www.jananayakam.net.ms or www.jananayakan.tk, Email: jananayakam.gmail.com ....

Monday, May 30, 2011

கிளிநொச்சி கரைச்சி பிரதேச கெயார் நிறுவன அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டம்.

2011।05।30ம் திகதியாகிய இன்று கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவில் கெயார் நிறுவனத்தினரால் நடைமுறைப்படுத்தப்பட்ட அபிவிருத்தி வேலைத் திட்டங்களை மீளாய்வு செய்யும் நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் ஈ।பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார், கரைச்சி பிரதேச செயலர் நாகேஸ்வரன், பிரதேச செயலக உதவித் திட்டப் பணிப்பாளர் அமல்ராஜ், கரைச்சி பிரதேச சபை செயலாளர் தவசோதி, கெயார் நிறுவன திட்ட முகாமையாளர் மைத்திரி, பிரதேச பணிப்பாளர் றியாஸ், இணைப்பாளர் சபீர் மற்றும் பிரதேசத்தின் மக்கள் அமைப்பு பிரதிநிதிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் உரையாற்றுகையில் தற்போது எமது மக்களின் வாழ்வில் முன்னேற்றங்களும் நல்ல மாற்றங்களும் ஏற்பட்டுள்ளன, ஆனால் அவை வெளியுலகிற்கு கொண்டு வரப்படுவதில்லை, மாறாக அரசியல் இலாபங்களுக்காக இங்கு எதுவுமே நடக்கவில்லை என பிரசாரம் செய்யப்படுகிறது. ஆனால் அரசோ இந்த மாவட்டத்தின் அபிவிருத்திக்கென ஏழாயிரம் கோடி ரூபாய் செலவு செய்துள்ளது, மேலும் பல அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்கவும் உள்ளது.

எனது முன்னிலையில் கூட பல்வேறு அபிவிருத்திப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன, இந் நிலையில் சில அரசியல் வாதிகளும் அவர்களுக்கு துணையாக சில ஊடகங்களும் வெறுமனே குறைகளை மட்டும் சுட்டிக்காட்டி விமர்சிக்கின்ற செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றன, இவை எம் மக்களின் வாழ்வில் முன்னேற்றத்தை ஏற்படுத்தப் போவதில்லை, எனவே ஏற்பட்டுள்ள நல்ல மாற்றங்களை வரவேற்றுக் கொண்டு குறைகளை நிவர்த்தி செய்கின்ற முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமே தவிர எப்பொழுதும் எதிர்மறையாக பேசுவதனையே தொழிலாகக் கொண்டிருக்ககூடாது.

அத்தோடு எமது மக்களுக்கு அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்ந்தும் இலவசமாக எல்லா உதவிகளையும் வழங்கிக் கொண்டிருக்காது. இவ்வுதவிகள் குறிப்பிட்ட காலப்பகுதிக்கு மட்மே வழங்கப்படும். எனவே மக்கள் சுயமாக உழைக்கும் சமூகமாக மாறவேண்டும். அதன் மூலம் அவர்களது வளமான எதிர்காலத்திற்கு வழிசமைக்க முடியும் எனவும் தெரிவித்தார் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார்.

கிளிநொச்சி வன்னேரிக்குளம் கிராம அபிவிருத்திச்சங்க தலைவர் மு.மகேஸ்வரன் உரையாற்றுகையில் முன்னைய காலங்களில் அபிவிருத்திச் செயற்பாடுகள் என்பது நகரையும் நகரை அண்டிய பகுதிகளோடும் மட்டுமே நின்றுவிடும், ஆனால் தற்போது நிலைமைகள் அவ்வாறில்லை தற்போதைய அபிவிருத்தி பணிகளை நகரிலிருந்து தொலைவிலுள்ள கிராமங்களுக்கும் நகர்த்தி ஏற்றத் தாழ்வுகள் அற்ற அபிவிருத்தியை முன்னெடுத்து வருகின்றவர் ஈ.பி.டி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் அவர்கள் என தெரிவித்துள்ளார்
மேலதிக படங்களுக்கு அழுத்தவும்.