Follow @jananayakan
நேசமுடன் அனைவருக்கும் வணக்கம்!
எங்களது அழைப்பை ஏற்று மன விருப்பங்களோடு வந்திருக்கும் உங்களுக்கு முதலில் நான் நன்றி தெரிவிக்கின்றேன். நாங்கள் உங்களை இங்கு அழைத்திருப்பதன் நோக்கம் நீங்கள் எங்களை துதித்து பாட வேண்டும் என்பதற்காகவோ அன்றி புகழ்ந்து எழுத வேண்டும் என்பதற்காகவோ அல்ல.
கலை இலக்கியங்களை நீங்கள் சுதந்திரமாகப் படைக்கவேண்டும். அதற்காக நீங்கள் சுதந்திரமாக சிந்திக்க வேண்டும். உங்களது ஆற்றல்களையும் சிந்தனையின் தேடல்களையும் எமது மக்களுக்காக தொடர்ந்தும் நீங்கள் சரிவரப்பயன்படுத்த வேண்டும் என்பதுதான் எங்களது நோக்கம்.
இதில் நீங்கள் எதிர் கொள்ளும் தடைகள் எதுவாயினும் அவைகளைக் கண்டறிந்து அந்தத் தடைகளை அகற்றி உங்களை சுதந்திரமான இலக்கியப் படைப்பாளிகளாக நீடித்து வாழ வைக்க வேண்டும் என்பதற்காகவே நாம் உங்களை அழைத்திருக்கின்றோம்.
கலை இலக்கியப் படைப்பாளிகள் வெறுமனே கலை இலக்கியங்களை மட்டும் படைத்துக்கொண்டிருப்பவர்கள் அல்லர். தமது படைப்பிலக்கியங்களுக்கு ஊடாக ஒரு சமுதாயத்தையே புதிதாகப் படைப்பவர்கள் என்றுதான் நான் கருதுகின்றேன். தாம் வாழுகின்ற சமகால சமுதாயத்தில் இருந்து புதியதொரு சமுதாயத்தை படைப்பவர்களே கலை இலக்கியப் படைப்பாளிகளாவர்.
மக்கள் அழுதால் ஒரு படைப்பாளி தானும் அழுவான். மக்கள் சிரித்தால் படைப்பாளி தானும் சிரிப்பான். மக்கள் ஆனந்தக் கூத்தாடினால் அவர்களோடு சேர்ந்து படைப்பாளியும் ஆனந்தக் கூத்தாடுவான்.
எமது போராட்ட வரலாற்றில் எமது மக்கள் அழுதிருக்கின்றார்கள். சிரித்திருக்கின்றார்கள். ஆனாலும் ஆனந்தக் கூத்தாடும் அளவிற்கு எமது மக்கள் இதுவரை முழுமையான மகிழ்ச்சியை அனுபவித்திருக்கவில்லை என்பதை நான் உங்களிடம் கூறி வைக்க விரும்புகின்றேன்.
எமது மக்கள் அழும்போது நீங்கள் அதை இலக்கியங்களாகப் படைக்க விரும்பியிருக்கிறீர்கள். எமது மக்கள் சில வேளைகளில் சிரிக்கும் போதும் அதையும் நீங்கள் இலக்கியங்களாகப் படைக்க விரும்பியிருக்கின்றீர்கள்.
ஆனாலும் கடந்த சில காலங்களில் உங்களால் எமது மக்களின் மன விருப்பங்களைப் புரிந்து கொண்டும் அவைகளை படைப்பிலக்கியங்களாக முழுமையாகக் கொண்டு வருவதற்கு உங்களால் முடியாமல் போய்விட்டது.
காரணம் எழுதுவதற்கான ஜனநாயக சுதந்திரம் என்பது உங்களுக்கு மறுக்கப்பட்டிருந்தது. சுதந்திரமாக எங்களை சிந்திக்க விடு! சுதந்திரமாக எங்களை எழுத விடு!.. சுதந்திரமாக எங்களைப் பேச விடு என்று நீங்கள் கேட்பதற்கான சுதந்திரம் கூட எமது தேசத்தில் மறுக்கப்பட்டிருந்தது.
உங்களது ஜனநாயக உரிமைகளை நீங்கள் பல்வேறு காலச்சூழல்களிலும் பல்வேறு தரப்பினரிடமும் காவு கொடுத்து விட்டீர்கள் என்பதையும் இந்த இடத்தில் நான் கவலையோடு தெரிவிக்க விரும்புகின்றேன்.
அதற்குக் காரணம் உங்களது பேனாமுனையின் வலிமையை துப்பாக்கி முனைகள் அமுக்கி வைத்திருந்திருந்தன என்பதை நான் மறுப்பதற்கில்லை. ஆனாலும் துப்பாக்கி முனைகளை விடவும் பேனா முனையே வலிமை மிக்கது என்ற உண்மையை சகல தரப்பினரும் உணர்ந்து கொள்வதற்கான காலம் இன்று உருவாகி வருகின்றது.
உங்களைப் போல் எமது ஈழத்து கவிஞை ஒருவர் எழுதிய வரிகள் எனக்கு ஞாபகம் வருகின்றது.
சமகால இருப்பை நியாயப்படுத்துவதற்காக
எமது கடந்த கால வரலாற்றை கொச்சைப்படுத்த
நான் விரும்பவில்லை!...
இவ்வாறு அந்த கவிஞை கூறியது போல் ஒரு காலத்தில் எமது தேசத்தில் நடந்த ஆயுதப்போராட்டத்தை இன்றைய எமது சமகால சூழலுக்காக நான் கொச்சைப்படுத்த விரும்பவில்லை.
ஆரம்பங்களில் நடந்தது ஒரு நீதியான ஆயுதப்போராட்டம். அதில் நானும் ஒரு முன்னணி போராளியாக இருந்து ஒரு சுதந்திரப்போராட்ட இயக்கத்தையே வழி நடத்தி வந்திருக்கிறேன்.
அப்போது பலதும் பத்தும் என்று பல்வேறு பன்முகச்சிந்தனைகளும் முடிந்தளவிற்கு உயிர்வாழ்ந்திருக்கின்றன. தவறுகளும் நடந்திருக்கின்றன. ஆனாலும் அந்தத் தவறுகளை சுட்டிக்காட்டுவதற்காக சுதந்திரம் என்பது உங்களுக்கு ஏதோ ஒரு வகையில் இருந்திருக்கின்றது.
தாம் மட்டும் ஆள வேண்டும், அதற்காக தாம் மட்டும் போராட வேண்டும் என்ற ஏகப்பிரதிநிதித்துவ சிந்தனைகள் என்று உருவாக்கப்பட்டதோ அப்போதுதான் எமது போராட்டம் திசை வழி மாறி சென்றிருந்தது.
பல்வேறு விடுதலைப்போராட்ட அமைப்புகளும் தடை செய்யப்பட்டன. எழுத்தாளர்கள் கவிஞர்கள் வானொலிக்கலைஞர்கள் நாடகக்கலைஞர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் தாம் வாழ்வதற்கு கூட சுதந்திரம் இல்லாத தேசம் என்று எண்ணி எமது தேசத்தை விட்டு புலம்பெயர்ந்து ஓடி விட்டனர். பலர் கொல்லப்பட்டனர். பலர் அச்சத்தில் உறைந்து போய் மௌனமாகி விட்டனர்.
சிலர் தவறான வழிமுறையின் பக்கம் நின்று எமது மக்களை இருண்ட யுகத்தினுள் தள்ளி விடுவதற்கு தங்களது பேனா முனைகளைப் பயன்படுத்தியிருந்தார்கள்.
இத்தகைய சூழலில்தான் நாமும் இலங்கை இந்திய ஒப்பந்தத்தை ஏற்று ஜனநாயக வழிமுறைக்கு வந்திருந்தோம். அப்போது கூட படைப்பிலக்கிய வாதிகளான உங்களுக்கு உரிய சுதந்திரம் கிடைத்திருக்கவில்லை.
காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ளும் தந்திரங்கள் இங்கு கையாளப்பட்டிருக்கவில்லை. வெறும் சுயலாபங்களுக்காகக் கிடைத்த சந்தர்ப்பங்கள் யாவற்றையும் சில அரசியல் தலைமைகள் தவறவிட்டிருக்கின்றன.
சப்பாத்துக்கு அளவாக கால்களை வெட்டி விட முடியாது. கால்களுக்கு அளவாகவே சாப்பாத்துக்களைத் தேட வேண்டும். இந்த ஜதார்த்தங்களை தமிழ் அரசியல் தலைமைகள் பலவும் உணர்ந்திருக்கவில்லை.
இதுவரை கனிந்து வந்திருந்த அமைதி பேச்சு வார்த்தைகளுக்கான சந்தர்ப்பங்களின் போது தங்களைப் படைப்பிலக்கிய வாதிகளாகக் காட்டிக்கொண்ட பலரும் தங்களது எழுத்தாற்றலை எமது மக்களின் மகிழ்ச்சிக்காக பயன்படுத்தியிருக்கவில்லை.
தந்ததை வாங்கி தலை குனிந்து கொள்ள
எங்கள் தலைவன் ஒன்றும் அரபாத் அல்ல!
இவ்வாறு கவிதைகள் எழுதி தமிழ் அரசியல் தலைமைகளைத் தொடர்ந்தும் தவறான வழிமுறை நோக்கி செல்வதற்கே தங்களது எழுத்தாற்றலை பயன்படுத்தியிருக்கின்றார்கள். இது போன்ற தவறான வழிமுறைகளுக்கு ஒத்துப்போகும் இலக்கியங்களுக்கே இங்கு அனுமதியும் சுதந்திரமும் வழங்கப்பட்டிருந்தன.
ஒரு போராட்ட சூழலில் சுயமான படைப்பிலக்கியங்கள் சுதந்திரமாக வாழ வேண்டும். அதற்கான உரிமைகளை போராட்டத்தை வழி நடத்தி செல்லும் தலைமைகள் படைப்பிலக்கிய வாதிகளுக்கு இங்கு வழங்கியிருக்க வேண்டும். ஆனாலும் அது இங்கு நடந்திருக்கவில்லை.
துப்பாக்கி முனை என்பது எந்தளவிற்கு ஆதிக்கம் செலுத்துகின்றதோ அதை விடவும் உயர்ந்ததாக பேனா முனை என்பது மேலெழுந்து துப்பாக்கிகளை வழி நடத்தி செல்வதற்கு இங்கு அனுமதிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனாலும் அதுவும் இங்கு நடந்திருக்கவில்லை.
எழுதுவதற்கே சுதந்திரமில்லாத ஒரு சூழலில் எந்தவொரு போராட்டத்தையும் வெற்றியின் இலக்கு நோக்கி நகர்த்த முடியாது. இந்த உண்மையை இன்று சகல தரப்பினரும் உணர்ந்திருக்கின்றார்கள்.
இலக்கியம் என்பது ஒரு காலக்கண்ணாடி. ஒவ்வொரு காலச்சூழலிலும் நடக்கின்றன அரசியல், சமூக தன்மைகளை அடுத்து வரும் சந்ததியின் கண் முன்பாக எடுத்து நிறுத்துவதே இலக்கியமாகும்.
கலை கலைக்காக அல்ல. கலை மக்களுக்காகவே என்பதுதான் உண்மை. இது போலவே இலக்கியம் என்பதும் இலக்கியத்திற்காக மட்டுமல்ல. இலக்கியமும் மக்களுக்கானதே!
படைப்பிலக்கியங்களில் அரசியல் கலந்து விடக்கூடாது என்பது ஏற்றுக்கொள்ள முடிந்த ஒன்றல்ல. அரசியல் கலக்காத தூய இலக்கியங்களே படைப்பிலக்கியங்கள் என்று வாதிடுவதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் என்று நான் கருதவில்லை.
ஆனாலும் உங்களது படைப்பிலக்கியங்களில் அரசியல் கலந்திருக்க வேண்டுமா இல்லையா என்பதில் படைப்பிலக்கிய வாதிகளான உங்களது தீர்மானங்களே பிரதானமாக இருக்க வேண்டும். நீங்கள் உங்களது விருப்பங்களைப்போலவே இலக்கியங்களை படைப்பதற்கான சுதந்திரம் எங்கும் இருக்க வேண்டும்.
உங்களது படைப்பிலக்கியங்களில் நீங்கள் வாழும் சமகால சமூக பொருளாதாரம் பற்றிய விடயங்களை மட்டும் வெளிக்கொண்டு வரவேண்டுமாயின் அதையும் நான் ஏற்றுக்கொள்கின்றேன். அரசியல் விடயங்கள் குறித்து நீங்கள் உங்களது படைப்பிலக்கியங்களில் எழுத வேண்டுமாயின் அதையும் நான் மன விருப்பங்களோடு ஏற்றுக்கொள்கின்றேன்.
ஆனாலும் உங்களது படைப்புகளில் நடைமுறைச்சாத்தியமற்ற வெறும் கவர்ச்சிகரமான வெற்றுக்கோசங்களுக்கு மட்டும் இடமளித்து விடாதீர்கள். உணர்ச்சி வசப்பட்டு பேசும் அறிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து விடாதீர்கள்.
நடைமுறைச்சாத்தியமற்ற கவர்ச்சிகரமான பேச்சுக்களும் உணர்ச்சிகரமான அறிக்கைகளும் அளவிற்கு மிஞ்சிய வன்முறைகளும்தான் இன்று எமது மக்களுக்கு பாரிய அழிவுகளை ஏற்படுத்தி அவலங்களை மட்டும் சந்திக்க வைத்திருக்கிறது.
அனுபவங்கள்தான் சிறந்த வழி காட்டி சிறந்த ஆசான். எமது கடந்த கால அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு எமது இலக்கு நோக்கி நகர்வதற்கு படைப்பிலக்கிய வாதிகளான நீங்களும் நடைமுறைசாத்தியமான வழிமுறையில் சிந்தித்து செயற்பட வேண்டும் என்று நான் உங்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன்.
உங்களது கருத்துக்கள் அனைத்தையும் நான் ஏற்றுக் கொண்டாலும் ஏற்றுக்கொள்ளாவிடினும் அந்தக் கருத்துக்களை கூறக்கூடிய உங்களது சுதந்திரத்திற்காக நான் உயிரை கொடுத்தும் போராடுவேன் என்று கூறி எனது உரையை நான் முடிக்கின்றேன்.
சுதந்திரமான படைப்பிலக்கியங்கள் எங்கும் வாழட்டும்.!
அவைகள் எமது மக்களை வழி நடத்திச் செல்லட்டும்!!
பிரியமுடன்
தோழர் டக்ளஸ் தேவானந்தா
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஈ.பி.டி.பி