www.jananayakam.net.ms or www.jananayakan.tk, Email: jananayakam.gmail.com ....

Wednesday, October 1, 2008

சர்வதேச வயோதிபர் தினத்தை முன்னிட்டு சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் செய்தி


01.10.2008 - புதன்கிழமை


முதியோர்கள் எம் கண்முன்னால் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கும் முன்னோர்கள், இதுவரை வாழ்ந்து முடித்துவிட்ட சாதனையோடும், இன்னமும் வாழ்வோம் என்ற எதிர்கால நம்பிக்கையோடும் இந்த ஆண்டிலும் வருகின்ற வயோதிபர் தினத்தை முதியோர்களான நீங்கள் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி!

வாழ்வின் அனுபவங்களில் முதிர்ச்சி அடைந்தவர்கள் நீங்கள் என்பதால் வயோதிபர்களை முதியோர்கள் என்று அழைப்பதில் நான் பெருமையடைகின்றேன்.

நீங்கள் பெற்றிருக்கும் முதுமைக்கு மரியாதை செலுத்தும் தினமே வயோதிபர் தினமாகும். முதியோர்களாகிய உங்களுக்கு செலுத்துகின்ற மரியாதை என்பது நாம் வாழும் தேசத்திற்கும் மானுட சமூகத்திற்கும் செலுத்துகின்ற மரியாதை என்றே நான் கருதுகின்றேன்.

அனுபவங்கள்தான் சிறந்த படிப்பினைகள். இந்த வகையில் நீங்கள் ஒவ்வொருவரும் தேர்ந்த அனுபவங்களாகவே கருதப்படுகின்றீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் எமது இளம் சந்ததியினர் படிக்க வேண்டிய பாடப் புத்தகங்கள். உங்களில் பலர் பாடப் புத்தகங்களாக மட்டுமன்றி பல்கலைக்கழகங்களாகவும் இருக்கின்றீர்கள்.

நீங்கள் நடந்து வந்த பாதையில் கற்களையும் முட்களையும் சந்தித்திருப்பீர்கள். இன்பங்களையும் துன்பங்களையும் பங்கு போட்டு அனுபவித்திருப்பீர்கள். உங்களது இல்லற வாழ்விலும் சரி பொது வாழ்விலும் சரி பல இலட்சியங்களை நீங்கள் எட்டியிருப்பீர்கள். அந்த இலட்சியங்களை எட்டுவதற்கு பல்வேறு தடைகளையும் சந்தித்திருப்பீர்கள். அந்த அனுபவங்கள்தான் எமது சமகால இளையோர்களுக்கு அவசியமானவைகளாகும்.

நீங்கள் பெற்ற அனுபவங்களை உங்களுக்கு பின்னால் வாழ்ந்து கொண்டிருக்கும் இளையோர்கள் கற்க வேண்டும். எது சரி?... எது பிழை?... எது நீதி?... எது அநீதி?... இவைகளை முதியவர்களான நீங்கள் உங்கள் அனுபவங்களால் கற்றுணர்ந்தவர்கள்.

நீங்கள் பெற்ற அனுபவங்களை எமது இளையோர்களுக்கும் நீங்கள் கற்றுக்கொடுப்பீர்கள் என்பது எனது நம்பிக்கை! மனித உயிர்கள் மீதான நேசத்தையும் தேவையற்ற வன்முறைகள் மீதான எதிர்ப்பையும் கற்றுணர்ந்த நீங்கள் எமது சமகால சந்ததியினருக்கு அவற்றைக் கற்றுக்கொடுப்பதே இந்த தேசத்திற்றும் மனித சமூகத்திற்கும் ஆற்றுகின்ற பணியாகும்.

இன்றைய இளையோர்கள் நாளைய முதியோர்கள் என்பதை உணர்ந்து முதியோர்களாகிய உங்களை இன்றைய இளையோர்களும் கனம் பண்ண வேண்டியது அவர்களது கட்டாய கடமையாகும்.

காவோலை விழும்போது குருத்தோலை சிரிப்பது போல் அன்றி முதியோர்களுக்கான மரியாதை என்பதை இளைய சமுதாயத்தினர் செலுத்தியே ஆக வேண்டும்.

மனிதர்கள் யாவரும் சமன் என்ற நிலை சமூகத்தின் எல்லா தளங்களிலும் இருக்க வேண்டும். மனிதர்களுக்கிடையிலான பல்வேறு முரண்பாடுகளும் அகற்றப்பட வேண்டும். இன, மத, சமூக, பிரதேச முரண்பாடுகள் மட்டுமன்றி தலைமுறை இடைவெளியால் உருவாக்கப்படும் இளையோர் முதியோர்களுக்கு இடையிலான முரண்பாடுகளும் இருக்குமேயானால் அவைகளும் அகற்றப்பட வேண்டும் என்பதே எமது விருப்பங்களாகும்.

ஒரு மனிதனின் மரணம் என்பது இயற்கையானதாக இருப்பதையே எந்தவொரு நாகரீக சமூகமும் விரும்புகின்றது. இத்தகைய ஒரு சூழல் எமது வாழ்விடங்களிலும் விரைவாக உருவாக்கப்படல் வேண்டும்.

எமது தேசத்தில் அமைதியும் சமாதானமும் விரைவில் உருவாக்கப்பட வேண்டும். சகல இன, மத, சமூக மக்களும் சமாதான சக வாழ்வை நடைமுறையில் அனுபவிக்க வேண்டும்.

வயோதிபர்களான நீங்களும் இன்றைய அமைதியற்ற சூழலினால் பல்வேறு அசௌகரியங்களையும் சந்திக்க வேண்டிய துயரங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது.

நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் காலத்திலேயே மாற்றமொன்று நிகழும் என்பதில் மாற்றமில்லை என்பது எனது நம்பிக்கையாகும்.

இவ்வாறானதொரு மாற்றம் என்பது அமைதியின் வருகைக்கான மாற்றமாக இருக்க வேண்டும். உங்களது வழித்தோன்றல்கள், உங்களது அடுத்த சந்ததியினர் எமது வாழ்விடங்கள் தோறும் நிம்மதியாக வாழும் காலத்தை உங்கள் கண்முன்னால் கொண்டு வந்து நிறுத்த வேண்டும் என்பதே எமது விருப்பங்களாகும். அதற்கு ஜனநாயகம் புத்துயிர் பெற்று எழ வேண்டும். ஜனநாயக சுதந்திரத்தை பலப்படுத்த வேண்டும்.

அதற்காக நீங்கள் ஆற்ற வேண்டிய பணிகளையும் பங்களிப்பையும் நான் உங்களிடம் இருந்து எதிர்பர்க்கின்றேன். இதுவே வயோதிபர் தினத்தில் நான் உங்களுக்கு விடுக்கும் வேண்டுகோள் ஆகும்.

நோயற்ற வாழ்வே குறையற்ற செல்வம்!
நீண்ட ஆயுளோடும் மன உறுதியோடும் நம்பிக்கையோடும் நீங்கள் வாழ வேண்டும் என்று நான் வாழ்த்துகின்றேன்.

இப்படிக்கு
என்றும் மக்கள் சேவையில் உள்ள,

டக்ளஸ் தேவானந்தா பா.உ
செயலாளர் நாயகம், ஈ.பி.டி.பி.
சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர்