www.jananayakam.net.ms or www.jananayakan.tk, Email: jananayakam.gmail.com ....

Thursday, October 9, 2008

சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி ஜனநாயகத்தை பலப்படுத்த நேசக்கரம் நீட்டி அழைக்கின்றேன்!

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் கருணா அவர்களின் பாராளுமன்றத்திற்கான வருகை ஐனநாயகத்தை மேலும் பலப்படுத்துவதற்கான ஒர் அரிய சந்தர்ப்பமாகும்.! எனவே அவரது வருகையை நான் நேசக்கரம் நீட்டி வரவேற்கின்றேன்.

பாராளுமன்றம் சந்தர்ப்பவாதிகளின் இடமல்ல! அது சந்தர்ப்பவாதிகளுக்கு இடம் கொடுக்கும் களமாகிவிடக்கூடாது என்பதே எமது விருப்பம். தமிழ் பேசும் மக்களின் உரிமைப் போராட்டம் அகிம்சையில் தொடங்கிய போது பாராளுமன்றமும் அதற்கு ஒரு களமாக திகழ்ந்திருந்தது. ஆனாலும் ஆயுதப் போராட்டத்தின் எழுச்சியானது பாராளுமன்றத்தின் ஊடாக எந்தப் பிரச்சினைகளுக்கும் தீர்வுகாண முடியாது எனக் கருதி அந்தப் பாதையை முழுமையாக நிராகரித்திருந்தது.

முடிவற்று தொடரும் அழிவு யுத்தமும், தமிழர்களை தமிழர்களே கொன்றொழிக்கும் சகோதரப் படுகொலைகளும், இவைகளால் விளையும் அவலங்களும், எமது ஆயுதப்போராட்டம் பெற்றுத்தந்த இலங்கை இந்திய ஒப்பந்தமும் தமிழ் பேசும் மக்களை மறுபடியும் பாராளுமன்றத்தை நோக்கியே அழைத்து வந்திருக்கின்றது.

எமது மக்களுக்கான ஐனநாயக உரிமைகள் மறுக்கப்பட்ட சூழலில், எமது மக்களின் வாக்குப்போடும் சுதந்திரம் கூட பலாத்காரமாக பறிக்கப்பட்ட ஒரு சூழலில், தவறான முறையில் பாராளுமன்றம் வந்தவர்கள் பலரும் தங்களது பாராளுமன்ற பதவிகளை வெறும் சுயலாப அரசியலுக்காகவே
இன்று வரை பயன்படுத்தி வருகி;றார்கள்.

வெறும் பரபரப்பு காட்டுவதற்காகவும், பத்திரிகைச் செய்திகளுக்காகவும் பாராளுமன்றத்தில் வீராவேசமாக பேசுவதோடு மட்டும் அவர்கள் திருப்தியடைந்து விடுகிறார்கள்.

ஆனாலும் எமது மக்களின் நிம்மதியான வாழ்விற்காக, நிரந்தர அமைதிக்காக, அரசியலுரிமை சுதந்திரத்திற்காக தங்களது பாராளுமன்ற பதவிகளை அவர்கள் இதுவரை சரிவரப் பயன்படுத்தியிருக்கவில்லை என்பது உலகறிந்த உண்மையாகும்!

இந்நிலையில் பராளுமன்றத்தின் தேசியப்பட்டியலில் வெற்றிடமாக இருக்கும் இடத்தை நிரப்புவதற்கான சந்தர்ப்பம் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் கருணா அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

ஆயுதப்போராட்டத்தில் ஈடுபட்டு பின்னர் ஐனநாயக வழிக்கு வந்தவர்களில் நானும் ஒருவனாக பாரளுமன்றத்தில் அங்கம் வகித்தாலும் புலித்தலைமையின் தவறுகளை புரிந்து கொண்டு அதை விட்டு விலகி பாராளுமன்றத்திற்கு முதன் முதலாக அந்த அமைப்பில் இருந்து வந்திருப்பவர் விநாயகமூர்த்தி முரளிதரன் கருணா என்பதால் இது வரலாற்றின் முக்கியப் பதிவாகவே
கருதப்படுகின்றது.


அழிவு யுத்தம் நடத்திக் கொண்டிருக்கும் புலித்தலைமையின் தவறுகளைப் புரிந்து கருனாவும், அவரது போராளிகளும் பிரிந்து வந்த போது முதன் முதலாக, வெளிப்படையாகவே அவர்களது வருகையை ஆயிரம் பூக்கள் மலரட்டும் என்று எண்ணி அவர்களை நாம் வரவேற்றிருந்தோம்.

அதன் பின்னர் தனது பாதையை அவராகவே அவர் வகுத்திருந்த போது எங்கிருந்தாலும் வாழ்க என்று வாழ்த்தியவர்களும் நாங்கள் தான். இன்று ஒரு பாராளுமன்ற பிரதிநிதியாக கருணா விநாயகமூர்த்தி முரளிதரன் அவர்களை மறுபடியும் நாம் நேசக்கரம் நீட்டி வரவேற்றிருக்கின்றோம். கருணா விநாயகமூர்த்தி முரளிதரன் அவர்களின் வழியைப் பின்பற்றி முடிவற்று தொடரும் அழிவு யுத்தத்தில் இருந்து ஏனையவர்களும் விடுபட்டு வரவேண்டும் என நாம் விரும்பி வரவேற்கின்றோம்.

கருத்தியல் ரீதியாக வேறு பட்டு நின்றாலும் வேற்றுமைக்குள் ஒற்றுமை காண்போம்!

அரசியலுரிமை சுதந்திரத்தை வென்றெடுக்க ஒன்றிணைந்து உழைப்போம். தொடரப்போகும் மக்கள் சேவைக்கு எமது ஆதரவு என்றும் உண்டு!

எதிர்காலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியாக
பாராளுமன்றம் வருவதற்கு எமது வாழ்த்துக்கள் என்றென்றும் உரித்தாகும்!.

பொறுப்புள்ளவர்களின் பொறுப்பற்ற செயல்களினால் பொன்னான செயல்கள் யாவும் உறங்கிக் கொண்டிருக்கின்றன. வடிகின்ற எம் மக்களின் கண்ணீரைத் துடைக்க, சொரிகின்ற எம் மக்களின் குருதியை தடுத்து நிறுத்த நாம் அனைவரும் சேர்ந்துழைப்போம்.


டக்ளஸ் தேவானந்தா பா.உ
செயலாளர் நாயகம் - ஈ.பி.டி.பி
சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர்