www.jananayakam.net.ms or www.jananayakan.tk, Email: jananayakam.gmail.com ....

Friday, June 3, 2011

புலோப்பளையில் தும்புப் பொருள் உற்பத்திப் பயிற்சி நிலையம் பா.உ. சந்திரகுமார் திறந்து வைத்தார்.

பச்சிலைப்பள்ளி புலோப்பளை கிராமத்தில் யுஎன்டிபி நிறுவனத்தின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்ட தும்புப் பொருள் உற்பத்திப் பயிற்சி நிலையம் புலோப்பளை மேற்கு கிராம அபிவிருத்திச் சங்கத்தினரால் 2011.06.02ம் திகதி காலை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது,

இந் நிகழ்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் முகுந்தன், மாவட்ட தொழிற் திணைக்கள உத்தியோகத்தர் ராகவன், பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஜெயக்குமார், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் சாந்தகுமார் மற்றும் கிராம உத்தியோகத்தர் தர்சினி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பிரதேசத்தின் அபிவிருத்தியையும் மக்களின் வாழ்வாதார மேம்பாட்டையும் நோக்காகக் கொண்டு அவர்களுக்கான ஆக்கபூர்வமான செயற்பாடுகளை முன்னெடுப்பதே எமது நோக்கம் என பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் தெரிவித்தார், அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில் மக்களுக்கு உள்ள பிரச்சினைகளைப் படிப்படியாகத் தீர்த்து வைத்து அவர்களின் வாழ்வில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதே எமது நோக்கு. மாறாக சுயநல அரசியல் இலாபங்களுக்காக மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகள் காண்பது பற்றி சிந்திக்காது, வெறும் விமர்சனங்களை மட்டும் முன்வைத்துக் கொண்டும் உணர்ச்சி வசப்பட்டு பேசிக் கொண்டு இருப்பவர்கள் போன்று அல்ல நாம்! எப்பொழுதும் நடைமுறைக்குச் சாத்தியமாக சிந்தித்து அதன்படி செயற்பாடுகளை முன்னெடுப்பவர்களே நாம்!

இப் பச்சிலைப்பள்ளி அபிவிருத்திக்காக பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம், குறிப்பாக பளை பிரதேசத்தில் நான்கு முக்கிய வீதிகள் தார் வீதிகளாக அபிவிருத்தி செய்வதற்கும், 50 கிலோமீட்டர் அளவு கொண்ட கொங்கிறீட் வீதிகள் அமைப்பதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அத்தோடு நவீன முறையில் பஸ் நிலையமும், சந்தையையும் அமைப்பதற்கு அங்கீகாரமளிக்கப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப கட்டப் பணிகள் இம் மாதத்திற்குள் ஆரம்பிக்கப்படும், மேலும் இயங்காமலுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களை இயங்க வைப்பதற்குரிய நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. அதன் முதற்கட்டமாக மாசார் இயக்கச்சி ஆரம்ப சுகாதார நிலையங்களுக்குரிய வேலைகள் இடம்பெற்றுள்ளன. அத்தோடு இப்பிரதேசத்தின் பாடசாலைகளின் அபிவிருத்தியில் விசேட கவனம் செலுத்தப்பட்டு வருகிறது, அண்மையில் கூட புலோப்பளை றோமன் கத்தோலிக்க தமிழ்க் கலவன் பாடசாலையின் அபிவிருத்திக்கு ஜம்பது இலட்சம் ரூபா நிதி பெற்றுக் கொடுக்கப்பட்டது எனவும் தெரிவித்தார்.

பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் முகுந்தன் உரையாற்றிய போது எமது பிரதேச செயலக பிரிவில் மேலதிக காணி இல்லாததன் காரணமாக இந்திய வீட்டுத் திட்டம் ஏற்படுத்த முடியாதென அரச செயலகத்தால் தீர்மானிக்கப்பட்டதனைக் கேள்வியுற்ற பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார், உடனடியாகத் தலையிட்டு காணிப் பிரச்சினையைத் தீர்த்து தருவதாகவும் வீடமைப்புத் திட்டத்தை ஒதுக்கீடு செய்யுமாறும் எம்மைப் பணித்ததற்கமைய இன்று காணிப் பிரச்சினையைத் தீர்ந்து எமது பிரதேசத்துக்கு ஆறு இலட்சம் ரூபாய் பெறுமதியான இந்திய வீடமைப்புத் திட்ட வீடுகளை அமைக்க வழி செய்துள்ளார், அதற்காக நாம் பா.உ. சந்திரகுமாருக்கு நன்றி சொல்ல வேண்டும் எனத் தெரிவித்தார்.



மேலதிக படங்களுக்கு அழுத்தவும்.