www.jananayakam.net.ms or www.jananayakan.tk, Email: jananayakam.gmail.com ....

Monday, May 18, 2009

ஒருவரின் மரணத்தில் யாரும் மகிழ்ச்சி கொண்டாட முடியாது!

என்னைப் பொறுத்தவரையில் பிரபாகரன் இன்று கொல்லப்பட்டது என்பதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. பிரபாகரன் என்றோ தற்கொலை செய்து கொண்டவர் என்றே நான் கருதுகின்றேன். எமது மக்களின் உரிமைகளுக்காகப் போராடப் புறப்பட்ட சகோதர இயக்கத் தலைவர்களையும், பல்லாயிரக்கணக்கான சக இயக்கப் போராளிகளையும் தெருத்தெருவாகப் புலித்தலைமை கொன்றொழித்த போதே பிரபாகரன் தற்கொலை செய்துவிட்டதாகவே நான் கருதுகின்றேன். ஆயுதப்போராட்ட வழியில் மட்டுமன்றி அகிம்சை வழியில் உரிமை கேட்டு போராடியிருந்த தமிழ்த் தலைவர்களையும் சேர்த்தே புலித்தலைமை கொன்றொழித்தது. அப்போதே பிரபாகரன் தற்கொலை செய்து கொண்டுவிட்டதாகவே நான் கருதுகின்றேன். பல நூறு புத்திஜீவிகளையும் தலை சிறந்த கல்விமான்களையும் புலித்தலைமை கொன்றொழித்திருந்தது. அப்போதே பிரபாகரன் தற்கொலை செய்து கொண்டுவிட்டதாகவே நான் கருதுகின்றேன்.

இலங்கை - இந்திய ஒப்பந்தத்திற்கு முன்னர் எமது மக்களின் உரிமைகளுக்காக நீதியான ஒரு உரிமைப் போராட்டம் நடந்திருந்தது என்பதை நான் ஏற்றுக்கொள்கின்றேன். அந்தப் போராட்டத்தில் நானும் பிரதான பாத்திரம் ஏற்றுச் செயற்பட்டிருக்கின்றேன். அந்தப் போராட்டத்தில் புலிகளுக்கு இருந்த பங்களிப்பை நான் மறுக்கவில்லை. அதை நான் கொச்சைப்படுத்தவும் இல்லை. ஆனாலும் அப்போது கூட புலித்தலைமை அரச படையினருக்கு எதிராகத் தங்களது துப்பாக்கிகளை திருப்பியதை விடவும் சகோதர இயக்கங்கள் மீதே தமது துப்பாக்கிகளைத் திருப்பியிருந்தார்கள். இது தற்கொலைக்கு ஒப்பானது என்ற விடயத்தை புலித்தலைமை புரிந்து கொண்டிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அது குறித்து அப்போது சிந்தித்திருக்கவில்லை. எமது உரிமைப் போராட்டத்தின் ஆரம்பங்களில் பிரபாகரனுக்கு இருந்த பங்களிப்பை நான் ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக எமது போராட்டத்தைச் சொந்த இனத்தின் குருதி குடிக்கும் அழிவு யுத்தமாக மாற்றியது குறித்த முரண்பாடுகளே எனக்கு அதிகம் உண்டு.

பிரபாகரனை நம்பி தமது உயிர்களை அர்ப்பணம் செய்த எமது தமிழ் இளைஞர் யுவதிகளின் தியாகங்கள் அனைத்தும் வீணாகிப்போய் விட்டது என்பதே எமது கவலை. தவறுகளுக்கு அப்பால் புலிகள் உட்பட அனைத்து விடுதலை இயக்கங்களினதும் தியாகங்களினால்தான் இலங்கை - இந்திய ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. ஆனாலும் அதைப் புலித்தலைமை பயன்படுத்தியிருக்கவில்லை. அன்று அதை ஏற்று செயற்பட்டிருந்தால் தவறுகளுக்கு அப்பாலும் பிரபாகரனுக்கு இன்று இந்த நிலை உருவாகியிருக்காது. உன் கால்களில் குத்திய முட்கள் ஒவ்வொன்றும் அடுத்தவன் தூவி விட்டவைகள் அல்ல. உனக்கு நீயே என்றோ தூவி விட்டவைகள். இதைத்தான் என்னால் கூற முடியும்.

தமக்குரிய படுகுழியைத் தாமே தோண்டி விட்டு அதனுள் வீழ்வதற்கு அவர்களே காத்திருந்து வீழ்ந்தமைக்கு அடுத்தவர்கள் எவரும் காரணமல்ல. பிரபாகரனின் முடிவிற்குப் பின்னர் தமிழ் மக்களின் அரசியல் பயணத்திற்கான தடைகள் அகன்றிருப்பதாகவே நாம் கருதுகின்றோம். அதேவேளை தமிழ் மக்களின் அரசியல் தளத்தில் ஒரு இடைவெளி ஏற்பட்டிருப்பதாகத் தோற்றுவிக்கப்பட்டிருக்கும் மாயையை ஏற்றுக்கொள்ள எமது கட்சி தயாராக இல்லை. ஏனென்றால் புலிகள் படுகொலையைப் புரிந்து பயங்கரவாதத்தை நடாத்தியபோது எமது தோழர்களும், மக்களும் படுகொலை செய்யப்பட்டபோதும் பல இழப்புக்களைச் சுமந்து கொண்டு ஜனநாயக வழிமுறையில் நடைமுறைச் சாத்தியமான வழியிலேயே போராடி வந்துள்ளோம். 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுற்படுத்துவதன் ஊடாக தமிழ்பேசும் மக்களின் கௌரவமான அரசியல் உரிமைகளைப் பெற்றுக்கொள்ள முடியுமென நான் நம்புகின்றேன்.

இதை வலியுறுத்தி நாம் தொடர்ந்தும் குரல் கொடுத்து வருகின்றோம். எமது இந்த முயற்சிக்கு 13 ஆவது திருத்தச் சட்டம் உருவாகக் காரணமாக இருந்த நாடு என்ற வகையிலும் எம் மக்கள் மீதான அன்பும், அக்கறையும், உரிமையும் கொண்ட நாடுமாகிய இந்தியாவின் பங்களிப்பு மிக அவசியம் என்பதை நாம் வலியுறுத்துகின்றோம். யார்தான் மரணித்தாலும், மக்களையும் மண்ணையும் கைவிட்டு ஓடினாலும், தமிழ் பேசும் மக்களுக்கான அரசியலுரிமை சுதந்திரம் நோக்கிய பயணம் தொடரும். அது பிபாகரனின் அழிவுப்பாதையில் அல்ல. ஆக்கபூர்வமான எமது நடைமுறைச்சாத்தியமான வழி முறையில் மட்டுமே தொடரும்.

தோழர் டக்ளஸ் தேவானந்தா பா.உ.
செயலாளர் நாயகம்
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி
அமைச்சர்
சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை.