இந்த தேர்தல் களத்தில் ஆயுதம் தரித்த கட்சிகளும் வாக்குச் சேகரிப்பில் மும்முரம் காட்டி வருவதனை காணக்கூடியதாக இருக்கின்றது, ஜனநாயகத் தேர்தலொன்றில் ஆயுத முனையில் வாக்குச் சேகரிப்பதென்பது நகைப்புக்குரிய விடையமாக கருதப்படுகின்றது.
சுதந்திரமான நீதியான தேர்தலொன்று நடைபெறக்கூடிய ஜதார்த்த சூழ்நிலை இப்பகுதியில் இல்லாததனால் அநீதியான முறையில் தெரிவுகள் இடம்பெற வாய்ப்புகள் அதிகம் இருப்பதே கள நிலவரமாகும்.
ஆயுததாரிகள் தேர்தல் களத்தில் குதித்துள்ளதால் வாக்குகள் வாக்காளர்களின்றியே பதிவு செய்யப்படக்கூடிய அபாயம் ஏற்படுமென அஞ்சப்படுகின்றது.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து பிரிந்து சென்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளாக (TMVP) மாறிய கருணா, பிள்ளையான் அணியினர் தங்கள் பாதுகாப்புக்கென துப்பாக்கிகளை தம்வசமே வைத்திருப்பது நாடறிந்த விடயம். இவர்கள் மட்டக்களப்பு மாநகர சபை தேர்தலில் ஆளும் கட்சியுடன் இணைந்தும் மற்றைய உள்ளூராட்சி சபைகளில் தனித்தும் போட்டியிடுகின்றனர்.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (EPDP), ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி -நாபா (EPRLF), தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE) ஆகிய மூன்று அமைப்பினரும் இணைந்து சுயேச்சைக் குழுவாக அப்பிள் சின்னத்தில் போட்டி போடுகின்றனர்.
ஈழப் புரட்சி அமைப்பு (ஈரோஸ்)எனக் கூறிக் கொள்ளும் ஈழவர் ஜனநாயக முன்னணியும் இன்னும் பல சுயேச்சைக் குழுக்களும் மற்றும் முஸ்லிம் குழுக்களும் போட்டி போட அபேட்சகர்களை நிறுத்தியுள்ளனர்.
இத்தேர்தலில் சுயேச்சைக் குழுக்களாக 61 வேட்பு மனுக்களும் கட்சிகளின் சார்பில் 38 வேட்புமனுக்களும் தாக்கல் செய்யப்பட்டிருந்த போதிலும் அவற்றில் 8 சுயேச்சைக் குழுக்களின் வேட்பு மனுக்களும் ஒரு அரசியல் கட்சியின் வேட்பு மனுவும் நிராகரிக்கப்பட்டு 52 வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு தேர்தலுக்கு தயாராகி உள்ளன.
நடைபெறவிருக்கும் தேர்தல் சுதந்திரமாகவும் நியாமாகவும் நடைபெறுமாவென இலங்கைக்கான அமெரிக்கத் தூதர் ராபர்ட் ஓ பிளேக் சந்தேகம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.