ஒரு             தாயானவளின் மடியில் படுத்துறங்கிய             குழந்தை தன் தாயின் மடியை விட்டு             எங்குதான் தவழ்ந்து சென்றாலும் அது தன்             தாய் மடியின் வாசத்தையே             சுவாசித்துக்கொண்டிருக்கும்…மறுபடியும் அந்தக் குழந்தை தனது தாயின் மடியைத் தேடியே தவழ்ந்துவரும்.
அதுபோலவே எமது தாயக தேசத்தை விட்டு நீங்கள் புலம்பெயர்ந்து சென்றாலும் நித்திய பொழுதுகளிலும் நீங்கள் தாயக நினைவுகளுடனும்,தாயகத்தின் மீதான நேசிப்புடனும் வாழ்ந்து கொண்டிருப்பதை நினைத்து நாம் மன மகிழ்ச்சி அடைகின்றோம்.
புலம்பெயர்ந்து பூமிப்பந்தின் எந்தப் பாகத்தில் நீங்கள் வாழ்ந்து கொண்டிருந்தாலும் தாயக பூமி மீதான உங்களது நேசிப்பை நீங்கள் பல்வேறு வழிகளிலும் உங்களது உணர்வுகளால் வெளிப்படுத்தி வந்திருக்கிறீர்கள்.
எமது மக்களுக்கு நீடித்த நிம்மதியையும்,மகிழ்ச்சியையும் கொடுக்கவேண்டும் என்பதற்காகவே நீங்கள் உங்களுக்குத் தெரிந்த வழிகளில் உங்களது உணர்வுகளை வெளிப்படுத்தி வந்தீர்கள். எவ்வழியிலேனும் எமது மக்களுக்கு நிம்மதியையும்,மகிழ்ச்சியையும் ஏற்படுத்தவேண்டும் என்பதையே நாமும் விரும்புகின்றோம்.
ஆனாலும்,கடந்து போன காலங்கள் யாவும் மிகவும் கசப்பானவைகளாகவே கழிந்து சென்றிருக்கின்றன.எமது மக்களுக்கு நாம் அனைவரும் எதிர்பார்த்த மகிச்சியைத் தந்து விடாமலேயே கடந்து சென்றுவிட்ட காலங்களை எண்ணி மிகவும் மனத்துயரோடு உங்களோடு நான் சில வார்த்தைகள் மனந்திறந்து பேச விரும்புகிறேன்.
கடந்த முப்பத்தைந்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக எமது மக்களுக்கான உரிமைப் போராட்டத்தில் ஆயுதப்போராட்ட வழிமுறையிலும,அதன் பின்னர் ஐனநாயக வழிமுறையிலும் இடையறாது நாம் ஈடுபட்டு வருகின்றோம்….
இதுவரை கால எமது உரிமைப்போராட்ட வரலாற்றில் பலத்த சவால்களுக்கு முகம் கொடுத்து, இடர்களைச் சந்தித்து,எம்மோடு கூடவே இருந்து எமது மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்து வந்த இன்னுயிர் தோழர்கள் பலரையும் நாம் பறிகொடுத்திருக்கின்றோம்!
மரண அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும்,அடிக்கடி மரணங்களைச் சந்தித்து வந்த மனத்துயரங்களுக்கு மத்தியிலும்,மரணத்தில் இருந்து பீனிக்ஸ் பறவைகள் போல் பல தடவைகள் நாம் மறுபடியும் உயிர்த்தெழுந்து வந்திருக்கின்றோம்.
எமது உரிமைப்போராட்ட வரலாற்றில் பல்வேறு திருப்புமுனைகளை நாம் சந்தித்திருக்கின்றோம். எமது மக்களுக்கான அரசிலுரிமைகளை பெற முடிந்த பல்வேறு சந்தர்ப்பங்களை நாம் கடந்து வந்திருக்கின்றோம்.
ஆனாலும்,அந்தச் சந்தர்ப்பங்கள் எவைகளையும் எமது தமிழ் பேசும் தலைமைகள் பலதும் சரிவரப் பயன்படுத்தியிருக்கவில்லை.இந்த மனத்துயரங்களே எமக்கும் இன்னமும் எஞ்சியிருக்கின்றன.
ஆயுதப்போராட்டம் பிழையானது என்று நான் கருதியிருந்தவனல்ல.அது தேவையான இடத்தில், தேவையான காலத்தின் சூழ்நிலை உணர்ந்து முன்னெடுக்கப்படவேண்டிய ஒன்றுதான்.எமது சமகால இருப்பை நியாயப்படுத்துவதற்காக கடந்த கால நிகழ்வுகளை நான் கொச்சைப்படுத்த விரும்பவில்லை.
எமது தாயக தேசத்தில் ஒரு காலத்தில் நீதியான ஒரு ஆயுதப்போராட்டம் நடத்தப்பட்டது என்பது உண்மைதான்.அந்தப் போராட்டத்தில் நானும் பிரதான பாத்திரம் ஏற்று ஒரு சுதந்திரப்போராட்ட இயக்கத்தையே வழிநடத்திச் சென்றிருக்கின்றேன்.
ஆனால்,பின்னர் போராட்டம் தனது திசைவழியை இழக்கத் தொடங்கியது.எத்தகைய விமர்சனங்களுக்கப்பாலும் நமது மக்களின் விடிவுக்காகவென தமது மகிழ்வான வாழ்வைத் தியாகம் செய்து புறப்பட்டவர்களுக்கிடையிலேயே முரண்பாடுகள் தீவிரம் பெற்றன.எமக்குள் நாமே சுட்டுக்கொண்டு,தமிழ் மக்களின் காவலரண்களாக இருந்த நூற்றுக்கணக்கான போராளிகளையும்ää வல்லமை நிறைந்த தலைவர்களையும் இன்னும் ஏராளமான தமிழ் புத்திஜீவிகளையும் காவுகொண்டு,தமிழ் மக்களின் பலத்தைச் சிதைத்துக்கொண்டுவிட்டோம்.
ஆனாலும்,இலங்கை இந்திய ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டபோது தமிழ் மக்களின் துன்பங்களுக்கு ஒரு முடிவு கிட்டும் என்ற நம்பிக்கை மக்கள் மனதில் முளைவிட்டிருந்தது.இந்த ஒப்பந்தத்தை ஒரு ஆரம்ப முயற்சியாக ஏற்று ஐனநாயக வழிக்குத் திரும்பியிருந்தவர்களில் நானும் ஒருவன். நான் மட்டுமல்ல,இன்றுவரை எமது கட்சியாகிய ஈ.பி.டி.பி.யில் அங்கம் வகித்து வரும் எமது தோழர்களும்,ஏனைய மாற்று ஐனநாயகக் கட்சிகளும் இலங்கை இந்திய ஒப்பந்தத்தை ஏற்று ஐனநாயக வழிக்கு வந்திருந்ததை நீங்கள் அறீவீர்கள்.
ஈ.பி.டி.பி.யினராகிய நாம் அன்று இலங்கை இந்திய ஒப்பந்தத்தை ஏற்றிருந்தபோதிலும் அந்த ஒப்பந்த நடைமுறையில் பங்கெடுப்பதற்கான சுதந்திரம் எமக்கு மறுக்கப்பட்டிருந்தது.
ஆனாலும்,அதற்காக நாம் இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்கு எதிராக ஒருபோதும் செயற்பட்டிருந்தது கிடையாது.
யார் குற்றியும் அரிசியானால் சரி என்ற பொது நோக்கில்,குற்றிய அரிசி எமது மக்களையே சென்றடையவேண்டும் என்ற தீராத இலட்சிய விருப்பங்களோடு இலங்கை இந்திய ஒப்பந்தத்தை நாம் வெளியில் இருந்து ஆதரித்திருந்தோம்.
ஆனாலும்,புலிகளின் தலைமை மட்டும் இலங்கை இந்திய ஒப்பந்த நடைமுறைக்கு எதிராக செயற்பட்டிருந்ததோடு,அன்றைய பிரேமதாச அரசுடன் இணைந்து எமது மக்களுக்குக் கிடைத்திருந்த வடக்கு கிழக்கு இணைந்த மாகாணசபை என்ற பொன்னான வாய்ப்பை இல்லாதொழிப்பதற்கு பிரதான காரணியாக செயற்பட்டிருந்ததை நீங்கள் அறிவீர்கள்.
இதனால் எது நடக்கும் என்று நாம் அன்று எச்சரிக்கையுணர்வோடு சொல்லியிருந்தோமோ இன்று அது நடந்து முடிந்திருக்கிறது.எமது மக்களின் இரத்தத்திலும் தசையிலும் சுயலாப அரசியல் நடத்தப்பட்டு பல்லாயிரம் மக்களின் இழப்புகளோடும்,உறவுகளைப் பலிகொடுத்த மனத்துயரங்களோடும் எல்லாமே இன்று நடந்து முடிந்து விட்டது.
இலங்கை-இந்திய ஒப்பந்தத்தை நிராகரித்து,இராணுவ வழிமுறையில் அதனை எதிர்கொண்டதன் மூலம்,எமது இனத்தின் நண்பனாகத் திகழ்ந்த இந்தியாவைப் பகைத்துக்கொண்டோம். இலங்கையில் ஒரு தமிழ் உயிர் காடுமைக்குள்ளாகும்போதெல்லாம் குரல் கொடுத்துவந்த இந்தியா இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக இலங்கைத்தமிழர் விடயத்தைத் திரும்பிப் பார்க்காத நிலைமை ஏற்பட இவ்விதமான செய்பாடே காரணமாகியது.
எமது ஆயுதப்போராட்டம் எமக்குப் பெற்றுத் தந்த வெற்றி என்பது,இலங்கை இந்திய ஒப்பந்தம் மட்டும்தான்.இந்த வெற்றியில் புலிகளின் உறுப்பினர்களுக்கோ,அன்றி புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கோ,அல்லது அவரது சகாக்களுக்கோ இருந்த பங்களிப்பை நான் ஒரு போதும் மறுக்கப்போவதில்லை. இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்தானபோது புலிகள் தமது தரப்பில் 652 பேர் மட்டுமே மரணமடைந்திருந்ததாக உரிமை கோரியிருந்தனர். ஆனால் இ;னறோ எதுவும் இல்லாமலும் இருந்தவற்றையும் அழித்தும் பல்லாயிரக்கணக்கான புலி உறுப்பினர்களின் உயிரும் காவுகொள்ளப்பட்டுள்ளது.
ஆனாலும் அன்று பெற்ற வெற்றியைப் புலிகளின் தலைமை ஏற்றுக்கொண்டு செயற்பட்டிருக்கவில்லை.மாறாக,அந்த ஒப்பந்தத்தை உடைத்து சிதைப்பதற்கே காரணமாக இருந்திருக்கின்றார்கள். இந்த வரலாற்றுத் தவறை புலம்பெயர்ந்து வாழுகின்ற உறவுகளாகிய நீங்கள் இன்று இன்னமும் அதிகமாக உணர்ந்திருக்கின்றீர்கள்.
இலங்கை-இந்திய ஒப்பந்தம் மட்டுமன்றி,தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு மேற்கொள்ளப்பட்ட உருப்படியான இன்னும் பல முயற்சிகளும் இவ்வாறே வீணடிக்கப்பட்டன. நீங்கள் எல்லோரும் புலம்பெயர்ந்து வாழும் பல உலக நாடுகளின் ஆதரவுடன் பிரச்சினைக்குத் தீர்வு காண எடுக்கப்பட்ட முயற்சிகூட வீணடிக்கப்பட்டது.
இந்திய-இலங்கை உடன்படிக்கையை நிராகரித்தும்,உலக நாடுகள் பலவும் மேற்கொண்ட தீர்வு முயற்சிகளைக் குழப்பியும் மீண்டும்ää மீண்டும் ஆயுத வழிமுறையை மட்டுமே தெரிவுசெய்ததன் மூலம் முழு உலகிலிருந்தும் தமிழ் மக்கள் தனித்துவிடப்பட்டனர்.
இலங்கையில் ஒரு தமிழ் உயிர் கொடுமைப்படுத்தப்பட்டாலே குரல் கொடுத்து வந்த இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் பலவும்,தமிழினத்தின் மீதான தமது அக்கறையை கைவிடும் அளவுக்கு உலகின் பகைமையை புலிகளின் தலைமை சம்பாதித்துக்கொண்டது.இதனால்தான் எமது தமிழ் மக்களைக் காப்பாற்றுவதற்காக நாட்கணக்காக உலகின் வீதிகளில் நீங்கள் மேற்கொண்ட போராட்டங்களெல்லாம் எவராலும் கண்டுகொள்ளப்படாமலே வீண்போனது.இன்று எம் தமிழ் உறவுகள் சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்து வரும் நிலை கண்டு நீங்கள் வெதும்பிக்கொண்டிருக்கிறீர்கள்.
ஏன் இப்படியெல்லாம் ஆனது?எங்கே நாம் தவறிழைத்தோம்?ஏன் முழு உலகுமே தமிழர்களைக் கண்டுகொள்ளாமல் விட்டது?உலகின் வீதிகளெல்லாம் திரண்டு நின்ற உங்களை அந்தந்த நாடுகள் திரும்பியும் பார்க்காமல் விடக் காரணமென்ன?
இவையே நாம் இன்று எமக்குள் எழுப்பிக்கொள்ளவேண்டிய கேள்விகள். கடந்த காலத்தைப் புடம்போட்டு எமது இனத்தின் நிம்மதியான வாழ்வுக்கு உண்மையில் செய்யவேண்டிய, செய்யக்கூடிய நடைமுறை சாத்தியமான விடயங்கள் என்னவென்பது பற்றி நிதாமாக யோசித்துத் தீர்மானம் எடுக்கவேண்டிய வரலாற்றுக் காலகட்டம் இது.முப்பது வருடகால முயற்சிகள் தோற்று தமிழினம் நடுவீதியில் நிற்கும் நிலையில் வெறுமனே எங்களுடைய சொந்த விருப்பு வெறுப்புக்களுக்காகவும்,சுயதிருப்திக்காகவும் நாம் எதுவும் செய்துகொண்டிருக்க முடியாது.அது மாபெரும் வரலாற்றுத் துரோகமாகிவிடும்.
இன்று புலம்பெயர் தேசங்களில் வாழும் எமது உறவுகளான நீங்கள் சிந்திக்கவேண்டிய விடயங்கள் ஏராளம் இருந்தும்,புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டது உண்மைதானா என்பதையே அதிகம் சிந்தித்துக்கொண்டிருக்கிறீர்கள்.
உங்களது உணர்வுகளுக்கு நாம் மதிப்பளிக்கின்றோம்.உணர்வுகளை நாம்;புரிந்து கொண்டிருக்கின்றோம்.நீங்கள் விரும்பிய அரசியல் வழிமுறையை ஏற்று நடப்பதற்கு உங்களுக்கு இருக்கவேண்டிய ஐனநாயக சுதந்திரத்தை நாம் ஏற்றுக்கொள்கின்றோம்.
உங்களில் பலரும் புலிகளுக்கு ஆதரவானவர்களாக இருக்கலாம்,அல்லது புலிகளின் தலைமைக்கு எதிரானவர்களாகவும் இருக்கலாம்,புலிகளின் தலைமையால் துரத்தப்பட்டு அகதி அந்தஸ்து கோரியவர்களாகவும் இருக்கலாம்.அல்லது அரச பாதுகாப்புப் படையினரால் தேடப்பட்டு அகதி அந்தஸ்து கோரியவர்களாகவும் இருக்கலாம்.இன்னும்,வேறு ஆயுதக்குழுக்களால் அச்சுறுத்தப்பட்வர்களாகவும் இருக்கலாம்.
நீங்கள் யாராக இருந்தாலும்,எம்மைப் பொறுத்தவரையில் எல்லோருமே எமது தாயகத்தின் பிரiஐகளே. உங்களுடைய முகங்களில் இருக்கும் எந்தவொரு அரசியல் அடையாளத்தையும்விட, யாவருமே மனிதர்கள்,எமது தமிழ் உறவுகள் என்ற பொதுவான அடையாளங்களையே உங்களது முகங்களில் நாம் காண்கின்றோம்.
புலிகளின் தலைவர் பிரபாகரன் ஒருபோதும் வெல்லப்பட முடியாதவர் என்றும்,யாராலும் கொல்லப்பட முடியாதவர் என்றும் புலிகளின் தலைமையே இன்று வரை ஒரு மாயையை எமது மக்களிடம் வளர்த்து விட்டிருக்கின்றது.இதனால்,உங்களில் சிலரது மனங்கள் புலித்தலைவர் பிரபாகரன் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தியை ஏற்க மறுத்துக்கொண்டிருக்கின்றன.
நாம் நடந்து வந்த பாதையில் எமது உயிருக்கு நிகரான தோழர்கள் பலரையும் நாம் இழந்திருக்கின்றோம். யாருக்கு எதிராக நாம் அன்று போராட புறப்பட்டிருந்தோமோ அவர்கள் எமது தோழர்களை பலியெடுத்திருந்ததை விடவும்,புலிகளின் தலைமையே அதிகமாக பலியெடுத்திருக்கின்றது. எனது சிறகுகள் வெட்டி வீழ்த்தப்பட்டன. எனது கரங்கள் ஒடிக்கப்பட்டன.
இதுபோன்ற மனக்கசப்புகளுக்கும,மனத்துயரங்களுக்கும்,வலிகளுக்கும்,வதைகளுக்கும் மத்தியில் நாம் எமது இலட்சியப் பயணத்தை முன்னெடுத்து வருகின்ற வேளையில்தான் புலிகளின் தலைமை அழிக்கப்பட்டுவிட்டதாக அறிவிக்கபட்டிருக்கின்றது.
ஒருவரின் மரணத்தில் யாரும் மகிழ்ச்சி கொண்டாட முடியாது.மனித மரணங்களில் மகிழ்ச்சி கொண்டாடுபவர்கள் மானிடப் பிறவிகளே அல்ல.ஆனாலும்,இந்த மானுட தர்மத்தின் பொது விதியை சகல தரப்பினரும் உணர மறுத்ததன் விளைவுகளே இன்று எம் கண் முன்னால் நடந்து முடிந்திருக்கின்றன.
புலம்பெயர்ந்து வாழுகின்ற உறவுகளாகிய உங்களில் பலருக்கும் புலிகளின் தலைமை தோற்கடிக்கப்பட்டு,அழிக்கப்பட்டுவிட்டது என்ற மனத்துயரங்கள் இருப்பது எனக்குப் புரிகின்றது. ஏனெனில்,புலிகளின் தலமைக்கு ஆதரவாக இருந்து,அவர்களை மலைபோல் நம்பியிருந்தவர்கள் நீங்கள்.
புலிகளின் தலைமை அழிக்கப்பட்டுவிட்டது என்று நீங்கள் அடைந்திருக்கும் துயரங்களை விடவும்,பல மடங்கு துயரம் எமக்கும் உண்டு.ஆனாலும்,அந்தத் துயரங்கள் யாவும் தனியொரு இயக்கமோ,அல்லது குழுவினரோ அழிக்கப்பட்டுவிட்டனர் என்பதால் ஏற்பட்ட துயரங்கள் அல்ல.
எமது மக்களுக்கு இந்த யுத்தம் எந்தத் தீர்வையும் பெற்றுத்தந்து விடாமல்,எமது மக்களின் இனிய வாழ்வை நடுத்தெருவிலும்,நலன்புரி முகாம்களிலும் தொலைத்து,அவலங்களை மட்டும் எமது மக்களின் மீது சுமத்தி விட்டிருக்கின்றது.இந்தத் துயரங்களே எமக்கு இன்று மிச்சமாகியிருக்கின்றது.
உறவுகளை அழிவு யுத்தத்திற்குப் பலி கொடுத்துவிட்ட வெறுமையின் வேதனைகளையே கடந்த காலம் எமக்கு விட்டுச் சென்றிருக்கின்றது.
விடுதலைக்காக அன்று ஆயுதம் ஏந்திப் போராடியிருந்த அனைத்து விடுதலை அமைப்புகளையும் பலாத்காரமாக தடை செய்து அவர்களது அரசியல் இராணுவ பலங்கள் அனைத்தையும் புலிகளின் தலைமை தாமே தங்களது கரங்களில் எடுத்துக்கொண்டது.ஆனாலும்,அந்த அரசியல் இராணுவ பலங்கள் அனைத்தையும் எமது மக்களின் நீடித்த மகிழ்ச்சிக்காகப் பயன்படுத்த மறுத்து, அர்த்தமுள்ள ஒரு அரசியல் தீர்விற்காகப் பயன்படுத்த விருப்பமின்றி,அனைத்துப் பலங்களையும் புலிகளின் தலைமை பறிகொடுத்துவிட்டு தாமே நடத்திய அழிவு யுத்தத்திற்குத் தாங்களும் பலியாகியிருக்கின்றார்கள்.
இதனாhல்,புலிகளின் தலைமை அழிக்கப்பட்டதால் இழக்கப்பட்டது தனியொரு அமைப்பு மட்டுமல்ல. முழுத் தமிழினத்தினதும் போராட்டம்,போராடும் சக்தி முழுவதும் புலிகளின் தலைமையின் மடைமையால் இழக்கப்பட்டுள்ளது.
எம் இனிய புலம்பெயர் வாழ் உறவுகளே!...
            நாம் தோற்றுப்போனவர்கள்             அல்ல.ஆனாலும்,நாம் தோற்றுப்போவதற்கு             நாமே காரணமாகவும்             இருந்துவிடக்கூடாது.இதுவரை நாம் நடந்து             வந்த தூரமும்,சுமந்து வந்த பாரமும்             அதிகம். இத்தனை பாரம் சுமந்து,எத்தனை             விலைகளைக் கொடுத்தும் கண்டபலன்             ஒன்றுமில்லை என்றால் எவ்வளவு             வேதனை?இந்த நிலைமை தாயகத்தில் வாழும்             தமிழ் மக்களுக்கு ஏற்பட அனுமதிக்கலாமா?            
           
           நடந்தவைகள் நடந்தவைகளாக இருக்கட்டும்.             வறட்டுக் கௌரவமும்,பிடிவாதப் போக்கும்             கொண்டு தீர்வுக்காண சந்தர்பங்கள்             எல்லாவற்றையும் வீணடித்த அரசியல்             தந்திரோபாயமற்ற செயற்பாடுகளுக்கு             இனியேனும் முடிவு கட்டுவோம். வேறு             யாருக்காகவில்லாவிட்டாலும்,             மீண்டும்,மீண்டும் பல முறை             இடம்பெயர்ந்து,அனைத்தையுமே இழந்து             இன்று நலன்புரி நிலையங்களுக்குள்             அடைக்கலம் புகுந்திருக்கின்ற மூன்று             இலட்சம் மக்களுக்கு             மறுவாழ்வனிப்பதற்காகவென்றாலும் நடைமுறை             சாத்தியமான அனைத்தையும் செய்ய             முயல்வோம்.
           
           எதையாவது செய்வதென்றால்,எங்கிருந்தாவது             ஆரம்பித்தால்தானே முடியும்?எதிலிருந்து             ஆரம்பிப்பது?இலங்கைத் தமிழ் மக்களின்             பிரச்சினைத் தீர்வுக்காகவென             முன்வைக்கப்பட்டு கிடப்பில் போடப்பட்ட             இந்திய-இலங்கை உடன்படிக்கையை நாம்             இதற்குச் சாதமாகப்             பயன்படுத்திக்கொள்ளலாம்.
           
           இலங்கை இந்திய ஒப்பந்தத்தின்             அடிப்படையிலான 13,வது             திருத்தச்சட்டத்தை முழுமையாக             நடைமுறைப்படுத்தி,அதிலிருந்து தொடங்கி             எமது இலக்கு நோக்கி நகர்வதே நாம்             தோற்றுப்போனவர்கள் அல்ல என்பதை             உலகத்தின் கண் முன்னால்             எடுத்துக்காட்டும் வழிமுறையாகும்.
           
           இன்று எமக்கு முன்னால் பாரிய பணிகள்             விரிந்து கிடக்கின்றன.நடைமுறைச்             சாத்தியமான வழிமுறையிலான அரசியல்             தீர்வு நோக்கி நாம் பயணித்து வருகின்ற             அதேவேளை யுத்தத்தினால் சிதைந்துபோன             எமது தேசத்தையும்,தொலைந்து போன எமது             மக்களின் வாழ்வியல் உரிமைகளையும்             மறுபடியும் தூக்கி நிறுத்தவேண்டியது             எமது வரலாற்று கடமையாகும்.
           
           புலம்பெயர்ந்து வாழுகின்ற எமது             உறவுகளாகிய உங்களுக்கும் இந்தப்             பணிகளில் பாரிய பங்களிப்பு             இருக்கவேண்டும் என்பதையே நாம்             விரும்புகின்றோம்.
           
           எமது தேசத்தைக் கட்டியெழுப்பி எமது             மக்களுக்கான மகிழ்ச்சி தரும் வாழ்வை             மறுபடியும் எடுத்து நிறுத்தி,எமது             வரலாற்று வாழ்விடங்களை அபிவிருத்தியில்             உயர நிமிர்த்தி,எமது             தேசப்பற்றையும்,மக்கள் மீதான             நேசத்தையும் வெளிப்படுத்தி             நிற்கவேண்டியது உங்களது பணியாகும்.            
           
           எமது தேசத்தின்             வளர்ச்சியிலும்,உயர்ச்சியிலும்             உங்களுக்கும் பங்குண்டு.அரசியல்             கட்சிகளே எமக்கு எப்போதும்             அடையாளங்களாக இருந்துவிட முடியாது.எமது             தேசம்,எமது மக்கள் இவைகளே நமது             அடையாளங்களாக இருக்கவேண்டும் என்பதே             பரந்த சிந்தனையின் வெளிப்பாடாகும்.
            கடந்த காலங்களில் நடந்து முடிந்த             கசப்பான அரசியல் அனுபவங்களை             மறந்து,அரசியல் முரண்பாடுகளை களைந்து             நாங்கள் அனைவரும் ஒன்றுபட்டு எமது             மக்களின் வரலாற்று வாழ்விடங்களை             அபிவிருத்தியில் சிறந்து விளங்கும்             தேசமாக மாற்றியமைப்பதற்கு நாங்கள்             எல்லோருமாகப் பாடுபடுவோம் என்று             அறைகூவல் விடுக்கின்றேன்.
           
           விரிக்கும் சிறகுகள் இரண்டாக             இருப்பினும்,பறக்கும் திசை வழி             ஒன்றுதான் என்பார்கள்.
           
           அதுபோலவே நீங்கள் விரும்பும் அரசியல்             பாதைகள் பலவேறாக இருப்பினும் நாம்             அனைவருமே அடையவேண்டிய இலக்கு             ஒன்றுதான்.இடம்பெயர்ந்து நலன்புரி             நிலையங்களில் இன்று எங்களின் தயவை             எதிர்பார்த்து வாழும் அந்த மூன்று             இலட்சம் மக்களுக்கு மறுவாழ்வளிக்கும்             பணியிலிருந்து ஆரம்பித்து,படிப்படியாக             அனைத்தையும் மீண்டும் கட்டியெழுப்புவதை             எமது இலக்காகக் கொள்வோம்.
           
           புலம்பெயர்ந்து வாழுகின்ற             புத்திஐPவிகள்,முன்னாள்ப்             போராளிகள்,அரசியல் கட்சிகளின்             உறுப்பினர்கள்,கலை இலக்கிய             படைப்பாளிகள்,நவீன             எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள,             பொதுமக்கள்,தேசப்பற்றாளர்கள் என சகல             தரப்பினரும் இணைந்து எமது தேசத்தை             கட்டியெழுப்பும் இந்த மாபெரும் பணியை             முன்னெடுக்க முன்வரவேண்டும் என்பதே             இன்று தாயகத்தில் வாழும் எமது மக்களின்             எதிர்பார்பார்ப்பாகும்.
           
           சக அரசியல் கட்சிகளின் துணையோடு,எமது             மக்களின் பூரண ஆதரவோடு,சமூகப்             பெரியார்கள், சமூக             அக்கறையாளர்கள்,மற்றும் தமத்தலைவர்கள்             ஆகியோரின் அனுசரணையோடு,எமது தேசத்தின்             இளம் சந்ததியினரின் பங்களிப்போடு             இந்தப் பணியைச் செய்து முடிக்க நாம்             அனைவரும் கரங்கோப்போம்!
           
           நேசமுடன்
           என்றும் மக்களோடு வாழும்
           தோழர் டக்ளஸ் தேவானந்தா
           செயலாளர் நாயகம்
           ஈழ மக்கள் ஐனநாயக கட்சி 















