
இந் நிகழ்வுக்கு பாராளுமன்ற உறுப்பினர் எம்.சந்திரகுமார், வட-கிழக்கு மாகாண சபை முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள், நாபா அணியின் செயலர் தி.ஸ்ரீதரன் சுகு ஏனைய கட்சிகளின் பிரதிநிதிகளென பலர் கலந்து கொண்டு உரையாற்றினர்.
ஈபிடிபி பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் தனதுரையில், தோழர் பத்மநாபாவின் 20வது நினைவு தினத்தை இன்றைய தினம் தியாகிகள் தினமாக நினைவு கூரும் இவ்வேளை படுகொலை செய்யப்பட்ட தோழர்கள் எந்த இலட்சியங்களுக்காக தமது உயிர்களை அர்ப்பணித்தார்களோ அவர்களது அந்த இலட்சியங்களை ஈடேற்றுவதற்கு நாம் திடசங்கம் எடுப்பதுடன் ஒரே நோக்கமும் இணைந்து செல்லக் கூடிய கொள்கைகளையும் கொண்ட கட்சிகள் பொதுவான ஒரு இணக்கப்பாட்டுக்கு வருவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான நாளாக இன்றைய தியாகிகள் தினம் அமைய வேண்டும்.
அத்துடன் தோழர் பத்மநாபாவின் 20வது தினத்தை நினைவு கூரும் இச்சமயம் நாட்டில் மீண்டும் சுமுக நிலை ஏற்பட்டுள்ளதுடன் அனைவரும் பகிரங்கமாக இணைந்து பத்மநாபாவை நினைவு கூருவதற்கு ஏற்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது, தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினைக்கு தீர்வு காணக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ள இச் சந்தர்ப்பத்தில் நடைமுறைச் சாத்தியமான வழிகளில் உடன்பாட்டை எட்டுவதற்கு ஒருமித்த கருத்துள்ள கட்சிகள் ஒன்று சேர வேண்டியது அவசியமென்றும் வலியுறுத்தினார்.
