www.jananayakam.net.ms or www.jananayakan.tk, Email: jananayakam.gmail.com ....

Friday, December 4, 2009

மஹிந்தவை ஆதரிக்க 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்துள்ள ஈபிடிபி!

எதிர்வரும் 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் நடைபெற ஏற்பாடாகியுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினர் தற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களை ஆதரிப்பதாகவும், அதற்காக பத்து அம்சங்கள் கொண்ட கோரிக்கையினை தயாரித்துள்ளதாகவும் அதற்கிணங்கவே எதிர்காலத்தில் தேர்தல் நடவடிக்கைகள் தொடருமென ஈபிடிபி இனர் தெரிவித்துள்ளனர்.

ஈபிடிபி இனரின் பத்து அம்சக் கோரிக்கை:

1. தமிழ் பேசும் மக்களின் அரசியலுரிமைப் பிரச்சினைக்குத் தீர்வாக 13 வது திருத்தச் சட்டத்தில் ஆரம்பித்து படிப்படியாக கூடுதல் அதிகாரங்களைப் பெற்று மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற அரசியல் இலக்கை நோக்கி முன்னேறுதல்.

2. தமிழர்கள் இலங்கையர்களாகவும் அதேவேளையில் தமிழர்களாகவும் இருப்பதற்கான அவர்களது விருப்பங்களை உறுதிப்படுத்துதல்.

3. இலங்கையர் என்ற நிலையான சமத்துவ உணர்வையும் - இனக்குழுமம் என்ற அடிப்படையான பண்பாட்டையும், இனங்களுக்கு இடையில் சமத்துவத்தையும் பேணுதல்.

4. வன்னிப்பகுதியில் இருந்தும் அதியுயர் பாதுகாப்பு வலயங்களில் இருந்தும் இடம்பெயர்ந்த எமது மக்களை மீளக்குடியமர்த்தி அவர்களுக்கான வாழ்வியல் உரிமைகளுக்கான செயற்திட்டங்களை விரைவாக நடைமுறைப்படுத்தல்.

5. கடந்த மூன்று தசாப்தங்களாக நடைமுறையில் இருக்கும் பயங்கரவாத தடைச் சட்டம் மற்றும் அவசரகாலச் சட்டம் என்பவற்றை நீக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு வன்முறைகள் அற்ற அடிப்படை ஜனநாயக உரிமைகளை பாதுகாத்தல்.

6. அரசியல் காரணங்களுக்காக கைது செய்யப்பட்டவர்களுக்கும் சரணடைந்துள்ளவர்களுக்கும் பொது மன்னிப்பு வழங்கி புனர்வாழ்வளித்தல் மற்றும் காணாமற்போனவர்கள் குறித்த உண்மைகளைக் கண்டறிந்து ஆராய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.

7. கடந்தகாலங்களில் பொருளாதார அபிவிருத்தி கவனிக்கப்படாமலும் நீண்டகால யுத்த சூழ்நிலைகளால் அபிவிருத்தி காணப்படாமலும் இருக்கின்ற தமிழ் பிரதேசங்களுக்கு முன்னுரிமை வழங்கி அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுத்தல்.

8. இலங்கையின் ஏனைய பகுதிகளைப் போல் ஏ9 பாதை உட்பட ஏனைய போக்குவரத்திலும் தடைகளற்ற பயணத்தை உறுதிப்படுத்துதல்.

9. தமிழ் மொழிக்குரிய சமத்துவ அந்தஸ்தை நிர்வாக ரீதியில் திட்டமிட்டு விரிவாக்கி, இலங்கை அரச நிர்வாகத்தில் தமிழ் பேசும் மக்கள் அந்நியப்பட்டவர்கள் என்ற நிலையை அகற்றி எமது மக்களுக்கு அனைத்தும் கிடைக்கும் என்ற நம்பிக்கையை உருவாக்குவதோடு தமிழ் பேசும் மக்களும் இந்நாட்டின் பங்காளிகளே எனும் நிலையை உருவாக்குதல். இலங்கையின் மத்திய பொலீஸ் மற்றும் பாதுகாப்புப் படைகளில் இனவிகிதாசார அடிப்படையில் ஆட்சேர்ப்பு செய்யப்படுவதை உறுதிப்படுத்துதல்.

10. தமிழ் பேசும் மக்கள் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வரும் வரலாற்று வாழ்விடங்களிலிருந்து தாம் அகற்றப்பட்டு விடுவோம் என எழுந்திருக்கும் சந்தேகங்களை நீக்கி ஐக்கிய இலங்கைக்குள் அவர்களது வரலாற்று வாழ்விடம் அவர்களுக்கே உரியது என்ற நம்பிக்கையினை உறுதிப்படுத்துதல்.

அண்மையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுடனான சந்திப்பில் ஈடுபட்ட ஈபிடிபி அமைப்பினர் பத்து அம்சங்கள் கொண்ட கோரிக்கையினை அறிக்கையாக ஜனாதிபதியிடம் சமர்ப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.