www.jananayakam.net.ms or www.jananayakan.tk, Email: jananayakam.gmail.com ....

Sunday, July 3, 2011

தேர்தல் வருகிறது!… இனி வாக்குறுதிகளுக்கு இங்கு பஞ்சமில்லை!…



எம் இனிய தமிழ் மக்களே!…..

தேர்தல் வருகிறது!… இனி வாக்குறுதிகளுக்கு இங்கு பஞ்சமில்லை!…
தமிழர்களே! … உங்கள் ஒற்றுமையை இந்த தேர்தலில் காட்டுங்கள்,
உங்கள் உரிமைகளை நாம் பெற்றுத்தருவோம் என்று வீர முழக்கமிட்டு,
உங்களை வீதிக்கு அழைத்து விட்டு….

நீங்கள் அவலங்களை சுமக்கும் போதும், உங்கள் உறவுகள் துடி துடித்து மடிந்த போதும், உங்கள் வாக்குகளை சுருட்டிக்கொண்டு மக்களையும், மண்ணையும் கைவிட்டு ஓடிப்போனவர்களே மீண்டும் உங்கள் வாக்குகளைத் திருடுவதற்காக வாக்குறுதிகளை வழங்க வருகிறார்கள்…

உங்கள் வாக்குகளைப் பெற்றவர்கள் தங்களது அரசியல் பலத்தை பயன்படுத்தி உரிமைகளைப் பெற்றுத்தந்தார்களா?…. இல்லை…. நீங்கள் அவலப்படும்போது உங்கள் துயர் துடைக்க வந்தார்களா?…அதுவும் இல்லை…. எமது வரலாற்று வாழ்விடங்களை அபிவிருத்தியால் தூக்கி நிறுத்த வந்தார்களா?….எதுவுமில்லை….

தமிழர் ஐக்கியம் என்பது வெறுமனே வாக்குகளை மட்டும் அபகரிப்பதற்கான தேர்தல் கோசமல்ல. மக்களை ஏமாற்றி சுயலாப அரசியல் தலைமைகள் ஏற்கனவே பெற்றிருந்த அரசியல் பலத்தை சர்வதேச சமூகம் பல தடவை கண்டிருக்கிறது.

இதனால், சர்வதேச சமூகம் இவர்களை அங்கீகரித்திருந்ததா?…. இல்லை!…
அப்படி அங்கீகரித்திருத்திருந்தால் அதனால், என்ன நன்மைகள் எமது மக்களுக்கு கிடைத்திருந்தன?… சர்வதேச சமூகத்திடம் இருந்து எதை பெற்றுத்தந்தார்கள்?…

நன்மை செய்யாவிடினும், தீமையாவது செய்யாதிரு என்பதை உணர மறுத்து, தாம் பெற்ற அரசியல் பலத்தை எமது மக்களின் அழிவுக்கே பயன்படுத்திய சுயநல அரசியல் தலைமைகள், மறுபடியும் உங்கள் மத்தியில் சர்வதேச சமூகத்தின் பெயரை சொல்லி உங்களை ஏமாற்றி வாக்கெடுக்க வருகிறார்கள்.

அழுதும் பிள்ளையை அவளே பெறவேண்டும். ஆதரவும், அனுதாபமும் எங்கிருந்து கிடைத்தாலும் அதை சரியான முறையில் எமது மக்களுக்காக பயன்படுத்த வேண்டியவர்கள் நாமாகவே இருக்க முடியும்.

நேசத்திற்குரிய எம் தமிழ் மக்களே!…

வருகின்ற தேர்தல் அழிந்து, சிதைந்து போன எமது வரலாற்று வாழ்விடங்களைஅபிவிருத்தியால் தூக்கி நிறுத்த வேண்டிய அதிகாரங்களைப் பெறுவதற்கான தேர்தல்.

இந்த தேர்தலில் வெற்றி பெறுபவர்கள் அரசாங்கத்துடன் இணைந்து நின்றே எமது வரலாற்று வாழ்விடங்களை அபிவிருத்தி செய்ய முடியும்.

ஏனெனில்,…. உள்ளூராட்சி சபைகளுக்கான நிதிகளை பிரதானமாக வழங்கப்போவது அரசாங்கம் மட்டுமே. வெளி நாட்டு, மற்றும் வேறு நிதியுதவிகளையும் அரசாங்கத்தின் அனுமதியுடனேயே நாம் பெற்றுக்கொள்ள முடியும். ஆகவே அரசாங்கத்தோடு உறவு கொண்டிருக்கும் எமது வெற்றியின் மூலமே அனைத்து நிதிவளங்களையும் பெற்று, எமது வரலாற்று வாழ்விடங்களை அபிவிருத்தியால் தூக்கி நிறுத்த முடியும்.

ஈ.பி.டி.பி யினராகிய நாம் தமிழ் மக்களின் உரிமைக்குக் குரல் கொடுத்து, உரிமைகளைப் பெறுவதற்கு அரசாங்கத்துடன் உறவுக்குக் கரம் கொடுத்தும் நிற்பவர்கள்.

அரசியலுரிமைக்கான தீர்வு! அதற்கான அதிகாரப்பகிர்வு!
அழிவில் இருந்து எழுந்து நிமிர்ந்திட அபிவிருத்தி!…
அடிப்படை ஜனநாயக சுதந்திர உரிமை!

இவைகளுக்காகவே தொடர்ந்தும் உழைத்து வரும் ஈ.பி.டி.பி யினராகிய நாம் எதிர்வரும் தேர்தலிலும் இவைகளை எண்ணியே போட்டியிடுகின்றோம்..

எதிர்வரும் தேர்தலில் நீங்கள் அளிக்கப்போகும் வாக்குகள் ஆக்க சக்திகளுக்கு பலம் கொடுத்து, உங்களது நிமிர்ந்தெழும் காலத்தை நீங்களே உருவாக்குவதற்காகவா?…

அல்லது, அழிவு சக்திகளைப் பலப்படுத்தி அழிவில் இருந்து நிமிர்ந்;தெழ முடியாமல் மீண்டும் நீங்கள் நடுத்தெருவில் நிற்பதற்காகவா?….

என்றும் உங்கள் மத்தியில் நின்று, எக்காலத்திலும் உங்களை கைவிட்டு ஓடிப்போகாத செயல் வீரர்களான எமது கரங்களை உங்கள் வாக்குகள் பலப்படுத்தப்போகின்றனவா?…
அல்லது, சும்மா இருந்து கொண்டு, சுயலாப அறிக்கை மட்டும் விட்டுக்கொண்டு, தேர்தலுக்காக மட்டும் உங்களிடம் வாக்குகேட்டு வருபவர்களை பலப்படுத்தப்போகின்றனவா?…

உங்களால் தெரிவு செய்யப்படும் உள்ளூராட்சி சபைகள், செயற்பாடுகள் இன்றிசோர்ந்து கிடந்து, அங்கு வெறும் பெயர்ப்பலகைகள் மட்டும் தொங்கிக்கொண்டிருக்க வேண்டுமா?…

அல்லது செயற்திறன் மிக்கவர்களாகிய எமது கைகளில் உள்ளூராட்சி சபைகள் கிடைத்து, எமது வரலாற்று வாழ்விடங்களை அபிவிருத்தியால் துரித கதியில் தூக்கி நிறுத்த வேண்டுமா?…

பாசமிக்க எம் தேசத்து மக்களே!…

உரிமைகளைப் பெறுவதற்கு அழிவுகளற்ற, நடைமுறை சாத்தியமான வழிமுறையில் உறுதியோடு உழைத்து வரும் ஈ.பி..டி.பி யினராகிய நாம் ஒரு புறம்…

உரிமை… உரிமை… என்று கால காலமாகப் பேசிப்பேசியே எதனையும் பெற்றுத் தராமல,; காலம் கடத்தி, உங்களை அழிவுக்குள் தள்ளிவிட்டு அதை வைத்து வாக்குகளை மட்டும் அபகரிக்க வருவோர் இன்னொரு புறம்!…

யாருக்கு நீங்கள் வாக்களிக்கப்போகிறீர்கள்?… யாரை நீங்கள் பலப்படுத்த போகிறீர்கள்?…
மதிநுட்பமும், சாணக்கிய தந்திரமும் மறந்து, அர்த்தமற்ற வெற்றுக்கோஷங்களுக்குள் மயங்கிக் கிடந்த வரலாற்றை மாற்றியமைப்போம் வாருங்கள்!

எதிர்வரும் யாழ், கிளிநொச்சி மாவட்டங்களுக்கான உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் பல்வேறு கட்சிகளும் கலந்து போட்டியிடும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின்; உறவுக்குக் கரம் கொடுத்து, வெற்றிலைச் சின்னத்தில் நாம் போட்டியிடுகின்றோம்.

அபிவிருத்தி முதற்கொண்டு, அரசியல் தீர்வு வரை நீங்கள் அடைந்து பயன் பெற, எமது மண்ணில் நீங்கள் மகிழ்ந்து சிரிக்க, மதிநுட்பம் நிறைந்த எங்களது கரங்களைப் பலப்படுத்துங்கள்!

எங்களின் வெற்றி உங்களின் வெற்றியே!
மக்கள் பலத்தில், எங்கள் நிலத்தில் நிமிர்வோம்!…
நாம் தோற்றுப்போன சமூகம் அல்ல….
முயல்வோம்!…. வெல்வோம்!…. உளம் சோரோம்!…

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி)!