Follow @jananayakan
2011 மே மாதம் 23 ஆம் திகதி (இன்று) வலிகாமம் தெற்கு பிரதேச சபையினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உள்ளூராட்சி வார விழா நிகழ்வு இராமநாதன் கல்லூரி மண்டபத்தில் பிரதேச சபை செயலாளர் சுலோசனா தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் பிரதம விருந்தினராகவும், வடமாகாண உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர் விஜயலட்சுமி ரமேஸ், வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் திரு ஜோன்சன், யாழ் பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் மதுமதி வசந்தகுமார், பிரதேச சபை உத்தியோகத்தர்கள் ஏனைய பிரதேச சபைகளின் செயலாளர்கள் பொதுமக்கள் எனப் பெருமளவிலானோர் கலந்து கொண்டனர்.
பிரதேச சபைகள் தான் உள்ளூர் மட்டங்களில் அதிகளவான சேவைகளை மேற்கொண்டு வருகின்றன, கடந்த கால யுத்த சூழலினால் பிரதேச சபைகளின் முழுமையான நன்மைகளை மக்களைச் சென்றடைய முடியாது போய் விட்டன. ஆனால் இனிவரும் காலங்களில் அவ்வாறு அல்லாமல் பிரதேச சபைகள் நிறைவான சேவையினை வழங்கும், அதற்கு அரசு விசேடமாக வடபகுதி பிரதேச உள்ளூராட்சி மன்றங்களுக்கு அதிகளவான நிதியினை ஒதுக்கீடு செய்திருக்கிறது எனப் பாராளுமன்ற உறுப்பினர் எம். சந்திரகுமார் தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் மக்கள் பிரதேச சபைகளுக்கு வரி செலுத்துவதை தவிர்க்கக் கூடாது என்றும் உரிய வரிகளை பிரதேச சபைக்கு முறையாக செலுத்துவதன் மூலம் தங்களின் பிரதேசத்தின் விரைவான அபிவிருத்திக்கு பங்களிப்புச் செய்ததாக இருக்கும் என்றும் குறிப்பிட்டார்.
மேலும் வரி தொடர்பாக மக்களுக்கு இன்னும் தெளிவின்மை காணப்படுவதாகவும் அது தொடர்பில் தெளிவுபடுத்த வேண்டியது பிரதேச சபைகளின் பொறுப்பு என்றும் சுட்டிக்காட்டினார்.
அத்தோடு பிரதேச சபைகள் நெல்சிப் திட்டத்தின் கீழ் வேலைகளை செய்வதற்கான அனுமதி கிடைத்துள்ளமையால் பெரும்பாலும் பிரதேச சபைக்குட்பட்ட பெரும்பாலான வீதிகள் புனரமைக்கப்பட்டுள்ளது. எனவே இத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் வீதி உள்ளிட்ட அபிவிருத்தி பணிகளின் போது மக்கள் விழிப்பாக இருந்து வேலைத்திட்டங்களை கண்காணித்து அதில் பங்காளிகாக மாற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
அத்துடன் 75 மில்லியன் ரூபா செலவில் கட்டப்பட்டு வரும் சுன்னாகம் பிரதேச சபைக்கான புதிய கட்டடமானது யாழ்ப்பாண ஏனைய பிரதேச சபைக் கட்டிடங்களை விடவும் சிறப்பான கட்டடமாக இருக்கும், இதன் மூலம் இப்பிரதேச சபை மக்களுக்கான நிறைவான சேவையினை இலகுவாக வழங்க முடியும், மேலும் 30 மில்லியன் ரூபா செலவில் நூலகம் அமைப்பதற்கும், 2 மில்லியன் ரூபா செலவில் பிரதேச சபைக்கு எல்லைக்குட்பட்ட வீதிகளுக்கான வீதி விளக்கு அமைப்பதற்கும், மருதனார்மடம், சுன்னாகம் சந்தைகளை புனரமைப்பதற்கும் அனுமதி வழங்க இருப்பதாகவும் தெரிவித்தார். இதனை விட இனிவரும் காலங்களில் மேலும் பல்வேறு அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்கவுள்ளதாகக் குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் சுன்னாகம் பிரதேச சபையின் செயற்பாடுகளையும் பாராட்டினார்.
மேலதிக படங்களுக்கு அழுத்தவும்.