அவசரகாலச் சட்டம் நீடிப்பு பிரேரணை மீதான விவாதத்தில் ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்கள் 09.08.2011 திகதி பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை.
நீண்ட காலமாக நீடித்து வரும் அவசரகாலச் சட்டத்தை, முடிவுக்குக் கொண்டு வரவேண்டியதைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருக்கும் ஒரு சந்தர்ப்பத்தில், இந்த உரையை ஆற்றுகிறேன்.
ஒரு பக்கத்தில் அவசரகாலச் சட்டத்தை நீக்குவதைப் பற்றிப் பேசப்படுகிறது. மறுபக்கத்தில் அவர்களே அவசர காலச் சட்டத்தை நீடிப்பதற்கான காரணங்களை உருவாக்கி கொண்டிருக்கின்றனர்.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினராகிய நாம், அவசரகாலச் சட்டத்தை அடிப்படையில் எதிர்க்கின்றோம் என்பதை இந்த அவையிலே தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றேன்.
அவசரகாலச் சட்டத்தை நடைமுறை ரீதியாக நீக்குவதற்காகவே நாங்கள் பாடுபடுகின்றோம். நாட்டிலே நிரந்தர அமைதியும் முழுமையான இயல்புச் சூழலும் உருவாகும்போது இந்த மாதிரியான நெருக்கடிகள் தானாகவே தீர்ந்து விடும்.
ஆனால், நாட்டிலே அமைதி நிலை உருவாகுவதைச் சிலர் விரும்புவதில்லை. அவர்கள் எப்போதும் இனமுரணை வளர்த்து, பிரச்சினைகளை உருவாக்கி, அதிலேயே பிழைப்பு நடத்த விரும்புகின்றனர்.
இப்படி அமைதிக்கு எதிராகச் செயற்பட்டுக் கொண்டு ஜனநாயகத்தைப் பற்றியும் தீர்வைப் பற்றியும் எப்படிச் சிந்திக்க முடியும்? இவர்கள், அமைதியைப் பற்றிப் பேசுவார்கள். ஆனால், மறு பக்கத்தில் அமைதியைச் சீரழிக்கும் விதமாக நடந்து கொள்வார்கள்.
ஜனநாயகத்தைப் பற்றிப் பேசுவார்கள். ஆனால், அந்த ஜனநாயகத்துக்கே விரோதமாகச் செயற்படுவார்கள். ஊடக சுதந்திரத்தைப் பற்றிப் பேசுவார்கள். அப்படிப் பேசிக் கொண்டே ஊடகங்களைத் தவறாக வழிநடத்துவார்கள்.
இதுதான் இந்த நாட்டின் அவல நிலையாகும். இதுதான் இந்த நாட்டை மேலும் மேலும் நெருக்கடிக்குள்ளாக்கிக் கொண்டிருக்கிறது.
மக்களை ஏமாற்றி, நாட்டைச் சீரழிக்கும் மிக மோசமான அரசியலை முன்னெடுப்போர், இன்னும் திருந்தவேயில்லை. இவர்களை மக்கள் இன்னும் அடையாளங் காணாமல் இருப்பதே வேதனைக்குரியது.
மக்களை ஏமாற்றும் காரியங்கள் தொடர்ந்தும் இந்த நாட்டிலே நடைபெற்றுக் கொண்டிருப்பதை முற்போக்காகச் சிந்திப்போர் புரிந்து கொள்வர். பெரும்பாலான பத்திரிகைகள் மக்களை முட்டாள்களாக வைத்திருக்கவே விரும்புகின்றன.
அரசியல்வாதிகளுக்கு நிகராகச் சில பத்திரிகையாளர்கள் நடந்து கொள்கின்றனர். ஊடகங்கள் மக்களுக்கு உண்மைகளைச் சொல்ல வேண்டும். மக்களை ஏமாற்றக் கூடாது. மக்களை அழிவுப் பாதைக்குத் தள்ளக் கூடாது. மக்களுக்குத் துரோகமிழைக்கக் கூடாது.
போருக்குப் பின்னர் உருவாக வேண்டிய நிரந்தரத் தீர்வுக்காகவும் அமைதிக்காகவும் நியாயமான வழிவகைகளைப்பற்றி ஆக்கபூர்வமான கருத்துக்களை ஊடகங்கள் வெளிப்படுத்த வேண்டும்.
அத்தகைய பணிகளைச் செய்வதே இந்த நாட்டுக்கு இன்று அவசியமான பணியாக இருக்கிறது. சில ஊடகங்கள் பல சவால்களின் மத்தியில் இந்தப் பணியைச் செய்து வருகின்றன. அவற்றை நாம் பாராட்ட வேண்டும்.
அரசியல் என்பது ஆக்கத்தையும் தரும். தவறினால், தவறாக தெரிவுகளைச் செய்தால், அது அழிவையும் தரும் என்பதை மக்களுக்கு உணர்த்த வேண்டும்.
ஊடகத்துறை என்பது மகத்தான பணிக்குரிய ஒரு மாண்புடைய துறையாகும். ஆனால், அதைப் புரிந்து கொள்ளாத பலர் தங்கள் விருப்பங்களையே முதன்மைப்படுத்திப் பத்திரிகைகளில் பிரசுரிக்கிறார்கள்.
அப்படிச் செய்வது ஊடகத்துறைக்குச் செய்யும் அநீதியாகும். உண்மை, நடுநிலை, சத்தியம், யதார்த்தம் என்பவற்றை ஆதாரமாகக் கொண்டே ஊடகங்கள் இயங்க வேண்டும்.
அவசரகாலச் சட்டத்தினால் ஊடக சுதந்திரமும் பாதிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை இந்த அவசரகாலச்சட்டத்தை நீடிப்பதற்கான காரணங்களைப் பேணுவதில் ஊடகங்களும் பங்காற்றியிருக்கின்றன. அண்மையில் - யாழ்ப்பாணத்திலே குகநாதன் என்ற ஒரு மூத்த ஊடகவியலாளர் தாக்கப்பட்டுள்ளார்.
இனந்தெரியாதவர்களால், இந்தப் பத்திரிகையாளர் தாக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவத்தை நான் கண்டிக்கிறேன். இந்தத் தாக்குதலைச் செய்தவர்களைக் கண்டு பிடித்துச் சட்டத்தின் முன்னே நிறுத்த வேண்டும்.
இந்தத் தாக்குதலை நடத்தியவர்கள் தனியே குகநாதன் என்ற ஊடகவியலாளரையோ, ஒரு தனி மனிதரையோ மட்டும் தாக்கவில்லை.
அவர்கள் இந்த நாட்டின் அமைதிக்கு அச்சுறுத்தலாக இருக்கின்றனர். இயல்பு வாழ்க்கையின் மீது நம்பிக்கை வைத்திருக்கும் மக்களுடைய நம்பிக்கையின் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள்.
ஊடகச் சுதந்திரத்தின் மீது தாக்குதல் செய்திருக்கின்றனர். இந்த நாட்டின் ஜனநாயகத்திற்குச் சவாலாக இருக்கின்றனர். அதாவது, இந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கும் அரசாங்கம் உருவாக்கி வருகின்ற நன்மையான காரியங்களுக்கெல்லாம் எதிராகச் செயற்பட்டிருக்கிறார்கள்.
ஆகவேதான், அவர்களைக் கண்டு பிடித்து சட்டத்தின் முன்னே நிறுத்த வேண்டும் என்று கூறுகிறேன். யாழ்ப்பாணத்தில் உதயன் பத்திரிகை தொடர்ச்சியாக இத்தகைய அச்சுறுத்தலுக்குள்ளாகுவதையிட்டு என்னுடைய கவலைகளையும் இங்கே பதிவு செய்கிறேன்.
திரு. குகநாதன் என்னுடன் மிக நெருக்கமாகப் பழகியிருக்கிறார். அவர் பணியாற்றும் பத்திரிகை நிறுவனத்தின் விருப்பங்களுக்கு அப்பாலும் அவர் எம்முடன் உறவைக் கொண்டிருந்தவர். பல சந்தர்ப்பங்களில் பல விடயங்களைப் பற்றி அவர் எம்முடன் மனந்திறந்து பேசியிருக்கிறார்.
அப்படியான ஒருவர் மீது நடத்தப்பட்ட மிக மோசமான தாக்குதலை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
பெரும் சிரமங்களின் மத்தியில் உருவாகி வருகின்ற இயல்பு வாழ்வையும் அமைதிச் சூழலையும் கெடுப்போரை நாம் அனுமதிக்கவே முடியாது.
நாங்கள் அமைதிக்காக உழைக்கிறோம். ஜனநாயகச் சூழல் ஒன்றை வலுப்படுத்துவதற்காகப் பாடுபடுகிறோம்.
நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைத்தேர்தலில் எம்மையும் எமது ஆதரவாளர்களையும் சீ ண்டும் விதமாகப் பலர் நடந்து கொண்டனர். குறிப்பாக எமக்கு எதிராகப் போட்டியிட்ட தரப்பினர் மக்களைக் குழப்பும் விதமான பரப்புரைகளிலும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டனர். மக்களை அச்சுறுத்தும்
நடவடிக்கைகள் பலவற்றைக்கூடச் செய்திருந்தனர்.
ஆனால், இவற்றையெல்லாம் சகித்துக் கொண்டு, நாம் ஜனநாயகத்தைப் பேணும் வழிகளில் உறுதியாக நின்றோம். தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் கூட இவர்களுடைய மோசமான நடவடிக்கைகள் தொடர்ந்தன.
பொய் பிரச்சாரங்களும், கட்டுக்கதைகளும், வதந்தி பரப்புதல்களும் என்று அமைந்திருந்த அந்த நாட்களின் நடவடிக்கைகள், நிச்சயம் நல்லதொரு அரசியலுக்கான வழிமுறையை உருவாக்கப்போவதில்லை.
அதிலும் இளைய தலைமுறையினரைப் பலியிடும் ஒரு தேர்தலையே இந்தத் தேர்தலில் அந்தச் சக்திகள் பயன்படுத்தின என்பதையும் இங்கே, இந்த மன்றிலே வேதனையுடன் பதிவு செய்கிறேன். இந்தத் தவறான தேர்வுக்காக நாளைய சமூகம் வருந்த வேண்டிய நிலை உருவாகக் கூடிய அபாயமே தெரிகிறது என்பதையும் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
கௌரவ சபாநாயகர் அவர்களே!
இந்த அவசரகாலச் சட்ட நீடிப்பானது அடுத்த தலைமுறைகளுக்கும் பரிமாறப்படக் கூடாது என்பதே எமது விருப்பமாகும். இதை இங்கே நான் அழுத்தமாகக் குறிப்பிடுகிறேன்.
அவசரகாலச் சட்டமானது ஜனநாயக நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தக் கூடியது என்பதால் நிச்சயம் இதை நாம் நீக்கியே ஆகவேண்டும். ஆனால், அதற்கான சூழலையும் நாம் உருவாக்க வேண்டும் என்பதே நாம் கவனிக்க வேண்டியது. அமைதியைப் பற்றிக் கதைப்பது முக்கியமானதல்ல. அமைதிக்காக உழைக்க வேண்டும். தீர்வைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்பது முக்கியமானதல்ல. தீர்வொன்றைப் பெறுவதற்காக நம்பிக்கையோடும் விசுவாசத்தோடும் பாடுபட வேண்டும். அப்படியே அவசரகாலச் சட்டத்தை நீக்குவதற்கான சூழலையும் நாம் அனைவரும் இணைந்து உருவாக்க வேண்டும்.
இப்பொழுது யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்துக்கான பிரதிநிதித்துவத்தைக் குறைப்பதற்கான அறிவிப்பு வந்துள்ளது. இந்த விடயத்தை நாம் அரசுக்கு உரிய முறையில் புரிந்து கொள்ள வைக்க முயற்சிக்கிறோம்.
வடக்கிலே இன்னும் முழுமையான வளர்ச்சிப்போக்கு எட்டப்படவில்லை. நாட்டின் ஏனைய பகுதிகளைப் போல இந்தப் பகுதிகளின் நிலைமைகளும் வளர்ச்சியடையும் போது இந்த விடயத்தைப் பற்றித் தீர்மானிக்கலாம் என்று அரசாங்கத்துக்கு எடுத்துரைத்துள்ளோம்.
இது விடயத்தில் அரசாங்கம் சில காலத்துக்கு விட்டுக் கொடுப்புக்களைச் செய்ய வேண்டும். ஒரு முழுமையான இயல்பு நிலை உருவாகும் வரை இந்த மாதிரியான பிரச்சினைகளில் நாம் ஒன்று பட்டு நின்றே செயற்பட வேண்டும். என்று கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட அனைத்துத் தரப்பினருக்கும் அழைப்பை விடுத்துள்ளார்.
இந்த நாட்டிலே இப்போது தேவைப்படுவதெல்லாம், ஒருங்கிணைந்த செயற்பாடுகளே. ஒருங்கிணைந்த செயற்பாடுகளின் மூலமே மக்களுக்கு நன்மைகளைச் செய்ய முடியும். அவற்றின் மூலமே இந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியும். எனினும் முரண்பாடுகளும் பிரிவுகளும் பிரச்சினைகளும் இருக்குமானால், அது மீண்டும் அழிவுக்கும் நெருக்கடிக்குமே வழியேற்படுத்தும்.
ஆகவே தான் நாம் ஒற்றுமையைப் பற்றிப் பேசுகிறோம். நடைமுறைக்குச் சாத்தியமான மாற்றங்களைப் பற்றிக் கதைக்கின்றோம். இன்று நாங்கள் மாற்று அரசியல் தேர்வுக்குச் செல்ல வேண்டும். இந்த நாட்டிலே அமைதியைப் பற்றிச் சிந்திக்கும் ஒரு பெரும்போக்கை நாம் உருவாக்க வேண்டும். இதுவே இன்று அவசியமாகும் என நம்புகிறேன்.
உலகப் போக்குகளை விளங்கிக்கொண்டு, இலங்கைத்தீவின் யதார்த்தத்துக்குப் பொருத்தமான அரசியல் தேர்வுக்குக் கருத்தொற்றுமையுடன் நாம் செயற்படுவது இன்றைய அவசியமாகும். இதையே கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார்.
தேர்தல்காலக் கூட்டுகளை அமைப்பதில் மட்டும் கரிசனை கொள்ளாமல், தீர்வைக் காண்பதற்கான கூட்டுகளை அமைப்பதைப் பற்றிச் சிந்திக்க வேண்டும் என்று அவர் கூறியிருப்பது கவனிக்கத்தக்கது.
மக்களுக்காகவே கட்சிகளின் இணைவுகள் இருக்க வேண்டும். கட்சிகள் எடுக்கின்ற அரசியல் தீர்மானங்கள் எல்லாம் மக்களுக்கு நன்மை தருவதாக அமைய வேண்டும். ஆனால், சில கட்சிகள் எடுக்கின்ற தீர்மானங்கள் எல்லாம் கட்சியினர்களுக்கான நன்மைகளைக் கொடுத்துள்ளனவே தவிர, மக்களுக்கு நன்மைகளைக் கொடுத்ததாக இல்லை.
ஆகையால்தான் மக்கள் நம்பிக்கையோடு வாக்களித்த பிறகும் பாதிக்கப்பட்ட நிலையிலேயே வாழ வேண்டியேற்பட்டது. கடந்த காலங்களில் தமிழ்மக்கள் ஒன்று பட்டு நின்றே தங்கள் ஆதரவை தமிழ்க் கட்சிகளுக்குவழங்கி இருக்கிறார்கள்.
ஆனால், மக்களின் பெரும் ஆதரவைப் பெற்றுக் கொண்ட இந்தக் கட்சிகள், மக்களுக்குத் தேவையானவற்றைப் பெற்றுக் கொடுத்தனவா? அல்லது மக்களுடைய பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதில் எவ்வளவு தூரம் அர்ப்பணிப்போடும் விவேகத்தோடும் சகிப்புணர்வோடும் நடந்து கொண்டன?
இதையே இன்று நாம் சிந்திக்க வேண்டும். தொடர்ந்தும் யாரும் பழைய வாய்ப்பாடுகளையே பாடிக் கொண்டிருக்க முடியாது.
உலகம் மிக வேகமாக வளர்ச்சியடைந்து செல்கிறது. உலகத்தின் போக்குகளும் நிலைமைகளும் மாற்றங்களுக்குள்ளாகி வருகின்றன.
இதைப் புரிந்து கொண்டதால், பின்தங்கிய நிலையில் இருந்த சமூகங்கள் எல்லாம் மிகவும் விரைவான முன்னேற்றத்தையும் வளர்ச்சியையும் எட்டியுள்ளன.
ஆனால், இலங்கையின் நிலைமைகள் இன்னும் நெருக்கடிக்குள்ளேயே இருக்கின்றன. இது எதனைக் காட்டுகிறது. இதையே இன்றைய இலங்கை மக்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
மக்களுடைய மனவுணர்வுகளையும் அவர்களுடைய எதிர்காலத்தையும் பொறுப்போடு புரிந்து கொண்டு, அரசியல் செயற்பாட்டை முன்னெடுக்க வேண்டிய மிக முக்கிய கட்டத்தில் இன்று நாங்கள் இருக்கிறோம். ஆனால், இதற்குச் சில அரசியல் சக்திகள் இணங்கி வருவதில்லை. அவர்களுக்கு மக்களுடைய தேவைகளும் மன விருப்பங்களும் என்னவென்று தெரிவதில்லை.
கௌரவ சபாநாயகர் அவர்களே!
இவர்களைப் பொறுத்தவரையில், சிந்திக்கும் திறனற்ற ஒரு மக்கள் திரளை அரசியல் லாபங்களுக்காக உருவாக்குவதே நோக்கமாக இருக்கிறது. இதுதான் கடந்த காலங்களிலும் நடந்தது.
மக்கள் சிந்திக்கத் தொடங்கி விட்டால், அவர்களுக்கு உண்மை நிலை என்னவென்று தெரியும். யதார்த்தங்கள் புரிந்து விடும் என்று இவர்கள் பயப்படுகிறார்கள். ஆகவே மக்களை ஒரு வகையான பொய் மயக்கத்தில், போதையில் வைத்திருக்க இவர்கள் முயற்சிக்கின்றனர்.
அப்படி மக்களுக்கு எல்லாமே தெரிந்து விட்டால், தங்களுடைய இரட்டை வேடங்களையும் பொய்களையும் ஏமாற்றுகளையும் மக்கள் கண்டு கொள்வார்கள். பின்னர் தங்களுடைய அரசியல் இருப்பே ஆட்டம் கண்டு விடும் என்று இவர்கள் அச்சமடைகின்றனர்.
எனவேதான் மக்களை இருட்டுக்குள் வைத்திருக்க இவர்கள் விரும்புகிறார்கள். இதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். இது அறிவின் யுகம். அறிவே இன்று எல்லாத் தளங்களிலும் ஆட்சி செலுத்துகிறது. மக்கள் சுதந்திரமாகச் சிந்திக்க வேண்டும். அரசியல் தரப்புகள் தொடக்கம் ஊடகங்கள் வரையில் இந்த அறிவை விளங்கிச் செயற்படும் ஒரு மக்கள் திரளை உருவாக்குவதற்காக உழைக்க வேண்டும். உண்மைகளை மக்கள் அறிந்து கொள்வதற்கு வழியை ஏற்படுத்த வேண்டும். ஆனால், அப்படி இலங்கையில் நடக்கிறதா?
கௌரவ சபாநாயகர் அவர்களே!
கடந்த காலத்தில் மிக மோசமான ஒரு போரை இந்த நாடு சந்தித்திருக்கிறது. இந்த நாடே தாங்கிக் கொள்ள முடியாத அழிவுகளும் அவலங்களும் இந்த நாட்டில் ஏற்பட்டிருக்கின்றன.
நடந்த போரினால், இலங்கைத்தீவின் அனைத்துச் சமூகங்களும் பாதிப்புகளைச் சந்தித்திருக்கின்றன. அதிலும் வடக்குக் கிழக்கில் உள்ள மக்கள் மிகக் கொடுமையான அழிவுகளையும் இழப்புகளையும் சந்தித்திருக்கின்றனர்.
அந்தப் போரின் காயங்களில் இருந்தும் அவலங்களில் இருந்தும் இன்னும் மீள முடியாத நிலையில் அந்த மக்கள் வாழ்கின்றனர். அவர்களை அந்த அவல வாழ்விலிருந்து மீட்டு, மீண்டும் இயல்பு வாழ்க்கைக்குக் கொண்டு வர வேண்டிய அவசியப் பணி அனைவருக்கும் உரியதாக இருக்கிறது.
அந்தப் பணிகளைச் செய்வதை விடுத்து, அரசாங்கத்தைக் குற்றம் சாட்டுவதிலும், மக்களுடைய கவனங்களைத் திசை திருப்பும் வகையிலும் செயற்படுகிறார்கள்.எல்லாவற்றையும் எதிர்பதன் மூலமாகக் காலத்தைக் கடத்துவோர் மீ ண்டும் இலங்கைத் தீவில் அழிவுகளையே ஏற்படுத்த முனைகின்றனர்.
அரசாங்கம் அரசியல் தீர்வுக்கான ஆயத்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அதேவேளை பாதிக்கப்பட்ட பிரதேசங்களை முதன்மைப்படுத்தி அபிவிருத்திப் பணிகளைச் செய்து வருகிறது. மக்களுக்கு அங்கே நிறையப் பிரச்சினைகள் இருக்கின்றன. இந்த நாட்டிலே உள்ள ஏனைய மக்களை
விடவும் வடக்குக் கிழக்குப் பகுதி மக்களின் பிரச்சினைகள் அதிகமானவையாக இருக்கின்றன.
அதிலும் போரினால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களின் பிரச்சினைகள் இன்னும் வித்தியாசமானவையாகும்.
ஆகவே அங்குள்ள மக்களின் நலன்களுக்கும் முன்னேற்றத்துக்குமான மறுவாழ்வுப் பணிகளை அரசுடன் இணைந்து நாம் செய்து வருகின்றோம்.
ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட செயற்றிட்டம் அங்கே நடைமுறைப் படுத்தப்படுகிறது.
இதை மறுத்துக் கொண்டும் மறைக்கும் விதமாகவும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் எதுவுமே நடக்கவில்லை என்று கூறுவது எவ்வளவு மோசமான செயலாகும். மக்களுடைய தேவைகளை நிறைவேற்றும் முக்கிய பணியைக் கொச்சைப்படுத்தி, மக்களுடைய அவல நிலையைக் கொச்சைப்படுத்திச் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கே பேசியிருந்தனர்.
மக்களுக்கும் இவர்களுக்கும் எவ்வளவு தூரம் இடைவெளி இருக்கிறது என்பதை இவர்களுடைய இந்த மனநிலை தெளிவாகவே காட்டுகிறது.
அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கைகளில் குறைபாடுகள் இருக்கலாம். அந்தக் குறைபாடுகள் உடனுக்குடன் நிவர்த்தி செய்யப்படுகின்றன.
குறைபாடுகளைத் தெரிவிக்கக்கூடிய ஒரு சூழல் அங்கே உருவாக்கப்பட்டுள்ளது. மக்கள் துணிச்சலுடன் தங்களின் பிரச்சினைகளைப் பேசுகிறார்கள். மக்கள் தெரிவிக்கும் அபிப்பிராயங்களின் அடிப்படையில்
உரிய நடவடிக்கைகள் உடனடியாகவே எடுக்கப்படுகின்றன.
இது பல மாற்றங்களை அடையாளப்படுத்துகிறது. இந்த மாற்றங்கள் எல்லாம் வெகு விரைவில் பல முன்னேற்றங்களை ஏற்படுத்தும். குறிப்பாக வடக்குக் கிழக்கில் சிவில் நிர்வாகக் கட்டமைப்பு பலமாகி வருகிறது. இதையே நாம் எதிர்பார்க்கின்றோம். இதையே நாங்கள் விரும்புகிறோம்.
மக்களின் முன்னேற்றமும் மகிழ்ச்சியும் அவர்களுடைய சிறப்பான எதிர்காலமுமே இந்த நாட்டை வளர்ச்சியடைய வைக்கும். இந்த நிலையில், மனச்சாட்சியும் மனித நேயமும் உள்ள எவரும் இந்தத் துயரப்படும் மக்களுக்கெதிராகச் சிந்திக்கவே மாட்டார்கள் என நம்புகிறேன்.
இங்கே நான் யாரையும் குற்றம் சாட்ட முற்படவில்லை. நிலைமைகள் சீராகவேண்டும். மக்களுக்கான நன்மைகள் ஏற்பட வேண்டும் என்ற எண்ணத்திலேயே இந்த அபிப்பிராயங்களைத் தெரிவித்துள்ளேன்.
உண்மையில் நாட்டில் ஏற்பட்டு வரும் அமைதிச் சூழலை பல சக்திகள் விரும்பவில்லை. இதை அண்மைக்கால நிலவரங்கள் தெளிவாகவே எடுத்துக் காட்டுகின்றன.
மீண்டும் இனவாதத்தைக் கூர்மையாக்கும் அபாயச் சூழல் ஒன்றுக்கு இந்தச் சக்திகள் முயற்சிக்கின்றன. இதற்கு ஊடகங்கள்கூடத் துணைநிற்பதே மிகவும் கவலைக்குரியதாகும். நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின்போது இந்த அபாயப் போக்கின் வளர்ச்சியை நாம் தெளிவாகவே பார்க்க முடிந்தது. இந்தப் போக்கு வளர்ச்சியடைவதற்கு யாரும் இடமளிக்கக்கூடாது.
குறிப்பாக மக்கள் இந்த விடயத்தில் அவதானமாக இருக்க வேண்டும். ஏனெனில் எப்போதும் மக்களே அதிக பாதிப்பைச் சந்திப்போராக இருப்பதால், அவர்களே மிகவும் விழிப்பாகச் செயற்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
நாட்டில் அமைதியையும் சுபீட்சத்தையும் ஏற்படுத்த வேண்டிய அவசியத்தை விரும்புகின்ற தரப்பைச் சேர்ந்தவன் என்ற வகையில், அவசரகாலச் சட்டமானது விரைவில் நீக்கப்படுவதற்கான சூழல் உருவாக்கப்பட வேண்டும் என்று கேட்டு என்னுடைய உரையை நிறைவுசெய்து கொள்கிறேன்.
அத்துடன் இந்த மன்றிலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ மாவை சேனாதிராசா தெரிவிக்கும் போது வன்னியிலே 90 ஆயிரம் மக்கள் மட்டும் தான் இருந்ததாக கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கூறியிருந்தார் என்று கருத்தை முற்றாக நான்
மறுத்துரைக்கின்றேன்.
எந்த சந்தர்ப்பத்திலும் கௌரவ அமைச்சர் அவர்கள் அப்படிச் சொல்லவில்லை. வன்னியிலே மூன்றரை இலட்சம் மக்கள் இருக்கின்றனர் என்பதை அன்று நாங்கள் அரசாங்கத்திற்கு எடுத்துச் சொல்லியிருந்தோம். போரிலே மக்கள் கொல்லப்படவில்லை என்று கௌரவ அமைச்சர்
டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஒருபோதும் கூறவில்லை. அதையெல்லாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய நீங்களும் சில ஊடகங்களுமே திரிவு படுத்தி கூறிவருகின்றீர்கள்.
அன்று போரிலே மக்கள் கொல்லப்படுவதை பற்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய நீங்கள் எந்தக் கருத்துக்களையும் வெளிப்படுத்தவில்லை. அப்போது பாராளுமன்றத்திலிருந்த 22 பேரும் போரை நிறுத்துவதற்காகவே மக்களை பாதுகாப்பதற்காகவோ எந்த முயற்சிகளையும் எடுக்கவில்லை.
மக்களுக்காக நீங்கள் எதுவுமே செய்யவில்லை. கிளிநொச்சியை அரசாங்கம் கைப்பற்றிய பின்னரும் அரசாங்கம் விடுதலைப்புலிகளுடன் பேசத்
தயாராகவிருந்தது. சர்வதேச சமூகம் கூட அமைதியை வலியுறுத்தியது. ஆனால் அப்போதும் கூட்டமைப்பினராகிய நீங்களும் வாய் திறக்காமலே இருந்தீர்கள்.
மக்கள் போரிலே சிக்கியிருந்த போது நீங்கள் அவர்களை பாதுகாப்பதற்கு பதிலாக கூட்டமைப்பிலிருந்த நீங்கள் வெளிநாடுகளுக்கு தப்பியோடினீர்கள். ஆகையால் மக்களுடைய கொலைகளுக்கு நீங்களே பொறுப்பாளிகள். அதை
நீங்கள் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என்பதை இங்கே சொல்லிக் கொள்கிறேன்.
நன்றி.