www.jananayakam.net.ms or www.jananayakan.tk, Email: jananayakam.gmail.com ....

Wednesday, June 8, 2011

இலங்கையின் அரசியல் புதிய பாதையில் பயணிக்க வேண்டும் - பாராளுமன்ற விவாதத்தில் பா.உ. சந்திரகுமார் உரை


2011.06.08 ஆம் திகதியான இன்று இலங்கை பாராளுமன்றத்தில் நடைபெற்ற அவசரகாலச் சட்ட நீடிப்புப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்ட ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான எம்.சந்திரகுமார் அவர்கள் ஆற்றிய உரை.
கௌரவ சபாநாயகர் அவர்களே!

இலங்கைத்தீவின் அரசியலானது புதியதொரு பாதையில் பயணிக்கவேண்டியதொரு காலப் பகுதியில் - இன்று இந்த அரங்கிலே, அவசரகாலச் சட்ட நீடிப்புத் தொடர்பாக என்னுடைய உரையை நிகழ்த்துகிறேன்.

நாட்டை அச்சுறுத்திய காரணிகளுக்காக - இருபது ஆண்டுகளுக்கு முன்னர் கொண்டு வரப்பட்ட அவசரகாலச் சட்டத்தை - நீக்க வேண்டும் என்று, இன்று நாங்கள் எல்லோரும் சிந்திக்க வேண்டிய ஒரு காலகட்டம் உருவாகியுள்ளது.

போர் முடிவுக்கு வந்திருப்பதே இப்படி நாம் சிந்திக்கக் கூடிய ஒரு நிலையைத் தந்துள்ளது.
இது மகிழ்ச்சிக்குரிய ஒரு விடயமாகும். இப்போது போர் முடிவடைந்ததால், அமைதிச் சூழல் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. முன்னரை விடவும் சுதந்திரமாகச் சிந்திக்கக் கூடிய – சுதந்திரமாகச் செயற்படக்கூடிய ஒரு நிலை இன்று உருவாகியுள்ளது. தமிழரசுக் கட்சியினர் கூட யாருக்கும் பயமின்றி இப்பொழுது சுதந்திரமாகக் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
ஆனால், 2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் அவர்களால் அப்படிச் சிந்திக்கவோ செயற்படவோ முடிந்ததா?

ஆகவே – இந்த அமைதிச் சூழலை - இந்த ஜனநாயகச் சூழலை மேலும் வளர்த்தெடுத்து, அதை நிரந்தரமாக்குவதே இன்று எங்கள் முன்னேயுள்ள முக்கிய பணியாகும். இதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும். இதுவரையில் நடைபெற்ற போரில், எண்ணற்ற உயிர்கள் பலியாகியிருக்கின்றன. இந்த உயிர்களைக் கொடுத்தே நாம் இன்று அமைதியைப் பெற்றிருக்கிறோம். மாபெரும் உயிர்த்தியாகங்களின் மூலமே இந்த அமைதி எமக்குக் கிடைத்திருக்கிறது. அதாவது, மிகவும் துயரம் நிறைந்த ஒரு காலத்தை நாங்கள் அனைவரும் கடந்து வந்திருக்கிறோம். இதை எவரும் மறந்து விடக்கூடாது.
அதேவேளை, எந்தக் காரணம் கொண்டும் இனிமேல் அப்படியானதொரு இருண்டகாலத்துக்கு நாம் பயணிக்கவும் முடியாது.

அப்படியான ஒரு காலத்தை உருவாக்கும் வகையில் எவரும் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டால், அதை இந்த நாடு அனுமதித்தால், மக்கள் அத்தகைய அரசியல் போக்கை ஆதரித்தால், அதற்குரிய தண்டனையையும் நாங்களே பெறவேண்டும்.
எங்களைப் பொறுத்தவரை இந்த நாட்டின் அரசியலானது இனி முற்றிலும் புதிய பாதையில் பயணிக்க வேண்டும் என்றே விரும்புகிறோம். அந்தப் பாதையானது, மக்களுக்கு விமோசனத்தைத் தரக்கூடியதாக இருக்க வேண்டும். நாட்டின் அமைதியை நிரந்தரமாக்க வேண்டும். நிரந்தரமான ஐக்கியத்தையும் சமாதானத்தையும் தரவேண்டும்.

இதுவே எங்களுடைய விருப்பமாகும். இந்த விருப்பத்தையே மக்களும் கொண்டிருக்கிறார்கள். மக்களுடைய விருப்பங்களையே நாங்கள் அரசியற் தெரிவாகக் கொண்டிருக்கிறோம். இத்தகைய அடிப்படையைக் கொண்ட அரசியலையே இந்த நாட்டின் ஏனைய அரசியலாளர்களும் முன்னெடுக்க வேண்டும் என்று கேட்கின்றேன். தயவு செய்து மக்களுக்கு அப்பாலான அரசியலை யாரும் முன்னெடுக்காதீர்கள்.

கௌரவ சபாநாயகர் அவர்களே!

வெள்வேறு அரசியல் கொள்கையுடையவர்களை இந்த மன்று கொண்டிருந்தாலும், இந்த மன்றானது மக்களுக்காக – மக்களுடைய நலன்களுக்காக – மக்களுடைய எதிர்காலத்துக்காகவே இயங்குகின்றது. அத்துடன் அது – நாட்டின் பாதுகாப்புக்கும் சுபீட்சத்துக்குமாகவே இயங்குகின்றது என்பதையும் நாம் உணர்ந்து கொள்ளவேண்டும்.

ஆகவே, நாம் இந்த மன்றின் நோக்கத்தைப் புரிந்து கொண்டு, எங்கள் கசப்பான கடந்த காலத்தை உணர்ந்துகொண்டு, எதிர்காலத்துக்காகச் சிந்திப்போம் எனக் கேட்டுக் கொள்கிறேன். அப்போதுதான் அவசரகாலச் சட்டத்தை நீக்குவதைப் பற்றிய சரியான தீர்மானத்துக்கும் நாம் வரமுடியும். அதுமட்டுமல்ல – அரசியற் தீர்வை எட்டுவதற்கும் நிரந்தர அமைதியை அடைவதற்கும் அப்பொழுதுதான் சாத்தியப்படும். எனவே, இதைக்குறித்து நாம் அனைவரும் தீர்க்கமாகச் சிந்திக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டு, இன்னும் சில விடயங்களை இந்த மன்றிலே கவனப்படுத்த விரும்புகிறேன்.

கௌரவ சபாநாயகர் அவர்களே!

கடந்த சில நாட்களுக்கு முன்னர் மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்கள் வடக்கிலே - கிளிநொச்சிப் பகுதிக்கு வந்திருந்தபோது வடக்கின் பொறியியற் பீடமும் விவசாய பீடமும் கிளிநொச்சியிலே அமையும் என்று அறிவித்திருந்தார். இந்தச் செய்தி வன்னிப் பிரதேச மக்களிடத்திலே அளவற்ற மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.

நீண்டகாலமாக வடபகுதி மக்கள் மனதில் இருந்த பொறியியற் பீடம் பற்றிய ஏக்கங்களுக்கு இன்று ஒரு வடிவம் பிறந்திருக்கிறது. எமது அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பொறியியல் பீடத்தையும் விவசாய பீடத்தையும் கிளிநொச்சியிலேயே அமைக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டமைக்கு இணங்க இந்தத் தீர்மானத்தை ஜனாதிபதி அவர்கள் அறிவித்துள்ளார். இதை நாம் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம்.

நாட்டின் அபிவிருத்தியும், முன்னேற்றமும், வளப்பகிர்வும் சமனிலைப்படுத்தப்படும் என்ற சேதியை உறுதிப்படுத்துகிறது இந்தத் தீர்மானம். இன்று வடபகுதியிலே பல முன்னேற்றகரமான விடயங்கள் ஏற்பட்டுள்ளன. வடக்கிலே எண்பது வீதமான பகுதிகளில் மீள்குடியேற்றம் நடைபெற்றுள்ளது. பலரும் நம்பவே மறுத்த வலி வடக்குப் பகுதியில், மக்கள் மீளக் குடியேறியிருப்பது முக்கியமானது. ஆனால், மிஞ்சிய இருபது வீதமான பகுதிகளைச் சேர்ந்த மக்கள் எப்பொழுது தங்கள் ஊர்களுக்குச் செல்லப் போகிறோம் என்ற ஏக்கத்தோடு இருக்கிறார்கள். குறிப்பாக, முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்புப் பிரதேச செயலர் பிரிவு மக்களின் மீள்குடியேற்றத்தை இங்கே நான் வலியுறுத்துகிறேன்.
ஆகவே, அவர்களுடைய எதிர்பார்ப்பை நாம் நிறைவேற்ற வேண்டிய பாரிய பொறுப்பில் இருக்கிறோம். இதைத் தாமதமின்றி, மிக விரைவிற் செயற்படுத்த வேண்டும்.

எதிர்காலத்தில் உயர்பாதுகாப்பு வலயங்கள் என விசேடமாக எந்தப் பகுதியும் இருக்கமாட்டாது என்று அரசாங்கம் கொள்கை அளவில் அறிவித்திருப்பதை நாமனைவரும் வரவேற்க வேண்டும். ஏனைய பிரதேசங்களிலும் நாம் மீள் குடியேற்றத்தைப் பூரணப்படுத்தும்பொழுது உயர்பாதுகாப்பு வலயங்களும் இல்லாது போய்விடும். மீள் குடியேற்றம் பற்றிய பிரச்சினையும் தீர்ந்து விடும். அடுத்ததாக அண்மையிலே கிளிநொச்சி மாவட்டத்தின் கல்லாறுப் பகுதியில் மீண்டும் மீனவர்கள் தமது தொழிலை ஆரம்பித்துள்ளனர். இதற்கான சூழலை நாம் உருவாக்கும்போது அதற்கு ஒத்துழைப்பு வழங்கிய கண்ணிவெடி அகற்றும் பணியாளர்கள் மற்றும் பாதுகாப்புத் தரப்பினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது நன்றியை அந்த மக்களின் சார்பாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதைப்போல இரணமடுக்குளத்தின் நன்னீர் மீன்பிடிக்கான சூழலையும் உருவாக்க முயற்சிக்கிறோம். அந்த மீனவர்களும் தமது தொழிலை விரைவில் ஆரம்பிக்க வேண்டும்.
இப்போது வடபகுதியின் பல பகுதிகளிலும் பல வகையான அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குளங்கள் புனரமைக்கப்படுகின்றன. வீதிகள் செம்மைப்படுத்தப்படுகின்றன. மக்களில் பெரும்பாலானவர்கள் மீண்டும் தங்களுடைய சுயதொழில்களை ஆரம்பித்துள்ளனர்.

இப்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ள சிறுபோகச் செய்கையில் கிளிநொச்சி மாவட்டத்தில் மட்டும் 12,600 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ளது. மீன்பிடியும் 90 வீதம் நடைபெறுகிறது.
மின்சார வினியோகம் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. பாலங்கள் அனைத்தும் புதிதாக
நிர்மாணிக்கப்படுகின்றன. திணைக்களக் கட்டிடங்கள் மீளுருவாக்கம் செய்யப்படுகின்றன.
பாடசாலைகளும் மருத்துவமனைகளும் திறம்பட நிர்மாணிக்கப்படுகின்றன.
பொதுவாகவே உட்கட்டமைப்புகளைச் சீர்ப்படுத்தும் நடவடிக்கைகள் துரிதகதியில் நடைபெறுகின்றன.

உட்கட்டமைப்புகள் சீர்ப்படுத்தப்படும்போது மக்களுக்கான நிர்வாக இயந்திரம் தடையின்றி இயங்கத் தொடங்கிவிடும். பின்னர் இந்த இயந்திரத்தை இயக்குவதற்கான பொறிமுறையும் அதற்கான ஆளணியைப் பற்றியுமே நாம் சிந்திக்க வேண்டும்.
உட்கட்டமைப்புகளை மீளுருவாக்கம் செய்வதன் மூலம் மக்களின் இயங்குதளம் நிர்மாணிக்கப்பட்டு விடும். பின்னர் மக்களுக்கான உதவிகளை வழங்குவதும் அவர்களை நிர்வகிப்பதுமே எஞ்சிய பணிகளாக இருக்கும். அரசாங்கம் இந்த நோக்கிலேயே பயணிக்கிறது.

இந்தச் சந்தர்ப்பத்தில் நாம் புனர்வாழ்வு நிலையங்களில் இருக்கும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்களின் விடுதலையைத் துரிதப்படுத்த முயற்சிக்கிறோம்.
ஏற்கனவே விடுதலையாகிய முன்னாள் விடுதலைப்புலிகள் உறுப்பினர்களுக்கான தொழில்
முயற்சிகளுக்கு அரசாங்கம் இப்பொழுது உதவத் தொடங்கியுள்ளது.
இந்தச் சந்தர்ப்பத்தில் இவர்களுக்கான உதவிகளை ஏனைய தமிழர் அமைப்புகளும் புலம்பெயர் மக்களும் வழங்க முன் வரவேண்டும்.

இன்னும் சாட்டுப் போக்குகளைச் சொல்லி இவர்களுக்கு உதவாமல் எவரும் இருக்கக் கூடாது. ஆனால், சில தமிழ் ஊடகங்களும் சில புலம் பெயர் தமிழர் அமைப்புகளும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளைச் செய்வதற்குத் தடையாக இருக்கின்றன.
இவை எப்போதும் மக்களுக்குப் பொய்யான செய்திகளையே வழங்கிவருகின்றன என்பதை நாம் கவனிக்க வேண்டும். இந்த மக்கள் அமைதியாக வாழ்வதையோ, இந்த நாட்டிலே அமைதி நீடிப்பதையோ, மக்களுடைய வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படுவதையோ இந்தத் தரப்பினர்கள் விரும்பவில்லை.

இந்த ஊடகங்கள் தமிழ் மக்களின் வாழ்க்கைக்கும் அவர்களுடைய அரசியல் எதிர்காலத்துக்கும் எப்பொழுதும் தடையாக இருக்கின்றன என்பதை மிகவும் வன்மையாக இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன். மிகத் தவறான வழிகளில் மக்களை வழி நடத்தும் இந்த ஊடகங்களையிட்டு மக்கள் மிக அவதானமாக இருக்க வேண்டும்.

ஏனென்றால், இன்னொரு இருண்ட யுகத்துக்குள் மக்களைத் தள்ளிவிடவே இந்தத் தரப்பினர்
விரும்புகின்றனர். பிரச்சினைகளை மேலும் அதிகரிப்பதே இவர்களுடைய அரசியல் - ஊடக வியாபாரத்துக்கான அடித்தளம் என்பதால் இப்படி இவர்கள் செயற்படுகிறார்கள்.
எனவே இந்தப் பொய்யான தரப்பினரின் பொறிக்குள் சிக்கி உங்கள் சொந்த உறவுகளுக்கு உதவும் மிகப் பெரிய பொறுப்பிலிருந்து நீங்கள் தப்பி விடாதீர்கள், அத்தகைய தவறுகளுக்கு
இடமளிக்காதீர்கள் என்று புலம்பெயர் மக்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.

இப்போது அரசாங்கமே அதிகளவான உதவிகளைச் செய்து வருகிறது. ஆகவே முன்னாள் விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் தொடர்பில் அரசாங்கமே அதிக கவனம் எடுக்கிறது என்ற கருத்தை புலம் பெயர் தமிழர்கள் நிச்சயமாக ஏற்றுக் கொள்ள வேண்டியிருக்கும்.
இந்த உண்மையை நாளைக்கு இந்த உதவிகளைப் பெறும் முன்னாள் விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களே சொல்லுவார்கள்.

இயல்பு வாழ்வில் அனைவரையும் இணைப்பதன் மூலமே நிலையான சமாதானத்தையும் நீடித்த அமைதியையும் எட்டமுடியும். இதற்கு அடுத்த கட்டமாக அரசியற் தீர்வு காணப்படவேண்டும். இதை நோக்கிய செயற்பாட்டிலேயே நாம் எமது அரசியற் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறோம்.

முதலில் நல்லவற்றுக்கும் முன்னேற்றத்துக்கு வழியேற்படுத்தும் நடவடிக்கைகளுக்கும் ஆதரவளித்துப் பழக வேண்டும். அடுத்த கட்டமாகவே பிரச்சினைகளைப் பற்றியும் தடைகளாக இருப்பவற்றைப் பற்றியும் நாம் சிந்திக்க வேண்டும். நாங்கள் மக்களின் துயரங்களைத் தீர்ப்பதற்கான முதற் செயற்பாட்டை முன்னெடுத்து வருகிறோம். எமது செயற்பாட்டை மக்கள் தெளிவாகவே புரிந்து வருகிறார்கள்.

அடுத்த கட்டமாக நடைமுறைக்குச் சாத்தியமான ஒரு தீர்வை நோக்கி மக்களையும் அரசாங்கத்தையும் தயார்ப்படுத்தி வருகிறோம். இதுதான் இன்றைய அரசியற் செயற்பாடாக இருக்க முடியும் என நாம் ஆழமாகவே நம்புகிறோம்.
இந்த நாட்டிலே அமைதியையும் சமாதானத்தையும் அபிவிருத்தியையும் ஏற்படுத்துவதில் நாங்கள் முன்னிலைப் பங்களிப்பாளர்களாக விளங்க வேண்டும் என்பதே எங்களுடைய பெவிருப்பமாகும். இதை இந்த மன்றிலே வெளிப்படுத்துவதில் பெருமிதமடைகிறேன்.
இதை இந்த மன்றிலே உள்ளவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இயல்பு நிலையின் வளர்ச்சி என்பது தடையற்ற தொழில் முயற்சிகளுக்கு இடமளிப்பதாக இருக்க வேண்டும். அத்துடன் சுதந்திரமான செயற்பாடுகளுக்கும் சொந்த இடத்தில் வாழ்வதற்கும் இடமளிப்பதாக அமையவேண்டும். ஏறக்குறைய இத்தகைய நிலையை நோக்கிய வளர்ச்சி இலங்கை முழுவதிலும் ஏற்பட்டு வருகிறது. ஆனாலும் வடக்குக் கிழக்கில் இன்னும் பல போதாக்குறை நிலைகள் காணப்படுகின்றன என்பதையும் இந்த மன்றிலே கவனப்படுத்துவது எனது கடமையாகும்.

மீள்குடியேற்றத்தின் பின்னர் மக்களின் வாழ்க்கையில் பல பிரச்சினைகள் இருக்கின்றன.
மக்களுக்கான இழப்பீடுகள் வழங்கப்பட வேண்டியுள்ளது. வீடமைப்புத்திட்டம் முழுமைப்படுத்தப்பட வேண்டியிருக்கிறது. இவை இரண்டும் போர் நடைபெற்ற பிரதேசங்களில் இன்று மிகமிக முக்கிய பணிகளாக உள்ளன. போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கும் அந்த மக்களுக்கும் உதவ விசேட செயற்றிட்டம் அவசியம் என்பது உலகப் பொது வழமையாகும்.

அப்படியான ஒரு விசேட திட்டத்தின் மூலமே பாதிக்கப்பட்ட மக்களை மீள் நிலைப்படுத்திச்
சமனிலைக்குக் கொண்டு வர முடியும். இதேவேளை போர் நடந்த வடக்குக் கிழக்கு மாகாணங்களில் ஒரு தொகுதி மக்கள் எல்லா வழிகளிலும் பாதிக்கப்பட்டு நிர்க்கதி நிலையில் வாழ்கின்றனர். இவர்களுக்கும் விசேட திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டு இவர்களுடைய வாழ்க்கை மேம்படுத்தப்படுவது அவசியமாகும்.

ஆனால், பற்றாக்குறைகள் இருந்தாலும் மக்கள் மிக வேகமாக தமது வாழ்க்கைத்தரத்தை உயர்த்தி வருகிறார்கள். இதற்கு மீள் குடியேறிய மக்களின் பகுதிகளில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் ஆதாரமானவை. இதைச் சமனிலையான பார்வையோடு அணுகவேண்டும். ஆனால், இந்த மாற்றங்களையும் முன்னேற்றங்களையும் பலர் மறைக்க முற்படுகின்றனர். மீள் குடியேற்றம் நடைபெறத் தொடங்கிய காலத்திலிருந்தே அந்த மக்களுடன் ஒருவனாக வாழ்கின்றவன் என்பதால் அந்த மக்களின் சிரமங்களை நான் நன்றாக அறிவேன்.
அவர்களுடைய உழைப்பையும் நம்பிக்கையையும் நான் மதிக்கிறேன். அதை நாம் அனைவரும் பாராட்ட வேண்டும்.

அத்துடன் அந்த மக்கள் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்தே தங்களுடைய வாழ்க்கையை மேற்கொண்டு வருகிறார்கள். தங்கள் வீடுகளில் இருந்தே அவர்கள் அபிவிருத்தியை ஆரம்பிக்கிறார்கள். இந்தச் சந்தர்ப்பத்தில் அரசாங்கம் இன்னும் போதிய உதவிகளைச் செய்ய வேண்டும். அதன்மூலம் இந்த மக்களுக்கு மேலும் உற்சாகத்தை வழங்க முடியும்.

கௌரவ சபாநாயகர் அவர்களே!

அபிவிருத்திக்காகவும் அமைதிக்காகவும் அரசியற் தீர்வுக்காகவும் நாம் எல்லோரும் ஒன்றுபட்டு உழைக்கும்போது, நிச்சயமாக நாட்டை அச்சுறுத்தும் காரணிகளும் இல்லாமற்போய்விடும். அப்போது அவசரகாலச்சட்டத்துக்கோ இந்தச் சட்டத்தை நீடிப்பதற்கோ இடமேயிருக்காது. அதை விடுத்து வெறும் வாய்ப்பேச்சுப் பேசுவதால் எந்தப்பயனும் கிட்டப்போவதில்லை.

மக்களைத் தவறாக வழிநடத்துவதால் மீண்டும் இந்த நாட்டிலே அமைதியின்மையைத்தான் உருவாக்க முடியும். பாராளுமன்ற உறுப்பினர்களாகுவதற்காக சிலர் அரசியல் செய்கிறார்கள். மக்களுடைய நலன்களுக்காகவும் அவர்களுடைய உறுதியான எதிர்காலத்துக்காகவுமே இவர்கள் அரசியற் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்பதை இங்கே வலியுறுத்திக் கேட்டுக் கொண்டு என்னுடைய உரையை நிறைவு செய்கிறேன்.
நன்றி.