www.jananayakam.net.ms or www.jananayakan.tk, Email: jananayakam.gmail.com ....

Monday, April 20, 2009

யுத்த சூனிய வலயத்தில் இருந்த 35 ஆயிரம் மக்களும் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வருகை.



தமிழீழ விடுதலைப் புலிகளின் பிடியில் சிக்குண்டு யுத்த சூனியப் பகுதியான வலைஞர்மடம், புதுமாத்தளன் மற்றும் அம்பலவன்பொக்கணை போன்ற இடங்களில் இருந்த பொது மக்களை மீட்கும் பொருட்டு இன்று திங்கட்கிழமை அதிகாலை இராணுவத்தின் 58ஆம் படையணி, 55ஆம் படையணி, 11வது காலாற்படை, கெமுனு வொட்ச் - 9, கஜபா ரெஜிமன்ட் - 8, விசேட படையணி மற்றும் இராணுவக் கொமாண்டோ படையணி ஆகியன இணைந்து பாதுகாப்பு வலயமான புதுமாத்தளன் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளால் அமைக்கப்பட்டிருந்த 2.5 கிலோமீற்றர் நீளமான மண்ணணையினை இராணுவம் கைப்பற்றியுள்ளது.

இம் மண்ணணையை ஊடறுத்துச் சென்ற இராணுவத்தினர் பாதுகாப்பு வலயத்தில் சிக்குண்டு இருந்த 35000 பேருக்கும் அதிகமான மக்களை மீட்டிருப்பதாக செய்திகள் கூறுகின்றன, அத்துடன் பழமாத்தளன் பகுதியில் சிக்குண்டிருந்த 3000 பேருக்கும் மேற்பட்ட மக்களை 55ஆம் படையணி நிலைகொண்டிருந்த சாளையின் தெற்குப் பகுதிக்கு வந்திருப்பதாகவும் இராணுவ தகவல்கள் கூறுகின்றன.

இன்று மதியம் 12 மணியில் இருந்து 24 மணித்தியாலத்தினுள் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் திரு.வே.பிரபாகரன் மற்றும் அவரது இயக்க உறுப்பினர்களைச் சரணடையுமாறு இராணுவம் காலக்கெடு விதித்துள்ளது.

மக்களைத் தடுத்து நிறுத்தும் நோக்கில் விடுதலைப் புலிகளால் மூன்று தற்கொலைத் தாக்குதல் மற்றும் துப்பாக்கித் தாக்குதல் நடத்தியதில் பல பொதுமக்கள் கொல்லப்பட்டும் காயமடைந்தும் உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

மக்கள் சாரிசாரியாக இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்து கொண்டிருப்பதாகவும், இதனை ஆகாயத்தில் இருந்து ஆளில்லா விமானத்தின் மூலம் எடுக்கப்பட்ட வீடியோ படம் உறுதிப்படுத்துவதாகவும், இவர்களை வவுனியாவிலுள்ள நலம்புரி நிலையங்களுக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அரசதரப்புச் செய்திகள் கூறுகின்றன.

விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த புதுமாத்தளன், வலைஞர்மடம் மற்றும் அம்பலவன்பொக்கனை பகுதிகளில் இருந்து 35,000 பொதுமக்களை இராணுவத்தினர் விடுவித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.