www.jananayakam.net.ms or www.jananayakan.tk, Email: jananayakam.gmail.com ....

Saturday, May 9, 2009

வட்டுக்கோட்டைப் பிரகடனம்

எம் இனிய நோர்வே வாழ் உறவுகளே

எம் தாயக தேசத்தின் அவலங்களை உங்களுக்கு சொல்லத்தேவையில்லை.
உறவுகளைப் பலி கொடுத்து உடமைகளை பறி கொடுத்து சொந்த வீடிழந்து சொந்தங்களை பிரிந்து அச்சத்தில் உறைந்து போன உயிர்களோடு மட்டும் ஓடி வந்த எமது உறவுகள் நடுத்தெருவிலும் இன்று நலன்புரி முகாம்களில் தங்களது வாழ்க்கையை தொலைத்து விட்டு இருக்கிறார்கள். 1976 இல் தந்தை செல்வா தலைமையில் எடுக்கப்பட்ட வட்டுக்கோட்டை தீர்மானமும் தமிழ் பேசும் மக்களுக்கான விடுதலை என்பது சுதந்திர ஈழமே என்று அன்றைய சூழலில் இன்னொரு புறத்தில் கிளம்பிய எழுச்சியும் ஆயுதப்போராட்டத்தை தொடக்கி வைத்தன.

பல்வேறு விடுதலை அமைப்புகளும் பன்முகச்சிந்தனைகளோடு எழுந்து நின்று ஒன்று பட்டு போராட்டக்களத்தில் குருதி சிந்தி தியாகங்களை புரிந்தன. ஆனாலும் தாம் மட்டும் தனித்து நின்று போராட வேண்டும் என்ற தனித்தலைமை வெறிபிடித்த புலித்தலைமை சக விடுதலை அமைப்புகளை தடை செய்து சகோதரப்போராளிகளை தெருத்தெருவாக கொன்றொழித்தது. எதிரி யார் நண்பர் யார் என்று தெரிந்திராத புலித்தலைமையின் ஏக பிரதிநித்துவம் என்ற தனித்தலைமை வெறியினால் எமது போராட்டம் திசை மாறி சென்று சொந்த இனத்தின் குருதி குடித்து தமிழ் பேசும் மக்களின் போராடும் பலத்தை அடித்து நொருக்கி சிதைத்திருந்தது. இதனால் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை நாம் அடைந்து விட முடியாது என்ற நம்பிக்கையீனங்களே தோன்றியிருந்தன. இந்த காலச்சூழலில்தான் இலங்கை இந்திய ஒப்பந்தம் என்ற பொன்னான வாய்ப்பு பிறந்திருந்தது. அதை ஏற்றுக்கொள்ள மறுத்த புலித்தலமைமை அன்றிலிருந்து அதன் பின்னர் கிடைத்த அரசியலுரிமை தீர்விற்கான அனைத்து சந்தர்ப்பங்களையும் தமது சுயலாப நோக்கங்களுக்காக சரிவரப்பயன்படுத்தியிருக்கவில்லை. இதனாலேயே எமது மக்கள் இன்று பேரழிவுகளையும், பெருந்துயரங்களையும் சந்தித்து வருகின்றார்கள்.

சகோதர விடுதலை அமைப்புகள் மீதான படுகொலைகளினால் வட்டுக்கோட்டை தீர்மானம் என்பது தமிழ் பேசும் மக்களை கைவிட்டுப்போனது. அதன் பின்னர் கிடைத்திருந்த இலங்கை இந்திய ஒப்பந்தத்தை புலித்தலைமை ஏற்று யுத்தத்தை தொடராதிருந்திந்தால் இன்று எமது மக்கள் நடைமுறையில்
சுய நிர்ணய உரிமைகளை அனுபவித்திருப்பார்கள். எமது மக்களை இன்று நடுத்தெருவிற்கு கொண்டு வந்திருக்க வேண்டிய துயரங்களும் நிகழ்ந்திருக்காது.

ஆளும் கட்சி அரசியல் தீர்வை முன் வைப்பதும் அதை எதிர்க்கட்சி எதிர்ப்பதும்தான் இலங்கை தீவின் அரசியல் வரலாறு. இதுவே மாறி மாறி நடந்து வந்திருக்கிறது. இன்று எமது மக்களுக்கு தேவையானது ஒரு அரசியல் தீர்வு மட்டும்தான். இதை இலங்கைத்தீவின் அரசியல் சூழ்நிலையே தீர்மானிக்க வேண்டிய கட்டாயம் உருவாகியிருக்கின்றது. இதை விடுத்து வெறும் சலசலப்பு காட்டுவதற்காகவே இன்றைய சூழலில் வட்டுக்கோட்டை தீர்மானம் என்ற அடைய முடியாத ஒன்றிற்காக புலம் பெயர் நாடுகளில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது.

ஏற்கனவே 1980 களின் ஆரம்பங்களில் அமெரிக்காவின் மாசாசூஸ் மாநிலத்திலும், இலண்டனிலும் ஈழப்பிரகடனம் செய்து அதை வெற்றி பெறச்செய்வதற்கான முயற்சிகள் நடந்திருக்கின்றன. அன்றைய சூழலில் அவைகளை ஒரு வகையில் ஏற்க முடிந்தது. ஆனாலும் இன்றைய காலச்சூழலில் வெறும் சலசலப்பு காட்டுவதற்காக மட்டுமே வட்டுக்கோட்டை தீர்மானத்தை தூக்கிப்பிடித்துக்கொண்டு உங்கள் மத்தியில் சிலர் வருகின்றார்கள். தீர்மானங்களும் பிரகடனங்களும் வெறுமனே சலசலப்பு காட்டுவதற்காக அல்ல. அவைகள் எமது மக்களின் நிம்மதியான வாழ்விற்கும் நீடித்த அரசியல் உரிமை சுதந்திரத்திற்கும் வழி காட்டுவதற்காகவே இருக்க வேண்டும்.

இது வரை கிடைத்திருந்த தீர்வுகள் அனைத்தையும் அரை குறை தீர்வுகள் என்று கூறி சுயலாப அரசியலுக்காக தட்டிக்கழித்து வந்ததினால் நாம் எமது இலக்கு நோக்கி முன்னேற முடியாமல் இருந்திருக்கின்றோம். ஆகவே இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையிலான 13 வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடை முறைப்படுத்தி அதற்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டு ஐக்கிய இலங்கைக்குள் சமாதான சகவாழ்வும் அரிசியலுரிமையும் பெற்ற சுதந்திர பிiஐகளாக எமது மக்கள் வாழ முடிந்த வாழும் சூழலை நோக்கி நாம் முன்னேறுவதே நடை முறைச்சாத்தியமான வழி முறையாகும். இதுவே அனைத்து கட்சிகளாலும் குறிப்பாக ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளால் ஏற்றுக்கொள்ள முடிந்த ஒன்றாகும். ஆகவே சூழ்நிலைக்கு ஒவ்வாத வெற்றுக்கோசங்களும், வெறும் சுதந்திரப்பிரகடனங்களும் எமது இலக்கு நோக்கி முன்னேறிச்செல்ல முடிந்த நடை முறைச்சாத்தியமான வழிமுறைகளை முற்றாக மூடிவிடுவதற்கான இன்னொரு முயற்சியாகவே கருதப்படும். இதனால் எமது மக்கள் தொடர்ந்தும் அவலங்களை சந்திக்க வேண்டிய துயரங்கள் நிகழவே வழி வகுக்கும்.

எமது நடைமுறைச்சாத்தியமான வழிமுறையின் பக்கம் அனைவரும் அணிதிரண்டு வெற்றுக்கோசங்களை நிராகரிக்க முன்வரவேண்டும் என்பதே தாயகத்தில் வாழும் எமது மக்களின் விருப்பங்களாகும். நடைபெறப்போகும் வாக்கெடுப்பில் சிந்தித்து செயற்படுமாறு தாயகத்தில் அவலப்படும் எமது மக்களின் சார்பாக வேண்டுகோள் விடுக்கின்றோம்.

ஈழ மக்கள் ஐனநாயக கட்சி ஈ.பி.டி.பி
நோர்வே பிராந்தியம்.
08. 05. 09

http://www.tamilnation.org/images/selfdetermination/vk_1.jpg
http://www.tamilnation.org/images/selfdetermination/vk_2.jpg
http://www.tamilnation.org/images/selfdetermination/vk_3.jpg





நன்றி: தமிழ்தேசியம் (வட்டுக்கோட்டைத் தீர்மானம்)