Follow @jananayakan
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வீரகேசரி வாரவெளியீட்டிற்கு வழங்கிய செவ்வி –13.01.2008
செவ்வி கண்டவர் திரு. சுமணன்
கேள்வி: இடைக்கால நிர்வாகசபை பற்றிப் பேசுகிறீர்கள், அதை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது பற்றிக் கூறுங்கள்?
பதில்: இதில் இடைக்காலத் தீர்வு, இடைக்கால நிர்வாக சபை என இரண்டு விடயங்கள் உள்ளன. நாங்கள் இன்று கேட்பது இடைக்காலத் தீர்வு சம்பந்தமானது. மக்களுடைய அரசியல் உரிமைக்காக அன்று நாம் ஆயுதம் ஏந்தி போராடியிருந்தோம். ஜனநாயக வழிமுறை மூலம் தீர்க்க முடியாது என்ற காலத்தின் கட்டளையை ஏற்றுத்தான் அன்றைய சூழலில் அவ்வாறு நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தோம். ஆனாலும் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் ஐக்கிய இலங்கைக்குள் சமாதானச் சகவாழ்வு காணலாம் என்ற சாதகமான ஒரு சூழலை உணர்ந்து தேசிய அரசியல் நீரோட்டத்தில் கலந்து கொண்டிருந்தோம். 20 வருடமாகியும் அதனை தீர்க்க முடியவில்லை. இதற்குப் பிரதான தடையாக பிரபாகரனே உள்ளார். இருந்தாலும் மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசுகள் யாவும் என்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளன என்ற கேள்வியும் உள்ளது. இந்த நம்பிக்கை போதுமானதாக இல்லை. அந்த வகையில் நாங்கள் ஜனாதிபதி பிரேமதாசா அவர்களிடமும், சந்திரிகா குமாரதுங்க அவர்களிடமும் பேசி 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக மக்கள் பிரதிநிதித்துவத்துடன் அமுல்படுத்தும் படி கேட்டிருந்தோம்.
எங்களது அரசியலில் ஆளும் கட்சி தீர்வை முன்வைத்தால் எதிர்க்கட்சி எதிர்ப்பதும் பின்னர் எதிர்க்கட்சி ஆட்சிக்கு வந்தால் அது மாறி நடப்பதும் தான் நடக்கிறது. அதனால் அரசியல் தீர்வுத் திட்டம் முன்னோக்கி நகர முடியாமல் இருக்கிறது.
ஆகவேதான் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட மாகாண சபை முறைமையிலிருந்து ஆரம்பிக்கலாம் என்பது எங்களது நிலைப்பாடு. சர்வகட்சி மாநாட்டின் மூலம் எல்லோரும் ஏற்றுக் கொள்ளக்கூடியதொரு இணக்கப்பாட்டிற்கு வருவது கஷ்டம். அப்படி வந்தாலும் கூட அதனை நடைமுறைப்படுத்த சட்டவாக்கம் செய்ய வேண்டும். அதற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை சிலவற்றிற்கு சர்வஜன வாக்கெடுப்புக்கும் போக வேண்டும். இலங்கையின் அரசியல் சூழலில் இது இரண்டுமே சாத்தியமில்லை என்பதே கடந்த கால சம கால அனுபவங்களாகும். ஆகவேதான் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, இதர கட்சிகள் எல்லாம் ஏற்றுக் கொள்ள முடிந்த மாகாண சபையில் இருந்து ஆரம்பிக்கலாம் என்கிறோம்.
முதல் கட்டமாக, இங்கிருந்து தொடங்கினால் எமது இறுதித்தீர்வை நோக்கி சுலபமாக நகர முடியும் என்பது நடைமுறை யதார்த்தம் என்பதாலும்,
மக்களுடைய நாளாந்த அவலங்களை தீர்ப்பதற்கான மக்கள் பிரதிநிதிகளை கொண்ட ஒரு அரசியல் தளமாக இது இருக்கும் என்பதாலும்,
தமிழ்த் தீவிரவாத்திற்கும், சிங்களத் தீவிரவாத்திற்கும் இடையில் அவதிப்படுகின்ற மக்களை அந்த சூலில் இருந்து மீட்டு, இன ஐக்கியத்துடனும், இன சமத்துவத்துடனும் வாழமுடிந்த ஒரு சமாதான தேசத்தை நோக்கி நகர்வதற்கான வழிமுறை என்பதாலும்,
ஆட்கடத்தல், படுகொலைகள், அச்சுறுத்தல்கள், கப்பம் கோருதல், மற்றும் பேசுவதற்கும், எழுதுவதற்கும், சுதந்திரமாக நடமாடுவதற்கும், விரும்பிய அரசியல் கட்சியை ஆதரிப்பதற்கும்
அச்சுறுத்தலாக இருக்கின்ற மனித உரிமை மீறல்களில் இருந்தும், ஜனநாயக மறுப்பில் இருந்தும் மக்களை மீட்டெடுத்து பாதுகாப்பதற்கான சட்ட ஒழுங்குகளை மாகாண நிர்வாகத்திற்கு உட்பட்ட தமிழ் பேசும் பொலிஸ் மூலம் நெறிப்படுத்தலாம் என்பதாலும்,
சர்வதேச சமூகத்தினதும், குறிப்பாக அயலுலக நட்பு நாடாகிய இந்தியாவின் முழுமையான ஆதரவும் இந்த ஏற்பாட்டிற்கு இருப்பதாலும்,
இந்த முதலாவது கட்டமே கணிசமான அளவு பிரச்சினைகளுக்கு தீர்வுகண்டு இறுதிக் கட்டத்தை நோக்கி ஆராக்கியமாக நகர முடிந்ததாக இருக்கும். குறிப்பாக 6 மாதங்களில் இருந்து ஒரு வருடத்திற்குள் பாரிய மாற்றங்களை இதன் மூலம் உருவாக்கி விடலாம்.
எங்களது பாராளுமன்ற, உள்ளுராட்சி சபை, மற்றும் அமைச்சு சார்ந்த பிரதிநிதித்துவங்களை கொண்டே எமது மக்களை நாம் பெரும் திரட்சியாக சரியான திசை வழிக்கு அழைத்து வந்திருக்கின்றோம். நாம் மக்களிடம் சென்றிருக்கின்றோம். மக்கள் எங்களை நாடி வந்திருக்கின்றார். ஆகவே ஒரு இடைக்கால நிர்வாகம் என்ற கட்மைப்பு கிடைக்குமேயானால் மக்கள் அதை இன்னும் அதிகளவில் நாடி வருவார்கள். அந்த பலத்தோடு இடைக்கால தீர்வை நடைமுறைப்படுத்தலாம். இறுதித்தீர்வு நோக்கியும் விரைவாக செல்லலாம்.
கேள்வி: இடைக்கால நிர்வாக சபைக்கு இப்போது என்ன தேவை வந்துள்ளது? ஏனென்றால் இப்போது வடக்கு கிழக்கு பிரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இது நடைமுறைக்குச் சாத்தியமா?
பதில்: இடைக்கால நிர்வாக சபைக்கு என்ன தேவை இருக்கின்றது என்பதை முதல் கேள்வியிலேயே கூறியிருக்கின்றேன்.
சகல தமிழ் பேசும் தரப்பினரதும் போராட்டங்களாலும், தியாகளாலும், வடக்கு கிழக்கு மாகாணங்களை தற்காலிகமாக இணைத்து ஒரே அரசியல் அலகாக இந்தியா கொடுத்திருந்தது. நாங்கள் அதனை இணைந்து செயற்பட்டு நிரந்தர அலகாக்கி இருக்கவேண்டும். நமது ஒற்றுமையின்மையாலும் விட்டுக் கொடுப்புகளின்மையாலும் ஆட்டம் காண வைத்துப் பிரித்து விட்டோம். அது தமிழ்த் தலைமைத்துவத்திலுள்ள பிரச்சினை. ஏந்தவொரு அரசும் தங்களது நலன்களில் இருந்து கொண்டுதான் பிரச்சனைகளைப் பார்ப்பார்கள். நாங்கள் தான் எங்களது மக்களது நலன்களைச் சரியாக முன்னெடுக்க வேண்டும். இருக்கிறவன் சரியாக இருந்தால் சிரைக்கிறவன் சரியாக சிரைப்பான் என்பது முதுமொழி!
இலங்கை அரசு அரசியல் தீர்வை கொடுக்க முன்வைத்தால் இடைக்காலத்தீர்வைக் கேட்பதும், அதற்கு இணங்கி அரசாங்கம் இடைக்கால நிர்வாகத்தைக் கொடுக்க முன்வந்தால் சீச்சீ…. அரசியல் தீர்வுதான் வேண்டும் என்று கேட்பதும், இதை வைத்து யுத்தத்தை தெடருவதும்தான் புலித்தலைமையின் திட்டமிட்ட செயலாக தொடருகின்றது.
ஆகவே, எது கிடைக்கின்றதோ அதிலிருந்து ஆரம்பிப்பதே நல்லது. எது நடைமுறைச்சாத்தியமோ அதனை முதலில் பாதுகாக்க வேண்டும். அதன் பின்னர்தான் அடுத்த கட்டத்துக்குச் செல்ல வேண்டும். இதில் பிரச்சினைக்கு சுமுகமான தீர்வு காண வேண்டும் என்ற விருப்பங்களும் இருக்கவேண்டும்.
பட்டு வேட்டி பற்றிய கனவில் இருந்தால் கட்டியுள்ள கோவணமும் களவாடப்பட்டுவிடும்
என்ற எச்சரிக்கையுணர்வு இருக்க வேண்டும்.
கேள்வி: அரச தரப்பு இதற்கு ஒத்துக் கொள்ளுமா?
பதில்: அண்மைய வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போது நான் த.தே. கூட்டமைப்பினரை நோக்கி சொன்னேன். இதனையே சந்திரிகா காலத்திலும் தமிழர் விடுதலைக் கூட்டயினருக்கும் சொல்லியிருந்தேன்.
அரசாங்கத்திற்கு பெரும்பான்மை பலம் தொடர்பான கேள்விக்குறி உருவாகியிருக்கின்றது. இந்நிலையில் நீங்கள் அரசுடன் பேரம் பேசுங்கள். இது நல்ல சந்தர்ப்பம். யுத்தத்தை நிறுத்தலாம். மக்களது இயல்பு வாழ்க்கையை ஏற்படுத்தலாம். பேச்சை நடத்தி தீர்வைக் கொண்டு வரும்படி சொல்லுங்கள் என்று கூறினேன். இதனை அரசிடமும் புலிகளிடமும் சொல்ல வேண்டும். இந்தச் சந்தர்ப்பங்களை தமிழர் விடுதலை கூட்டணியாக இருந்த போதும் சரி, தமிழ் தேசிய கூட்டமைப்பாக இருக்கின்ற போதும் சரி அவர்கள் தவறவிட்டுவிட்னர். அவர்கள் பொம்மலாட்டம் ஆடுகின்றார்கள். புலிகளிடமிருந்து அனுமதி வர வேண்டும் என்பதால் சந்தர்ப்பங்கள் தவறவிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழ் தலைமைகளே சந்தர்ப்பங்களைத் தவறவிட்டு வருகின்றன. அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்கள் மக்களது நலன் கருதிச் செயற்பட்டிருந்தார். இன்று நாம் சாத்தியமான வழிமுறையில் அணுகுவதால் அரசு தரப்பு இதற்கு ஒத்துக் கொள்வார்கள் என்று நம்புகிறேன்.
13 ஆவது திருத்தச் சட்டத்தை ஒரு இடைக்காலத்தீர்வாக எடுத்து நடைமுறைப்படுத்தும் எம்முடைய முயற்சி ஒரு முடிவு நிலைக்கு கொள்கை ரீதியிலான உடன்பாட்டுக்கு வந்திருக்கிறது. இனி நடைமுறைப்படுத்துவதுதான் மிச்சம். தேர்தல் ஒன்றுக்குப் போகலாம். இல்லையென்றால் இடைக்கால நிர்வாகத்திற்குப் போகலாம். அது அடுத்த கட்டம். இது இன்று நேற்றல்ல 15 வருட காலமாக நாம் சொல்லியும் கோரியும் வருவது. சந்திரிகா காலத்தில் புலிகள் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு ஊடாக அதனைக் கெடுத்து விட்டனர்.. இப்பொழுதும் இந்த மாகாண சபை விடயம் சரிவரப் போகிறது எனும்போது குழப்புவதற்கு திட்டம் போடுகிறார்கள். அதை நடைமுறைப்படுத்த தயாராக இருக்கும் எங்கள் மீது சேறடிக்கவும் பார்க்கிறார்கள்.
கேள்வி: இடைக்கால நிர்வாக சபை முதல்வராக நீங்கள் நியமிக்கப்படவிருப்பதாக வெளியாகும் தகவல்கள் உண்மையா?
பதில்: இ.நி. சபையானது பிரதம நிர்வாகியால் நிர்வகிக்கப்படுவதாகும்.
பிரதம நிர்வாகியை ஜனாதிபதிதான் தெரிவு செய்வார். முதலமைச்சர் என்பது தேர்தல் மூலம் மக்களால் தெரிவுசெய்யப்படுவது. நான் அமைச்சுப் பதவியை விட்டு விட்டும் அதற்குச் செல்லத் தயாராக உள்ளேன். ஏனென்றால் நான் தொடர்ந்தும் அரசியலில் இருப்பதற்குச் காரணம் மக்கள் படும் கஸ்டங்களுக்கு ஆரம்ப கால ஆயுதப்போராளி என்ற வகையில் நானும் ஒரு காரணமாக இருந்தவன். இந்த தார்மீகப்பொறுப்பை நான் ஏற்கின்றேன். நிர்வாகத்தைச் சரியான முறையில் நடை முறைப்படுத்தி மக்களை அவலங்களில் இருந்து மீட்கவேண்டும்.
கேள்வி: கிழக்கு மாகாண உள்ளுராட்சித் தேர்தலில் நீங்கள் எவ்வாறான சவால்களை எதிர்கொள்ள வேண்டி வரலாம் என நினைக்கிறீர்கள்?
பதில்: இன்று கிழக்கில் பிரபாகரன் தலைமயிலான புலிகளின் ஆதிக்கம் வலுவாக குறைந்துள்ளது. அது பிரதான தடையாக இருக்காது. இருந்தாலும் அது கூட எம்மைப்பொறுத்தவரையில் ஒரு தடையல்ல. ஆனால் புலிகளில் இருந்து பிரிந்தவர்களது பிரச்சினைகள் உள்ளது. இப்போது மட்டக்களப்பில் நடக்கும் பல கொலைகள், மிரட்டல்கள், அச்சுறுத்தலுக்கு அவர்கள்தான் காரணம் என்று சொல்லப்படுகிறது. படைத்தரப்பு அங்கிருந்து புலிகளை விரட்டி விட்டதாக கூறும்போதும் அங்கு சில விடயங்கள் நடக்கின்றன என்றால் அதற்கு வேறு யாரும் காரணமாக இருக்கப் போவதில்லை. அண்மையில் கூட தேர்தலை ஒட்டி சில கொலைகள் அச்சுறுத்தல்கள் நடந்திருக்கின்றன.
இப்பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதிக்கும், தேர்தல் ஆணையாளருக்கும் அறிவிக்கவுள்ளோம். அதற்கு முன் சம்பந்தப்பட்ட அமைப்புகளுடன் ஜனநாயக ரீதியாக மக்களுடைய தெரிவுக்கு வரும்படி கூறவுள்ளோம்
நான் மட்டக்களப்பில் பிறந்தால் யாழ்ப்பாணத்தைப் பார்க்க முடியாது என்றில்லை. யாழ்ப்பாணத்தில் பிறந்தால் மட்டக்களப்பைப் பார்க்க முடியாதென்றல்ல. மாத்தறையில் பிறந்த ஜனாதிபதி நாட்டின் அனைத்துப் பகுதி மக்களது பிரச்சினைகளைப் பார்க்க முடியும் என்றால் நான் ஏன் அமைச்சரென்ற ரீதியில் நாடு தழுவிய வகையில் பொறுப்பிருந்தாலும் ஒரு பிராந்திய அரசியல் கட்சி என்ற ரீதியில் எனக்கு வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்களது பிரச்சினைகளைக் கவனிக்க வேண்டிய தார்மீக பொறுப்புள்ளது.
கிழக்கின் அனைத்துப் பகுதிகளையும் விடுவித்து விட்டதாக அரசு கூறுகிறது. ஆனால் அந்த மகிழ்ச்சியை மக்களும் அனுபவிக்க வேண்டும்.. ஏனென்றால் மக்கள் தொடர்ந்தும் கஸ்ரங்களுக்குள் தான் இருக்கிறார்கள். அந்த வகையில் சுதந்திரத்தை மக்கள் உணரும் வகையில் நான் பணி செய்ய வேண்டும். இந்தப் பொறுப்பு எனக்குள்ளது. அந்த வகையில் மக்கள் சுயமாக அவர்களது பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்கான சூழல் உருவாக வேண்டும். அதில் யாருக்கு வாக்களிக்கிறோம் என்பது மக்களது தீர்மானம். கிழக்கில் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் இல்லாதபடியினால், அங்கு எமது பணிகளில் அளவுகள் மாறுபட்டிருக்கலாம். ஆனால் எதிர்காலத்தில் இவ் இடைவெளிகள் குறையுமென்று நம்புகின்றேன்.
கேள்வி: மட்டக்களப்பில் நடைபெறவுள்ள தேர்தலில் கூட்டணி அமைத்துத் போட்டியிடப் போவதாக நம்பிக்கை தெரிவித்திருந்தீர்கள். அண்மையில் ரி.எம்.வி.பி. தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்திருக்கிறதே?
பதில்: வன்முறையைத் தடுப்பதுதான் முக்கியமான நோக்கம். அந்த வகையில் எல்லோருடனும் பேசும்போது சேர்ந்து போட்டியிடுவதாக ரி.எம்.வி.பி. கூறியது. பின்னர் வந்த அழுத்தங்களால் தனித்துப் போட்டியிடுவது குறித்த நிலைக்கு அவர்கள் வந்திருக்கலாம். மற்றைய மூன்று கூட்டுக்களும் சேர்ந்து போட்டியிடுவதாக உள்ளது.
இப்பொழுது வன்முறைகளைத் தவிர்ப்பதே நோக்கமாக உள்ளது. எங்களுக்குள் சண்டையிடுவது ஒரு போதுமே ஆரோக்கியமானதாக இருக்காது. அதனால் இதனைத் தவிர்க்கும் வகையில் தேர்தல் ஆணையாளர், ஜனாதிபதியுடன் பேசவுள்ளோம். தேர்தலில் ஆரோக்கியமான போட்டியாளர்கள் இருந்தால் அதை விரும்புகின்றோம். எவரும் தனித்தோ கூட்டாகவோ போட்டியிடுவது எமக்கு பிரச்சினையில்லை.
கேள்வி: கொழும்பில் இடம்பெறும் கொலைகள், கடத்தல்களின் பின்னணி என்ன என நினைக்கிறீர்கள்?
பதில்: கொலைகளால் எந்தப் பிரச்சினைகளையும் தீர்க்க முடியாது. ஆரம்ப காலத்தில் ஈ.பி.ஆர்.எல்.எப். பின் கூட்டுத் தலைமைகளில் நான் இருக்கும் போது உட்கொலைக்கு என்னை நிர்ப்பந்திக்கும் போதுதான் பிரச்சினை ஏற்பட்டது. நான் கொலைகளுக்கு இடம் கொடுக்கவில்லை. ஆயுதப் போராட்ட காலத்தில் கூட எதிர்ப்புத் தெரிவித்தேன். மனித நேயம் ஜனநாயக விடயங்களைப் பாதுகாத்தேன். அதை மறுத்து அல்லது மீறி விடுதலை என்பது இருக்க முடியாது.
யுத்தம் தொடரும் வரை இது போன்ற வன்முறைகளும் இருக்கும். இவைகளை வன்முறையாளர்கள் தவிர்க்க மாட்டார்கள். மனிதநேயவாதிகளும் ஜனநாயக சக்திகளும் இவைகளை தொடர்ந்தும் கண்டிக்க முன்வரவேண்டும்.
கொலைகளும், கடத்தல்களும் நிறுத்தப்பட வேண்டும். இல்லாமல் அவர்களையும் இவர்களையும் சொல்லிக் கொண்டிருப்பதில் பிரயோசனம் இல்லை. ஆனால் ஈ.பி.டி.பி. யைப் பொறுத்தமட்டில் கருத்தைக் கருத்துக்களால் சந்திக்க வேண்டும். கருவிகளால் அல்ல என்பதே நிலைப்பாடாகும். கொலைகளினூடாக பிரச்சினையைத் தீர்க்க முடியாது என்பதிலும் நாங்கள் உறுதியாக உள்ளோம்.
கேள்வி: ஆளும் கட்சிகள் மாறும் போதும் நீங்கள் அரச தரப்பிலேயே இருக்கிறீர்கள். எனினும் தமிழ் மக்களது பிரச்சினைக்கு உங்களால் ஒரு தீர்வைப் பெற முடியவில்லையே?
பதில்: தமிழ் மக்களின் நாளாந்தப் பிரச்சினைகள் பலவற்றைப் தீர்த்துக் கொண்டிருக்கிறோம். அதே நேரத்தில் அரசியல் பிரச்சினைகளை தீரப்பதற்கு எங்களுக்கு அரசியல் பலம் வேண்டும். எங்களுக்கு ஒரு ஆசனம் தான் கிடைத்திருக்கிறது. ஒருலட்சம் இந்தியத் துருப்புக்கள் இருந்த போதே அன்றிருந்தவர்களால் அதை சரியாக பயன்படுத்த முடியாமல் போயிருக்கின்றது. ஆனால் நாங்கள் ஜனாதிபதியுடன் பேசி மாகாணசபை முறையை நடைமுறைப்படத்தலாம் என்ற கொள்கை ரீதியிலான ஒரு முடிவுக்கு வந்திருக்கிறோம். அது பெரிய அரசியல் வெற்றி என நான் நினைக்கிறேன். ஒன்றும் கிடக்காத நிலையில் இருப்பதால் கிடைப்பதில் இருந்து கொண்டு ஆரம்பிக்கலாம் என்று தொடங்கியுள்ளோம்
கேள்வி: தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் வரையிலான தீர்வுத்திட்டத்தை முன்வைத்து நடைமுறைப்படுத்த முடியுமாக இருந்தால் போராட்டம் என்பது தேவையற்றது என்பதை ஒத்துக்கொள்கிறீர்களா?
பதில்: இலங்கை இந்திய ஒப்பந்தத்துடன் நாங்கள் ஆயுதப்போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தால் அதைச் செய்திருந்தால் நடைமுறையிலேயே சுயநிர்ணய உரிமையைப் பெற்றிருக்கலாம். ஆயுதப்போராட்டம் நிறுத்தப்பட்டு அரசியல் தீர்வுக்கு வர வேண்டும் என்பதை இலங்கை இந்திய ஒப்பந்த காலத்தில் இருந்தே நாம் வலியுறுத்தி வருகின்றோம்.
கேள்வி: தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கக்கூடிய ஒரு இறுதித் தீர்வுத்திட்டத்தை சர்வகட்சிக் குழு முன்வைக்குமென நீங்கள் கருதுகிறீர்களா?
பதில்: இன்றைக்குள்ள நிலையில் அவர்களால் இறுதித் தீர்வை முன்வைப்பது கஸ்டம் அல்லது முன்வைத்தாலும் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை. சர்வஜன வாக்கெடுப்புக்கும் போக வேண்டும். ஆனாலும் சர்வகட்சி மாநாடு உட்பட சகல முயற்சிகளையும் நாம் வரவேற்கின்றோம்.
சாத்தியப்படும் ஒன்றில் இருந்து நாம் ஆரம்பிப்போம். அதனையே நாம் முன்வைத்துள்ளோம். அதன் மூலம் மக்களுக்கு ஒரு நல்ல தீர்வினைக் கொண்டுவர முடியும் என நம்புகிறேன்.
கேள்வி: யாழ்ப்பாணத்தில் மிக மோசமான கொலைகள் நடந்த கொண்டிருக்கிறது. யாழ். குடா முழுக்க இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. உங்களது ஆட்களும் உள்ளனர். இந்தக் கொலைகளை நிறுத்துவதற்கு உங்களால் நடவடிக்கை எடுக்க முடியாதா?
பதில்: மூக்குள்ள வரை சளி இருப்பது போல் யுத்தம் இருக்கும் வரை இவைகள் தொடர்ந்த படியே இருக்கும். பாவம் ஒரு பக்கம் பழி இன்னொரு பக்கமாக எம்மீதான பழிகளும் சுமத்தப்படுகின்றன. ஆனால் மக்களுக்கு தெரியும் ஈ.பி.டி.பி ஒரு போதும் இந்த வழிமுறையை கையாளப்போவதில்லை என்று.
நீங்கள் சாதாரணமாக அங்கு போய் வருவது போன்று எங்களால் அங்கு போய்வர முடியாது. நாங்களும் பாதுகாப்புடனேயே சென்றுவர வேண்டியுள்ளது.; ஏற்கனவே நான் ஈ.பி.டி.பி. கொலை குறித்து எப்படிப்பார்க்கிறது என்பது பற்றிச் சொல்லிவிட்டேன். இதற்காக இப்போது அமைச்சரவையில் ஒரு பத்திரம் சமர்ப்பித்துள்ளேன்.
யாழ்ப்பாணத்தில் புனர்வாழ்வு நிலையம் ஒன்றை உருவாக்கி அதனை நடைமுறைப்படுத்துவது. சரணடையும், அல்லது கைது செய்யப்படும் புலி உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வு அளித்து பாதுகாப்பதே எமது விருப்பம். இதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்து விட்டது இனி நடைமுறைப்படுத்தும் தேவையுள்ளது.
கேள்வி: விடுதலைப் புலிகளை அழித்துவிட்டால் இனப்பிரச்சினையைத் தீர்த்து விடலாம் எனச் சொல்கிறீர்கள். இது எந்தளவுக்குச் சாத்தியம்?
பதில்: நான் அப்படிச் சொல்லவில்லை. பிரபாகரன் உயிருடன் இருக்கும்வரை இனப்பிரச்சினைக்கு சுமுகமான நடைமுறைச் சாத்தியமான ஒரு தீர்வுக்கு வரப்போவதில்லை என்பதுதான் என்னுடைய கருத்து அதற்கு பல உதாரணங்கள் உள்ளன.
தீர்வுகள், பேச்சுக்களின் போது ஒன்றில் இணக்கம் ஏற்பட்டால் இன்னும் ஒன்றை முன்வைப்பது என்ற வகையில் தான் பிரபாகரனது செயற்பாடு இருக்கும்.
ஆனால், நான் இப்போது முன்வைத்துள்ள நடைமுறைக்கு சாத்தியமான தீர்வில் விரும்பியோ விரும்பாமலோ இத்திட்டத்தின் மூன்று கட்டங்களின் முடிவில் புலிகளும் வந்தாக வேண்டும்.
1994 இல் தேர்தல் அறிவிக்கப்படும் போது புலிகள் பாராளுமன்ற ஜனநாயகத்தில் நம்பிக்கையில்லை. அதனூடாக பிரச்சினைகளைத்தீர்க்க முடியாது எனத் தெரிவித்திருந்தனர். மக்களை பகிஷ்கரிக்கும் படியும் பயமுறுத்தினர். 1998 இல் உள்ளூராட்சி சபை தேர்தலின் போதும் அதையே செய்தார்கள்.
2004 இல் என்ன நடந்தது. அவர்களாகவே தேர்தலில் போட்டியிட முன்வந்தனர். தமக்கு தாமே வாக்குப்போட்டு பாராளுமன்றம் வந்தார்கள். ஆனால், வந்து குழப்பிக் கொண்டேயுள்ளனர். பாராளுமன்ற பலத்தை வைத்து பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கம் அவர்களிடம் இல்லை. குழப்புவதுதான் நோக்கம்.
2006 இல் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்ட போது 98 இல் எதிர்த்திருந்த புலிகளும் போட்டியிடுவதற்காக முன்வந்தார்கள். இதுவும் குழப்பங்களை ஏற்படுத்தும் நோக்கமாகவே இருந்தது.
அதனால்தான் நான் பிரபாகரன் இருக்கும்வரைக்கும் பிரச்சினைக்குத் தீர்வு வரப்போவதில்லை எனக்கூறினேன். ஆனால், மூன்றாவது கட்டத்தில் விரும்பியோ விரும்பாமலோ புலிகளும் வந்தேயாக வேண்டும். புலிகளின் உறுப்பினர்களில் அநேகமானவர்கள். கட்டாயத்தின் பெயரில் பிரபாகரனால் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இயல்புச் சூழலில் உறவுகளோடு இணைந்து வாழவே விரும்புகிறார்கள் என்று நம்புகின்றேன்.
கேள்வி: ஒரு முழுமையான தீர்வை முன்வைத்து முறையாக நடைமுறைப்படுத்தினால் விடுதலைப் புலிகள் ஓரம் கட்டலாம் என்பதை ஒத்துக்கொள்கிறீர்களா?
பதில்: முழுமையான தீர்வு என்றால்?….. முதல் கட்டமாக இடைக்கால நிருவாகசபையை நடைமுறைப்படுத்துவது இரண்டாம் கட்டம் கூடுதலான அதிகாரங்களைக் கொடுப்பது மூன்றாவது நாடே இறுதி இலக்கை நோக்கிப் போகும். அதன்பின் சட்டம் ஒழுங்கு நிலைநாட்டும் வரையில் செயல்நிலைக்கு வந்துவிடும். யுத்தத்தின் ஊடாக பிரச்சினைகளுக்குத் தீர்வு காணலாம் என்ற நம்பிக்கை எனக்கில்லை. ஆனால் தற்காப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டியுள்ளது.
கேள்வி: உண்மையிலேயே சிங்களத் தலைமைகள் தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்க்குமென நம்புகிறீர்களா? தீர்க்கமாட்டார்களென்றுதான் நீங்கள் ஆயுதம் ஏந்தினீர்கள், ஜனநாயக வழியில் தீர்க்கலாம் என்றுதான் சிங்களத் தலைமைகளுடன் இன்று இணைந்துள்ளீர்கள். அதில் எந்தளவுக்கு வெற்றி கிடைத்திருக்கிறது.
பதில்: இவர்களை நம்புவதா இல்லையா என்பது பிரச்சினையல்ல. அவர்களை நமது வியூகத்துக்குள் கொண்டு வருதல் வேண்டும் என்பதே என்னுடைய கருத்து. ஒரு லட்சம் இந்தியத் துருப்புக்கள் இருந்தபோது அப்போதிருந்த தமிழ் அரசியல் தலைமைகள் சரியாக அதைப் பயன்படுத்தவில்லை. சந்தர்ப்பங்களை தவறவிட்டுள்ளனர்.
ஏன் அப்படி இருந்தது. சூழல் வரும்போது கொண்டு செல்லாமையால்தான். இந்த மாகாணசபை முறை கட்சித் தலைவர்கள் மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த 20 வருடத்தில் நான் பெற்ற அனுபவங்கள் ஊடாக வெல்லலாம் என்று நம்பிக்கையுள்ளது. அதற்குரிய தளத்தை உருவாக்குவதற்கு யோசிக்கிறேன்.
கேள்வி: மகேஸ்வரனது கொலை தொடர்பாக உங்கள் மீது குற்றம் சாட்டப்படுகிறதே?
பதில்: இது ஒரு அரசியல் குற்றச்சாட்டு. ஆரம்பத்தில் லலித் அத்துலத் முதலி, கொப்பேகடுவ, மற்றும் சிலரையும் கொலை செய்ததாக எம்மீது குற்றஞ்சாட்டிருந்தது. பின்னர் அவை புலிகளால் செய்யப்பட்டதாக நிரூபணமானது. சந்திரிகாவும் தன்னைக் கொல்ல வந்ததாகவும் அது தொடர்பாக பத்திரிகைளிலும் அறிக்கையும் விடுத்தார். ஆனால் தேர்தலின் பின் எல்லாம் மாறியது. மகேஸ்வரனைக் கொலை செய்தது புலிகள் என்பது உறுதியாகியிருக்கிறது. இதனை ரணில் விக்கிரமசிங்கவும் ஏற்றுக்கொண்டிருக்கிறார்.
மகேஸ்வரனின் அரசியல் மற்றும் வியாபார விடங்களில் ஏற்பட்ட முரண்பாடே புலிகள் அவரைக் கொலை செய்யக் காரணமாகும். எங்களுக்கு மகேஸ்வரனைக் கொலை செய்ய வேண்டிய தேவையில்லை. கருத்து ரீதியாக மகேஸ்வரனோடு இடைவெளிகள் இருந்திருக்கலாம். ஆனால் மகேஸ்வரன் புலிகளை எதிர்த்துக் கொண்டு தனது அரசியலையும், வியாபாரத்தையும் கொண்டு செல்வதில் எத்தகைய நெருக்கடிகளை எதிர்கொண்டிருப்பார் என்பதை எம்மால் புரிந்துகொள்ள முடியும். ஏனெனில், மகேஸ்வரன் தனிப்பட்ட ரீதியில் என்னுடன் நட்பாகவே இருந்தார். புலிகளுக்கு வரி செலுத்தாமல் தமிழர் ஒருவர் சாதாரண தொலைத் தொடர்பு நிலையம் ஒன்றையே நடத்தமுடியாது என்ற நெருக்கடிகள் மக்களுக்கு இருப்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள். அப்படியிருக்க கப்பல்களை வைத்துக்கொண்டு வர்த்தகம் செய்த மகேஸ்வரனுக்கு புலிகளிடமிருந்து எத்தகைய நெருக்கடிகள் அச்சுறுத்தல்கள் இருந்திருக்கும் என்பதை ஊகித்துக் கொள்ளலாம். கொலைகளுக்கூடாக பிரச்சினைகளைத் தீர்க்கலாம் என்ற நம்பிக்கை எங்களுக்கு இல்லை.
Saturday, January 12, 2008
Subscribe to:
Posts (Atom)