இந்த ஆன்மீக இலக்கிய முயற்சியை நான் வாழ்த்துகின்றேன். இந்த முயற்சியை முன்னெடுத்துள்ள இந்த விழாவின் ஏற்பாட்டாளர்களுக்கு நான் முதல் மரியாதை செலுத்துகின்றேன்.
ஓர் அரசியல் கட்சியையும் எமது மக்களையும் சரியான இலக்கு நோக்கி வழி நடாத்திச் செல்ல வேண்டிய பாரிய வரலாற்றுக் கடமை என்மீது இன்று சுமத்தப்பட்டிருக்கின்றது.
அதையும் சுமந்து கொண்டு பன்முகச்சிந்தனைகளின் வெளிப்பாடாக
நீங்கள் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்ற இது போன்ற விழாக்களையும் நான் உற்சாகம் கொடுத்து ஊக்குவிக்க விரும்புகின்றேன்.
எமது அரசியல் இலக்கு நோக்கிய பயணத்தில் இது போன்ற கலை இலக்கிய வரலாறுகளின் தேடல் முயற்சிகளையும் முன்னெடுத்துச் செல்லவே நாம் விரும்புகின்றோம். ஆனாலும் கடந்த சில தசாப்தங்களாக அரசியல் விவாதங்களுக்குள்ளும் அதற்கான தேடல்களுக்குள்ளும் எமது
இலக்கிய முயற்சிகள் யாவும் முடங்கிப்போயிருக்கின்றன.
அரசியல் வழிமுறைகளுக்குள் மட்டும் நாம் முடங்கியிருக்காமல் கலை இலக்கிய ஆன்மீக மற்றும் தமிழ்மொழியின் வளர்ச்சி குறித்த முயற்சிகளின் பாதையிலும் நாம் பயணிக்க வேண்டியது எமது தேசத்தின் கட்டாய கடமையாகும்.
எமது மண்ணிலே ஒரு யுத்தம் நடந்து கொண்டிருந்த சூழலுக்குள்ளும் நீங்கள் இது போன்ற இலக்கிய முயற்சிகளில் இயன்றவரையில் ஈடுபட்டு வந்திருக்கின்றீர்கள். தமிழ் மொழியின் மீதும் இந்து கலாசாரத்தின் மீதும் நீங்கள் கொண்டிருக்கும் தீராத நேசிப்பை நீங்கள் வெளிப்படுத்தியிருக்கின்றீர்கள். இதை நான் மனந்திறந்து பாராட்டுகின்றேன்.
ஆண்டு தோறும் எடுத்து வருகின்ற இவ்வாறான ஆய்வரங்குகளின் ஊடான கலை இலக்கிய மற்றும் தமிழ்மொழி வளர்ச்சியின் முயற்சி குறித்து நான் மகிழ்ச்சி அடைகின்றேன். அகம் மகிழ்ந்து இந்த முயற்சியை பாராட்டுகின்றேன்.
கலை இலக்கியம் சமூக முன்னேற்றம் தமிழ்மொழி வளர்ச்சி என்று பல்துறைகளும் சார்ந்த பன்முகச்சிந்தனைகள் எமது தேசமெங்கும் செழித்து வளர வேண்டும்.
இலக்கியம் என்பது காலத்தின் கண்ணாடி! அந்தந்த காலப்பகுதிகளில் வாழ்ந்த
மக்கள் சமூகத்தின் மன உணர்வுகளையும் மனப்பண்புகளையும் மனத்துயரங்களையும் அடக்கு முறைகளையும் அதிலிருந்து மீட்சி பெறும் முயற்சிகளையும் அடுத்த தலைமுறைகளுக்கும் காவிச்சென்று எடுத்துக்காட்டும் காலக்கண்ணாடிதான் இலக்கியம்.
தொல்காப்பியத்தில் இருந்து இன்று வரை தொடர்ந்து வந்திருக்கும் வரலாற்றுப் பதிவுகள் வரையில் எமது இன சமூகத்தின் பாரம்பரியங்களை நாம் கண்டிருக்கின்றோம்.
மாறிவரும் காலச்சூழல்கள் ஒவ்வொன்றின்போதும் கலாசார மறு மலர்ச்சிகளை நாம் சந்தித்திருக்கின்றோம். தமிழ் இலக்கியங்களும் எமது கலாசார பண்பாடுகளும் காலத்திற்குக் காலம் பல்வேறு புதிய வடிவங்களை கண்டிருக்கின்றன. மாற்றங்களை உருவாக்கியிருக்கின்றன.
மாறுதல் ஒன்றைத் தவிர மனித சமூக வரலாற்றில் மாறாதிருப்பது எதுவுமே இல்லை என்பதையே இந்த மாற்றங்கள் எமக்குப் போதித்து நிற்கின்றன.
கடந்து வந்த மனித சமூக வரலாற்றின் மாற்றங்களில் விஜய நகரப் பேரரசு காலத்தில் எழுந்து வந்த சமூக மாற்றம் என்பது தமிழ் இலக்கியத்திலும் கலை வடிவங்களிலும் புதியதோர் அத்தியாயத்தை உருவாக்கியிருக்கின்றது.
பக்தி இலக்கியங்கள் என்று நாம் கூறும் ஆன்மீக இலக்கியங்கள் முதற்கொண்டு எமது இன சமூகத்தின் கலை வடிவங்களான இசைக்கலை நடனக்கலை ஓவியக்கலை சிற்பக்கலை கட்டிடக்கலை என்று பல்வேறு கலை வடிவங்களும் புத்தெழுச்சியோடு எமது முன்னோர்களின் மனங்களில் புகுந்து கொண்ட காலம் அது.
எமது முன்னோர்களின் மனங்களில் புகுந்து கொண்ட அந்த கலாசார விழுமியங்களை இன்றைய சமகால சந்ததிக்கும் நீங்கள் எடுத்து வருகின்ற இந்த முயற்சிகள் ஓர் இன சமூகத்தின் வரலாற்றுக் கடமை என்றே நான் கருதுகின்றேன்.
ஓர் இன சமூகத்தின் அடையாளங்களில் பிரதானமாக இருப்பது அந்த இன சமூகத்தின் மொழி என்றே நான் கருதுகின்றேன். தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு எமது பாரம்பரிய பக்தி இலக்கியங்களான இந்து சமய இலக்கியங்களும் பற்றுறுதியோடு நின்று பிரதான பங்காற்றியிருக்கின்றன.
தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக பக்தி இலக்கியங்கள் ஆற்றியிருக்கும் அர்ப்பணங்களைப் போல் இன்றைய சமகால இலக்கியப் படைப்பாளிகளும் தொடர்ந்தும் அர்ப்பண உணர்வுகளோடு உழைக்க வேண்டும் என்று நான் விரும்புகின்றேன்.
பழந்தமிழ் இலக்கியங்களையும் பக்தி இலக்கியங்களையும் சிற்றிலக்கியங்களையும்
ஆய்வு செய்வதோடு மட்டும் நின்று விடாமல் இன்றைய எமது மக்களின் வாழ்க்கையை சித்திரிக்கும் நவீன இலக்கியங்களையும் ஊக்குவித்து உற்சாகப்படுத்துவதற்கு இலக்கிய முன்னோடிகளும் ஆர்வலர்களும் முன்வர வேண்டும் என்று நான் வேண்டுகோள் விடுக்கின்றேன்.
கடந்த கால போரியல் வரலாறுகளை மட்டும் ஒரு சாரார் இலக்கியங்களாகப் படைத்திருக்கின்றார்கள். அது தவறானது அல்ல. ஆனாலும் அது உண்மையின் சாட்சியங்களாக வெளி வரவேண்டும்.
போரியல் வரலாற்று இலக்கியங்கள் வீரத்தின் விளை நிலங்களை மட்டும் பேசுவதோடு நின்று விடாமல் விவேகத்தின் விதை நிலங்கள் குறித்தும் பேசியே ஆக வேண்டும். விவேகங்கள் எங்கு விதைக்கப்பட்டன எங்கு விதைக்கப்படவில்லை என்பன குறித்த தேடல்களில் இலக்கியங்கள் இறங்க வேண்டும். விதைக்கப்பட்டவைகள் எவையோ அவைதான் அறுவடைக்கு வரும் என்ற உண்மைகளையும் பேசியாக வேண்டும்.
எங்கெல்லாம் தவறுகள் நடந்தனவோ அங்கெல்லாம் இலக்கியப்படைப்பாளிகளின் பார்வைகள் யதார்த்தமாக விரிந்திருக்க வேண்டும். போரியல் வரலாற்றுக்குள் அகப்பட்டு நொந்து நொடிந்து வெந்து துடித்த எமது இன சமூகத்தின் அவஸ்தைகளும் இலக்கியங்களாக்கப்பட வேண்டும்.
குதிரை மீது மட்டும் ஏறி அமர்ந்து மலர்களைப் பார்க்காமல் கீழே இறங்கி நின்றும் மலர்களைப் பார்க்க வேண்டும். அது போல் பரந்த பார்வையோடும் விரிந்த சிந்தனையோடும் எமது மக்களின் மனங்களில் ஆழமாக இறங்கி அவர்களின் உணர்வுகளையும் படைப்பாளிகள் இலக்கியங்களாக படைக்க முன்வரவேண்டும்.
இலக்கியப் படைப்பாளிகள் சுதந்திரமாக எழுதவும் பேசவும் சிந்திக்கவும் சுதந்திரமாக எங்கும் நடமாடவும் முடிந்த ஒரு ஜனநாயக சூழலின் வரவுக்காக நாம் இறுதி வரை உறுதியுடன் உழைத்திருக்கின்றோம். இன்னமும் தடைகள் இருக்குமாயின் அதற்காக நாம் தொடர்ந்தும் உழைப்போம்.
கடந்த காலங்களில் கலை இலக்கியப் படைப்பாளிகளும் சுதந்திரமாக சிந்திக்க விரும்பிய எழுத்தாளர்களும் கலை இலக்கிய விமர்சகர்களும் தாம் விரும்பியதை எழுத முடியாமல் அச்சத்தில் உறைந்து போய் ஓய்வெடுத்துக்கொண்ட துயரங்களை நாம் கண்டிருக்கின்றோம். அவர்களில் பலரும் எமது தாயக மண்ணை விட்டு புலம்பெயர்ந்து போக வேண்டிய நிர்ப்பந்தங்கள் இங்கே நிகழ்ந்திருக்கின்றன.
தண்ணீர் ஊற்றி வளர்க்கவில்லை கண்ணீர் ஊற்றியும் வளர்க்கவில்லை தங்களது உயிர்களைத் தியாகம் செய்து செந்நீர் ஊற்றியே வளர்த்த இலக்கியப் படைப்பாளிகளை இந்த இடத்தில் நான் ஞாபகப்படுத்த விரும்புகின்றேன். அவர்களது உயிர்த்தியாகங்களுக்கு நாம் மரியாதை செலுத்துகின்றோம்.
தமிழின் பெயராலும் ஒரு சாராரின் ஏகபோக தமிழ் தேசியத்தின் பெயராலும் தமிழ் இலக்கியப் படைப்பாளிகள் சந்தித்து வந்திருந்த தடைகள் யாவும் இன்று முற்றாக ஒழிக்கப்பட்டிருக்கின்றன.
இந்தச் சூழலை உருவாக்குவதற்காக எமது சமூகத்தின் சார்பிலும் அதிகளவிலான தியாகங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதை நாம் மறந்துவிடக்கூடாது. மிக அதிக விலை கொடுத்து நாம் பெற்றுக் கொண்டுள்ள இந்தச் சூழலை நாம் எவருக்கும் தாரைவார்த்து விடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். இந்த நிலையில் இனி தடையின்றி இலக்கியங்களை சுதந்திரமாகப் படைப்போம் வாருங்கள் என்று எமது கலை இலக்கிய படைப்பாளிகளுக்கு நான் அறைகூவல் விடுக்கின்றேன்.
கடல் எம்மைப் பிரித்தாலும் உடல் வேறு ஆனாலும் எங்கள் உயிர் மூச்சும் உச்சரிக்கும் மொழியும் ஒன்றெண்டு கண்டு தமிழகத்தில் இருந்து தமிழிலக்கியப் பேராசிரியர்கள் இங்கே வந்திருக்கின்றார்கள்.
கலையும் இலக்கியமும் பேசும் மொழியும் எங்களை ஒன்றிணைத்து நிற்பதை இன்று நிகழ்ந்து கொண்டிருக்கும் இந்து சமய தமிழிலக்கிய ஆய்வரங்கின் ஊடாகவும் நாம் காண்கின்றோம்.
இந்து சமய தமிழிலக்கிய ஆய்வரங்கில் மட்டுமன்றி எமது தேசத்தில் அமைதியை உருவாக்கும் அரசியல் முயற்சியிலும் இலங்கையும் இந்தியாவும் ஒன்றிணைந்து நிற்பதையே நாம் காண முடிகின்றது.
எமது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் நாம் பெற்றதை ஆரம்பமாக ஏற்று எமது மண்ணிலே ஒரு நிரந்தர சமாதானத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றார். இந்த முயற்சிகள் முழுமையாக வெல்லப்படும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்றே நான் நம்புகின்றேன்.
நடைமுறைச்சாத்தியமான வழிமுறையில் இலங்கை இந்திய ஒப்பந்தத்தை ஆரம்பமாக ஏற்று எமது தேசத்தில் நிரந்தர அமைதியும் அரசியல் சமவுரிமையும் உருவாகும் பட்சத்தில் இந்து சமய தமிழிலக்கிய வரலாறுகளின் தேடல்களுக்கும் இங்கு மட்டற்ற சுதந்திரம் கிடைக்கும் என்று நான் நம்புகின்றேன்.
அமையப்போகின்ற எமது அமைதிப்பூங்காவில் கலை இலக்கியங்கள் சுதந்திரமாக படைக்கப்படும். இந்து சமய தமிழிலக்கியங்;களுக்கான தேடல்கள் தங்கு தடையின்றி
தனது முயற்சிகளை முன்னெடுத்து செல்லும். அதற்கானதோர் ஆரோக்கியமான சூழலை நாம் உருவாக்குவதற்கு தொடர்ந்தும் உழைப்போம்!
இனங்களுக்கிடையிலான ஐக்கியம்
மதங்களுக்கிடையிலான உடன்பாடுகள்
வளர்ந்து செழிக்க உழைப்போம்.!
பிற மதங்களோடும், சக இனங்களோடும் பகைமை பாராமல்
இந்து தமிழிலக்கிய தேடல் முயற்சிகள் தொடரட்டும்!....