Follow @jananayakan
பரந்தன் கரைச்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவருமான எம். அசோக் சந்திரகுமார் அவர்களை கரைச்சி வடக்குப் பிரதேச மக்கள், புனரமைப்புப் பிரதிநிதிகள் சந்தித்துத் தமது தேவைகள் மற்றும் பிரச்சினைகள் குறித்துக் கலந்துரையாடினர்.
இச்சந்திப்பில் கரைச்சி வடக்கு (பரந்தன்) பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் பொதுமுகாமையாளர் திரு செல்வராஜா, கரைச்சிப் பிரதேச விசேட ஆணையாளர் திரு. பொன். நித்தியானந்தம், கரைச்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசத்தின் பொதுமுகாமையாளர் திரு. கணேசபிள்ளை, உட்பட பிரதேச ஆசிரியர்கள் மற்றும் விவசாயிகள் அமைப்புப் பிரதிநிதிகள் கடற்றொழிலாளர்கள் சங்கப் பிரதிநிதிகள் இன்னும் பலர் கலந்து கொண்டனர்.
கரைச்சி வடக்கு - சுண்டிக்குளம் கடலேரியில் கடற்றொழில் செய்வதற்கு ஏற்பாடு செய்து கொடுத்தமைக்காக பாராளுமன்ற உறுப்பினரைப் பாராட்டியதுடன் சமாசத்தின் செயலாளரும் விசேட ஆணையாளருமான பொன். நித்தியானந்தம் அவர்கள் கரைச்சி வடக்கு ப.நோ.கூ. சங்கம் எதிர்நோக்கியுள்ள நெருக்கடிகளைப் பற்றியும் மற்றும் தேவைகள் குறித்தும் எடுத்துரைத்தார்.
கூடிய விரைவில் கூட்டுறவுச் சங்கத்தின் வாகனங்களை மீட்டுத்தரும்படியும் புதிய வாகனங்களைப் பெறுவதற்கு கடனுதவி பெற ஏற்பாடு செய்யும் படியும், அத்துடன் சங்கக் கிளைகள் ஆரம்பிப்பதற்கான கட்டட வசதிகள் இல்லாமலிருப்பதாகவும் கூட்டுறவுச் சங்கத்தின் பொதுமுகாமையாளர் கேட்டுக்கொண்டார்.
இவர்களது கோரிக்கைகளுக்குப் பதிலளித்த சந்திரகுமார் அவர்கள் கூட்டுறவு அமைச்சர் வடமாகாண ஆளுநர் அரசாங்க அதிபர் படை அதிகாரிகள் ஆகியோருடன் கலந்துரையாடி இப்பிரச்சனைகளுக்குத் தீர்வுகளைக் காண்பதாகத் தெரிவித்தார்.
வன்னி தொழில் நுட்பக் கல்லூரியை மீள ஆரம்பிப்பது குறித்து வன்னி தொழில் நுட்பக் கல்லூரியின் இணைப்பாளர் கலந்துரையாடலில் குறிப்பிட்டார். அவரின் கோரிகைக்கேற்ப தொழில்நுட்பக் கல்லூரியை மீள இயங்குவதற்குத் தேவையான உதவிகளை சம்பந்தப்பட்ட தரப்பினருடன் தொடர்பு கொண்டு பெறுவதற்கு முயற்சிப்பதாகத் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் அசோக் சந்திரகுமார் குறிப்பிட்டதுடன் புதிய அமைவிடமொன்றுக்கான காணி தொடர்பாக கண்டறிவதாகவும் கூறினார்.
பிரதேச பாடசாலைகளுக்குத் தேவையான ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கான பஸ் சேவை போன்றவை தொடர்பாகவும் பரந்தன் பிரதேச மக்கள் தமது தேவைகளை நாடாளுமன்ற உறுப்பினரிடம் தெரிவித்தனர்.
மக்களின் தேவைகளையும் பிரச்சினைகளையும் கேட்டறிந்த நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் அவர்கள் விரைவில் தீர்க்கக்கூடிய பிரச்சினைகளை முதற்கட்டமாகத் தீர்ப்பதாகவும் ஏனையவற்றை கட்டம் கட்டமாக தீர்த்துவைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்ததுடன், இவை அனைத்தும் மக்களின் பங்களிப்பும், ஒத்துழைப்பும் இருந்தால் தான் மீள் அபிவிருத்திக்கான அபிவிருத்தி வளர்ச்சியுறும் எனவும் தெரிவித்தார்.
மேலதிக படங்களுக்கு அழுத்தவும்.