலர் பாடப் புத்தகங்களாக மட்டுமன்றி பல்கலைக்கழகங்களாகவும் இருக்கின்றீர்கள்.

நீங்கள் நடந்து வந்த பாதையில் கற்களையும் முட்களையும் சந்தித்திருப்பீர்கள். இன்பங்களையும் துன்பங்களையும் பங்கு போட்டு அனுபவித்திருப்பீர்கள். உங்களது இல்லற வாழ்விலும் சரி பொது வாழ்விலும் சரி பல இலட்சியங்களை நீங்கள் எட்டியிருப்பீர்கள். அந்த இலட்சியங்களை எட்டுவதற்கு பல்வேறு தடைகளையும் சந்தித்திருப்பீர்கள். அந்த அனுபவங்கள்தான் எமது சமகால இளையோர்களுக்கு அவசியமானவைகளாகும்.

நீங்கள் பெற்ற அனுபவங்களை உங்களுக்கு பின்னால் வாழ்ந்து கொண்டிருக்கும் இளையோர்கள் கற்க வேண்டும். எது சரி?... எது பிழை?... எது நீதி?... எது அநீதி?... இவைகளை முதியவர்களான நீங்கள் உங்கள் அனுபவங்களால் கற்றுணர்ந்தவர்கள்.

நீங்கள் பெற்ற அனுபவங்களை எமது இளையோர்களுக்கும் நீங்கள் கற்றுக்கொடுப்பீர்கள் என்பது எனது நம்பிக்கை! மனித உயிர்கள் மீதான நேசத்தையும் தேவையற்ற வன்முறைகள் மீதான எதிர்ப்பையும் கற்றுணர்ந்த நீங்கள் எமது சமகால சந்ததியினருக்கு அவற்றைக் கற்றுக்கொடுப்பதே இந்த தேசத்திற்றும் மனித சமூகத்திற்கும் ஆற்றுகின்ற பணியாகும்.

இன்றைய இளையோர்கள் நாளைய முதியோர்கள் என்பதை உணர்ந்து முதியோர்களாகிய உங்களை இன்றைய இளையோர்களும் கனம் பண்ண வேண்டியது அவர்களது கட்டாய கடமையாகும்.

காவோலை விழும்போது குருத்தோலை சிரிப்பது போல் அன்றி முதியோர்களுக்கான மரியாதை என்பதை இளைய சமுதாயத்தினர் செலுத்தியே ஆக வேண்டும்.

மனிதர்கள் யாவரும் சமன் என்ற நிலை சமூகத்தின் எல்லா தளங்களிலும் இருக்க வேண்டும். மனிதர்களுக்கிடையிலான பல்வேறு முரண்பாடுகளும் அகற்றப்பட வேண்டும். இன, மத, சமூக, பிரதேச முரண்பாடுகள் மட்டுமன்றி தலைமுறை இடைவெளியால் உருவாக்கப்படும் இளையோர் முதியோர்களுக்கு இடையிலான முரண்பாடுகளும் இருக்குமேயானால் அவைகளும் அகற்றப்பட வேண்டும் என்பதே எமது விருப்பங்களாகும்.

ஒரு மனிதனின் மரணம் என்பது இயற்கையானதாக இருப்பதையே எந்தவொரு நாகரீக சமூகமும் விரும்புகின்றது. இத்தகைய ஒரு சூழல் எமது வாழ்விடங்களிலும் விரைவாக உருவாக்கப்படல் வேண்டும்.

எமது தேசத்தில் அமைதியும் சமாதானமும் விரைவில் உருவாக்கப்பட வேண்டும். சகல இன, மத, சமூக மக்களும் சமாதான சக வாழ்வை நடைமுறையில் அனுபவிக்க வேண்டும்.

வயோதிபர்களான நீங்களும் இன்றைய அமைதியற்ற சூழலினால் பல்வேறு அசௌகரியங்களையும் சந்திக்க வேண்டிய துயரங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது.

நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் காலத்திலேயே மாற்றமொன்று நிகழும் என்பதில் மாற்றமில்லை என்பது எனது நம்பிக்கையாகும்.

இவ்வாறானதொரு மாற்றம் என்பது அமைதியின் வருகைக்கான மாற்றமாக இருக்க வேண்டும். உங்களது வழித்தோன்றல்கள், உங்களது அடுத்த சந்ததியினர் எமது வாழ்விடங்கள் தோறும் நிம்மதியாக வாழும் காலத்தை உங்கள் கண்முன்னால் கொண்டு வந்து நிறுத்த வேண்டும் என்பதே எமது விருப்பங்களாகும். அதற்கு ஜனநாயகம் புத்துயிர் பெற்று எழ வேண்டும். ஜனநாயக சுதந்திரத்தை பலப்படுத்த வேண்டும்.

அதற்காக நீங்கள் ஆற்ற வேண்டிய பணிகளையும் பங்களிப்பையும் நான் உங்களிடம் இருந்து எதிர்பர்க்கின்றேன். இதுவே வயோதிபர் தினத்தில் நான் உங்களுக்கு விடுக்கும் வேண்டுகோள் ஆகும்.

நோயற்ற வாழ்வே குறையற்ற செல்வம்!
நீண்ட ஆயுளோடும் மன உறுதியோடும் நம்பிக்கையோடும் நீங்கள் வாழ வேண்டும் என்று நான் வாழ்த்துகின்றேன்.

இப்படிக்கு
என்றும் மக்கள் சேவையில் உள்ள,

டக்ளஸ் தேவானந்தா பா.உ
செயலாளர் நாயகம், ஈ.பி.டி.பி.
சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர்