Follow @jananayakan
மனித உரிமைகளுக்காகவும் மானுட நேயத்திற்காகவும் மனித குலத்தின் மனச்சாட்சிகளாக நின்று தங்களை அர்ப்பணம் செய்த மனித உரிமைப் போராளிகள் மற்றும் மனித உரிமைவாதிகள் அனைவருக்கும் என்றும் நாம் மரியாதை செலுத்துகின்றோம்!
இன்றைய தினம் மனித உரிமைகள் தினம். 1948 ஆம் ஆண்டு மார்கழி பத்தாம் திகதி
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபையானது மனித உரிமைகள் குறித்த உலத்தின் பிரகடனத்தை சட்ட ரீதியாக ஏற்றுக்கொண்டு அதற்கு அங்கீகாரம் வழங்கியது.
அன்றிலிருந்து இன்று வரை அறுபது ஆண்டுகள் கடந்தோடி விட்ட நிலையிலும் மனித உரிமைகள் என்பது வெறுமனே சட்டங்களால் மட்டும் அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றதே ஒழிய சகல தரப்பினரதும் மன விருப்பங்களால் அது அங்கீகரிக்கப்படவில்லை என்பது மனிதகுலத்தின் மனத்துயரங்களாக இருக்கின்றன.
மனித உரிமைகள் யாவும் மரணித்துவிட்ட ஒரு தேசத்தில் மனித உரிமைகள் மறுக்கப்பட்டு நலிந்து போன எமது மக்களோடு நாமும் இதுவரை காலமும் வாழ்ந்து வந்திருக்கின்றோம்.
மனித கௌரவங்களை மதிக்கவும் மனிதர்கள் யாவரும் சமன் என்ற மனுக்குலத்தின் தர்ம நியாயங்களை ஏற்கவும் தங்களை தயாராக்கிக் கொண்டு தங்களது மன விருப்பங்களோடு அன்றைய ஐக்கிய நாடுகள் சபையின் சட்ட திட்டங்களை சகல தரப்பினரும் ஏற்றுக்கொண்டு செயற்பட்டிருந்தால் இன்றும் எம்மத்தியில் மனித உரிமைகள் உயிர்வாழ்ந்திருக்கும்.
நாம் மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் பிரகடனத்தையும், அதன் சட்ட திட்டங்களையும் ஏற்க வேண்டும் என்ற கட்டாயத்தின் பேரில் மனித உரிமைகள் குறித்து சிந்தித்திருந்தவர்கள் அல்ல.
மனித உரிமைகள் குறித்த சிந்தனை என்பது இரத்தமும் தசையுமாக எமது உயிரோடும், உணர்வுகளோடும் ஒன்று கலந்து விட்ட ஒன்று. எமது வரலாற்றின் ஆரம்பங்களில் நாம் மனித உரிமை செயற்பாடுகளின் ஊடாகவும் மக்களின் அவலங்களைக் கண்டு அதற்குத் தீர்வு காணும் சமூப் பணிகளின் ஊடாகவும் மக்கள் சமூகம் குறித்த உயரிய முற்போக்கு சிந்தனைகளின் ஊடாகவுமே ஆயுதப்போராட்டத்திற்குள் காலடி எடுத்து வைத்திருந்தோம்.
அன்று நடந்த ஆயுதப்போராட்ட சூழலிலும் கூட எமது கைகளில் ஆயுதங்கள் இருந்தாலும் எமது சிந்தனையிலும் செயற்பாடுகளிலும் மனித நேயப்பண்புகளும் மனித உரிமைகள் குறித்த சமூக அக்கறையுமே மேலோங்கி காணப்பட்டன.
ஒரு வைத்தியரானவர் உயிர்களைக் காப்பற்றும் நோக்கில் சத்திர சிகிச்சை செய்வதற்காகவே தனது கையில் கத்தியை ஏந்தியிருப்பார். அதுபோலவே எமது கைகளில் இருந்த ஆயுதங்களும் வைத்தியரின் கைகளில் இருக்கும் கத்திக்கு சமனானவைகள் என்பதை நாம் எமது ஆயுதப்போராட்ட வரலாற்றில் மெய்ப்பித்து காட்டியிருக்கின்றோம்.
ஆனாலும், அதே வைத்தியர் ஏந்தியிருக்கும் உயிர்காக்கும் கத்தியானது மக்களை நேசிக்க தெரியாத மக்கள் விரோத சக்திகளின் கைகளில் சிக்கும் போது அந்த கத்தியானது மனித உயிர்களைக் காப்பாற்றுவதற்கு மாறாக மனித உயிர்களைக் கொன்று பழி தீர்க்கவே பெரிதும் பயன்படுகின்றது.
இதனால் மனித உரிமை மீறல்கள் என்பது எமது தேசத்தில் முன்னரை விடவும்
பல மடங்கு பெருகி எமது மக்களின் மீது பாரிய அவலங்களை சுமத்தியுள்ளது.
நீதியானதும் நேர்மையானதும் குறித்த இலக்கை எட்டி விட முடிந்த வழிமுறையையும் கொண்ட ஆயுதப்போராட்டத்தில் எமது மக்கள் மனித உரிமை மீறல்களை சந்தித்திருந்த போது மாபெரும் இலட்சியக் கனவுகளுக்காக அந்தத் துயரங்களையும் ஏற்றுத்தான் ஆகவேண்டிய கட்டாயத்தில் இருந்திருக்கின்றோம்.
ஆனாலும் ஆயுதப்போராட்டம் என்பது அழிவு யுத்தமாக மாறி நாம் அடைய வேண்டிய இலக்கை அடைவதற்கு மாறாக அது திசை வழி மாறி சென்ற போதுதான் எமது மக்கள் இது போன்ற மனித உரிமை மீறல்களுக்கு உட்பட வேண்டிய அவலங்கள் இனியும் தேவைதானா என்று நாம் சிந்தித்தோம்.
எந்த இலக்கையும் அடைய முடியாத ஓர் அழிவு யுத்தத்தின் மூலம் எமது மக்கள் அவலங்களை சுமப்பவர்களாகவும் மனித உரிமைகள் தொடர்ந்தும் மறுக்கப்பட்டவர்களாகவும் வாழ்வதற்கே நிர்ப்பந்திக்கப்படுவார்கள்.
ஆகவேதான் நாம் இது குறித்து தொலை தூரநோக்குடன் தீர்க்கதரிசனமாக எமது கருத்துக்களை உறுதியாக தெரிவித்து வந்திருக்கின்றோம்.
வேர்கள் இருக்கும் போது கிளைகளை மட்டும் வெட்டி விடுவதில் எந்த விமோசனங்களும் இருக்கப்போவதில்லை என்றும் தொடர்கின்ற அழிவு யுத்தம் நீடித்து செல்லும் வரை மனித உரிமை மீறல்களும் தொடர வேண்டிய துயரங்கள் ஏற்படும் என்றும் தொடர்ந்து நாம் கூறி வந்திருக்கின்றோம்.
ஆகவே அழிவு யுத்தத்தை நிறுத்தி அமைதி பேச்சுவார்த்தையின் ஊடாக அரசியல் தீர்விற்கு உடன்பட்டு செல்ல வேண்டும் என்றும் அதன் ஊடாகவே மனித உரிமை மீறல்களைத் தடுத்து நிறுத்த முடியும் என்றும் நாம் தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கின்றோம்.
மனித உரிமை மீறல் சம்பவங்களைக் கண்டித்து வந்திருக்கின்ற அதே வேளையில் மனித உரிமை மீறல் சம்பவங்கள் நடப்பதற்கான சூழலை திட்டமிட்டு உருவாக்கியிருந்த சக்திகள் குறித்து நாம் எமது கண்டனங்களையும் தெரிவித்து வந்திருக்கின்றோம்.
மனித குலத்தின் உரிமைகள் குறித்த அக்கறையின்மையும் அவற்றை அவமதித்தலும், மனித குலத்தின் மனச்சாட்சியை அவமானப்படுத்தும் காட்டுமிராண்டித்தனமான செயல்களுக்கு இது வரை இடமளித்து வந்திருக்கின்றது.
ஆனாலும், யுத்தம் தொடரும் வரை மனித உரிமை மீறல்களும் தொடரவே வழி வகுக்கும் என்று நாம் ஆரம்பங்களில் இருந்தே கூறி வந்திருப்பது போல இன்று யுத்தம் முடிவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. யுத்தம் முடிந்த கையோடு எமது மக்கள் மெல்லென நிம்மதி மூச்சு விடத்தொடங்கியிருக்கின்றார்கள்.
எமது அரசியல் வரலாற்றில் 2009 மே 18 க்கு முன் என்றும், அதற்குப் பின் என்றும் இரு வேறு வரலாறுகள் உண்டு என்பதை நாம் இன்று காண முடிகின்றது. 2009 மே 18 ஆம் திகதிக்குப் பின்னர் எமது தேசத்தில் மனித உரிமை மீறல்கள் பாரிய அளவில் குறைவடைந்து விட்டதை நாம் இன்று உணர முடிகின்றது.
இனியொரு புது விதி படைப்போம் என்றும், அதை எந்நாளும் காப்போம் என்றும் சம்பந்தப்பட்ட சகல தரப்பினரும் உணர்வதற்கான காலச்சூழல் ஒன்று இன்று உருவாகியிருக்கின்றது.
ஆயுத வன்முறைகளுக்கு இனி இங்கு எவரும் அனுமதி வழங்க முடியாது. எமது மக்களை அச்சுறுத்தவும் அவர்களைப் பலாத்காரப்படுத்தி எந்தவொரு செயல்களில் ஈடுபடுத்தவும், வரி என்றும் கப்பம் என்றும் எமது மக்களை சுரண்டி துன்புறுத்தவும், மனிதப்படுகொலைகள் ஆட்கடத்தல் போன்ற மனித உரிமை மீறல்களுக்கு இங்கு இடமளிக்கவும் முடியாது என்ற உறுதியும் மன விருப்பங்களும் சகல தரப்பினர் மத்தியில் இருந்தும் உணர்வுப்பூர்வமாக உருவாக வேண்டும்.
இதே வேளை வன்முறைகளைத் தூண்டி விடும் தீயசக்திகள் குறித்தும் விழிப்புடன் இருக்கவும் எமது மக்கள் தயாராக இருக்க வேண்டும் என்றும் நான் இன்றைய தினத்தில் வேண்டுகோள் விடுக்கின்றேன்.
மனிதக் குடும்பம் சார்ந்த அனைவரதும் உணர்வுகளையும் கௌரவத்தையும் மனிதர்கள் யாவரும் சமன் என்ற பாகுபடுத்தப்பட முடியாத உரிமைகளையும் அங்கீகரிக்க வேண்டும். இதுவே உலகத்தின் சுதந்திரம் நீதி சமாதானம் என்பவற்றுக்கு அடிப்படையாக அமைந்துள்ளது.
இந்த வாசகத்தை முகப்பாகக் கொண்டதே மனித உரிமை பிரகடனம் ஆகும்.
ஆகவே பேச்சு சுதந்திரம் எழுத்து சுதந்திரம் விரும்பிய அரசியல் கட்சிகளை சுயமாகத் தெரிவு செய்யும் சுதந்திரம், விரும்பிய இடங்களை நோக்கிய நடமாடும் சுதந்திரம், அச்சத்தில் இருந்தும் வறுமையில் இருந்தும் விடுதலை பெறுதல் என மனிதன் பூரண இன்பத்துடன் வாழ முடிந்த உலகத்தின் வருகையே சாதாரண மக்களின் மிக உயர்ந்த குறிக்கோளாக இருந்து வருகிறது.
இதே வேளை ஆண்கள் பெண்களுக்கிடையிலான சமத்துவ உரிமைகள் முதற்கொண்டு மனித கௌரவம் சமூக முன்னேற்றம் உயர்ந்த வாழ்க்கைத்தரம் என்பவற்றை நாம் தொடர்ந்தும் வலியுறுத்துவோம்.
பெருமழை பெய்து ஓய்ந்தாலும் தூறல்கள் இன்னமும் ஓயாது என்பது போலன்றி, யுத்தம் ஓய்ந்தாலும் சிறு சிறு வன்முறைகள் கூட எங்கும் நடந்துவிட யாரும் அனுதிக்க முடியாது.
நடைமுறைச்சாத்தியமான ஒரு வழிமுறையின் மூலம் அடைய முடிந்த அரசியல் தீர்வின் ஊடாக அனைத்து மனித உரிமை மீறல்களையும் தடுத்து நிறுத்த சகல தரப்பினரும் உறுதியோடு உழைக்க முன்வரவேண்டிய சூழல் இப்போது உதயமாகியுள்ளது.
இலங்கை இந்திய ஒப்பந்தம் என்பது எமது நீதியான ஆயுதப்போராட்டத்தினால் எமக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகும். அதன் அடிப்டையில் 13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடை முறைப்படுத்துவதோடு கட்டம் கட்டமாக கிடைக்க வேண்டிய நியாயமான அரசியல் அதிகாரங்களைப் பெற்று எமது இலக்கு நோக்கி முன்னேறவும் நாம் தொடர்ந்தும் உறுதியுடன் உழைப்போம்.
நடந்து முடிந்த யுத்தத்தின் எச்ச சொச்சங்களை மனித அவலங்களாக இன்னமும் எம் கண் முன்பாக நாம் காண்கின்றோம். அந்த எச்ச சொச்சங்களையும் இல்லாதொழிப்பதற்காக இடம்பெயர்ந்த மக்களுக்கான மீள் குடியேற்றம் அவர்களுக்கான வாழ்வாதாரம் மற்றும் வாழ்வியல் உரிமைகளைப் பாதுகாத்தல் என அனைத்து விடயங்களையும் விரைவு படுத்துமாறு நாம் அரசாங்கத்துடன் பேசி வருகின்றோம்.
இதே வேளை யுத்தம் மற்றும் அரசியல் காரணங்களுக்காக கைதுசெய்யப்பட்வர்கள் சரணடைந்தவர்கள் என சகலருக்கும் பொது மன்னிப்பு வழங்கி அவர்களுக்கு புனர்வாழ்வளித்து அவர்களைப் பொது வாழ்க்கையில் ஈடுபட அனுமதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றோம்.
உண்பதற்கு உணவில்லை என்று எங்கே ஓர் அழுகுரல் கேட்கின்றதோ அங்கேயும் மனித உரிமை மீறல் நடக்கின்றது என்பதை உணர்ந்து உணவு முதற்கொண்டு உரிமைகள் வரைக்கும் பெறுவதற்காக நடைமுறை சாத்தியமான வழிமுறை நோக்கி அனைத்து மக்களும் அரசியல் சக்திகளும் உறுதியுடன் அணிதிரள வேண்டும் என நான் இன்றைய மனித உரிமைகள் தினத்தில் அறைகூவல் விடுக்கின்றேன்.
மனித உரிமைகளுக்காகவும் மானுட நீதிக்காகவும் இன ஐக்கியம் இன சமத்துவதற்காகவும் அரசியலுரிமை சுதந்திரத்திற்காகவும் நாம் தொடர்ந்தும் உறுதியுடன் உழைப்போம்.