www.jananayakam.net.ms or www.jananayakan.tk, Email: jananayakam.gmail.com ....

Saturday, March 8, 2008

மட்டக்களப்பு உள்ளுராட்சி சபைத் தேர்தல் - ஈபிடிபி. மட்டு. மாவட்ட பிரதம அமைப்பாளர் ஏ.ஆர்.புரட்சிமணி

மட்டக்களப்பு உள்ளுராட்சி சபைத் தேர்தல் தொடர்பாக ஈ.பி.டி.பி. மட்டக்களப்பு மாவட்ட பிரதம அமைப்பாளர் ஏ.ஆர்.புரட்சிமணி எனும் அ.இராசமாணிக்கம் அவர்கள் தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய செவ்வி.


பேட்டி கண்டவர் :- பி.வீரசிங்கம்
கேள்வி :- மட்டக்களப்பு மாவட்டத்தில் கட்சியின் அரசியல் நடவடிக்கைகள் பற்றி கூறுங்கள் ?

பதில் :- கடந்த 16 வருடங்களுக்கு மேலாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்களோடு மக்களாக இருந்து செயற்பட்டு வருகிறோம். கட்சியன் தலைவர் டக்ளஸ் தேவானந்தா பல்வேறு உயிரச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் மக்களுக்காகத் தொடர்ந்து சேவையாற்றிவருகின்றார். திருமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மூவரைப் பாராளுமன்ற உறுப்பினர்களாக்கியிருந்தமை அவரிடம் பிரதேச வேறுபாடுகள் இருந்ததில்லை என்பதற்கு சிறந்த சான்றாகும். அவ்வாறு தெரிவு செய்யப்பட்டவர்களில் நானும் ஒருவன். அந்தந்த மாவட்டங்களின் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொறுப்பையும் ஒப்படைத்தார் அமைச்சர் டக்ளஸ். பிரதேசம், இனம் என்று எதையும் பிரித்துப் பார்க்காமல் சகலரையும் சமமாக பார்க்கும் அதேவேளை, சிறந்த ஜனநாயகத் தலைமைத்துவத்தையும் எமக்கு வழங்கிக் கொண்டிருந்தார்.

கேள்வி :- மட்டக்களப்பு உள்ளுராட்சிச் சபைத் தேர்தலில் உங்கள் கட்சியின் பங்களிப்பு எப்படி?

பதில் :- மட்டக்களப்பு உள்ளுராட்சி சபைத் தேர்தலைப் பொறுத்த வரையில் ஈ.பி.ஆர்.எல்.எப்., புளொட் மற்றும் எமது கட்சியும் ஒன்றிணைந்து சுயேற்சைக் குழுவாக அப்பிள் பழ சின்னத்தில் போட்டியிடுகின்றோம்.
மக்கள் மத்தியில் இருந்து அவர்களின் துன்ப துயரங்களில் பங்கெடுத்துக் கொண்டவர்கள்தான் இந்தத் தேர்தலில் போட்டியிடுகின்றனர். மக்கள் எதிர்நோக்கும் அன்றாடப் பிரச்சினைகள் தொடக்கம் சகல பிரச்சினைகளுக்கும் முகம் கொடுத்து முடிந்த வரை அவர்களுக்கு உதவுவதுடன், மக்களின் சிறந்த சேவகர்களாகவும் தொடர்ந்து செயற்படுவார்கள்.

கேள்வி :- ஜனநாயக ரீதியில் நடைபெறும் இந்தத் தேர்தலில் மக்கள் வாக்களிக்க ஆர்வமாக இருக்கின்றனரா?

பதில் :- நீண்ட காலத்தின் பின்னர் இத்தேர்தல் நடைபெறுகிறது. கடந்த காலங்களில் பல்வேறு அச்சுறுத்தல்களின் மத்தியில்தான் தேர்தல்கள் நடந்தன. அத்தேர்தல்களில் மக்களின் பெயரால் வாக்குகள் அளிக்கப்பட்டனவே தவிர, மக்கள் முழுமையாக பங்குபெறவில்லை. இந்தத் தேர்தலை மக்கள் சரியாகப் பயன்படுத்தவேண்டும். வாக்களிக்கத் தயங்குவதோ அல்லது தேர்தலை நிராகரிப்பதோ கடந்த காலங்களைப் போல ஆயுத அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் மீண்டும் வாழவேண்டிய துர்ப்பாக்கிய நிலையைத் தோற்றுவிக்கக்கூடும்.
ஆயுத அச்சுறுத்தலற்ற சூழலை ஏற்படுத்தவும், மக்கள் சுதந்திரமாக நடமாடுவதற்கும், தமது பிள்ளைகள் அச்சமின்றி பாடசாலைகளுக்குச் சென்று கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்குமான ஒரு சூழலை உருவாக்கும் விதத்தில் மக்கள் தமது வாக்குகளை அளிக்கவேண்டும்.

கேள்வி :- மட்டக்களப்பு உள்ளுராட்சி சபைத் தேர்தல் கள நிலவரங்கள் சுதந்திரமானதும், நீதியாதுமான தேர்தலை நடத்தக் கூடியதாக இல்லையென ஐ.தே.க மற்றும் சில அமைப்புக்கள் உள்ளனவே !

பதில் :- இதற்கு முன்னர் பல தேர்தல்கள் நடைபெற்றன. அப்போதும் யுத்தச் சூழல் இருந்ததை யாரும் மறுக்க முடியாது. அப்போதைய நிலைமைகளுடன் ஒப்பிடும்போது அந்தளவிற்கு மோசமான சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை. தேர்தல் பற்றிய அறிவிப்பு வெளியான நாள் தொடக்கம் இன்று வரையுள்ள நிலைமைகளைப் பார்த்தால் ஆங்காங்கே சிறு சிறு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. பாரதூரமான சம்பவங்கள் எதுவும் நிகழவில்லை என்றே கூறலாம்.
இப்போதைய சூழ்நிலைகளை சில கட்சிகள் தமக்கேற்ற விதத்தில் வெவ்வேறு வகையான அர்த்தங்களால் பேசுகின்றன. மக்களின் ஆதரவைப் பெற முடியாதவர்களே இவ்வாறான கைங்கரியங்களைச் செய்கின்றனர். மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்த அக்கட்சிகள் தான் இத்தேர்தலை புறக்கணித்துள்ளன.
காலத்திற்குக் காலம் பல கட்சிகள் உருவாகுவதும், பின்னர் அவை இல்லாமல் போவதும் இயல்பான விடயங்கள். மக்கள் மத்தியில் செல்வாக்கைப் பெற்று அரசியலில் தமக்கென ஒரு கொள்கையை வகுத்துக் கொண்டு தேர்தலில் நின்று வெற்றியீட்டிய கட்சிகளை விரல்விட்டு எண்ணிப் பார்த்துவிடலாம். எடுத்தவுடன் தேர்தலுக்கு முகங்கொடுத்துவிட்டு தோல்வி கண்டதும் காணாமல் போகும் கட்சியினர் அல்ல நாம். பல தேர்தல்களில் முகம் கொடுத்திருக்கின்றோம். மக்கள் மத்தியில் தொடர்ந்து வேலை செய்து வருகின்றோம். எந்தக் கால கட்டத்திலும் ஆயுத முனையில் அதிகாரத்தைப் பெற முனைந்தவர்களல்ல நாம்.
பிரதேச வேறுபாடுகளைக் கூறி குளிர் காய்ந்த காலங்கள் மாறிப் போய்விட்டன. மக்கள் நாளாந்தம் எதிர்நோக்கும் பிரச்சினைகளைப் பற்றித்தான் பேசுகின்றனர். எதிர்காலச் சமுதாயம் சீரழிந்து போய்விடக்கூடாது என்பதற்காக இந்தத் தேர்தலை நாம் ஏற்று சகோதரக் கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுகின்றோம்.

கேள்வி :- உள்ளுராட்சி சபைத் தேர்தலைத் தொடர்ந்து கிழக்கு மாகாண சபைத் தேர்தல் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறதே?

பதில் :- உள்ளுராட்சி தேர்தல் எதிர்பார்ப்பது போல் ஜனநாயக முறையில் நடைபெறும் பட்சத்தில், அடுத்த கட்டமாக கிழக்கு மாகாணத் தேர்தலை நடத்துவதற்கு அரசு உத்தேசித்துள்ளதாக அறிகிறோம். முடிவுகள் இந்தத் தேர்தலில்தான் தங்கியிருக்கிறது.
மாகாண சபைகளுக்கூடாக அதிகாரப் பகிர்வை மேற்கொள்வதின் ஊடாக இனப்பிரச்சினைத் தீர்வை நோக்கிப் போகமுடியுமென கட்சி நீண்ட காலமாகவே கூறி வந்திருக்கின்றது. மாகாண சபைகளுக்கூடாக மூன்று கட்டங்களாக இறுதித் தீர்வையடையலாம் என கட்சியின் அரசியல் யாப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இணைந்த வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் என்பதே எமது நிலைப்பாடாக இருப்பினும், சமகால அரசியல் சூழ்நிலைகள், பிரச்சினைகள், நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக வடக்கு கிழக்கு வெவ்வேறான நிர்வாகங்கள் என பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியிருக்கின்றது.
அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலை நடத்துமானால் அதிலும் நாம் போட்டியிடுவோம். தோழமைக் கட்சிகளான ஈ.பி.ஆர்.எல்.எப்., புளொட் ஆகிய கட்சிகளுடன் தொடர்ந்து நல்லுறவைப் பேணி வருவதுடன், எதிர்கால சமூகத்தின் நலன்களைக் கருத்திற் கொண்டு எமது அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு நாம் உறுதியாக இருக்கின்றோம்.

கேள்வி :- எதிர்கால நடவடிக்கைகள் பற்றி கூறமுடியுமா?

பதில் :- கிழக்கு மக்கள் என்ன சொல்ல விரும்புகிறார்கள் என்பது நடைபெறவுள்ள உள்ளுராட்சிச் சபைத் தேர்தலின் பின்னர் தெரியவரும். தேர்தல் நீதியானதாகவும், ஜனநாயக ரீதியிலும் நடைபெற வேண்டுமென்பதே அனைவரினதும் எதிர்ப்பார்ப்பாக இருக்கிறது. நாம் ஒருபோதும் பலாத்காரத்தில் ஈடுபட்டதில்லை. ஜனநாயக வழிக்குத் திரும்பிய தோழமைக் கட்சிகளுடன் இணைந்து சுயேற்சைக் குழுவாக போட்டியிடுகின்றோம். மக்கள் மத்தியில் எமக்கு செல்வாக்கு அதிகரித்து காணப்படுகின்றது. எனினும் தேர்தலில் போட்டியிடும் ஏனைய வேட்பாளர்களும் ஜனநாயக மரபுகளை உரிய முறையில் பேணி, தேர்தல் சிறந்த முறையில் நடக்க பூரண ஒத்துழைப்பை வழங்கவேண்டும். கடந்த இரு தசாப்தங்களுக்கு மேலாக நிலவிவரும் யுத்தம் மற்றும் சுனாமிப் பேரலை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகள் இன்னும் சிலருக்கு உரிய முறையில் போய்ச் சேரவில்லை. அதனைப் பெற்றுக் கொடுப்பதுடன், மரணித்தவர்களின் மரண அத்தாட்சிப் பத்திரத்தைப் பெற்றுக் கொடுப்பது போன்ற உடனடி உதவிகளைச் செய்ய வேண்டியுள்ளது.
அத்துடன் உள்ளுராட்சி சபைகளினூடாக மேற்கொள்ளவேண்டிய கிராம அபிவிருத்தித் திட்டங்களில் முக்கிய கவனம் செலுத்துவதுடன், விவசாயம், கால்நடை வளர்ப்பு, மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவோர் எதிர்நோக்கும் பிரச்சினைகள், வீதி அபிவிருத்தி, வீடமைப்பு, பொதுச் சுகாதாரம் போன்ற பல்வேறு விடயங்களில் கூடிய கவனம் செலுத்தவேண்டியுள்ளது.

நன்றி – தினகரன் வாரமஞ்சரி