www.jananayakam.net.ms or www.jananayakan.tk, Email: jananayakam.gmail.com ....

Wednesday, April 15, 2009

தீவகத்துக்கு விஜயம் மேற்கொண்ட மக்கள் தலைவர்.


வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வவுனியாவில் உள்ள நிவாரணக் கிராமங்களில் வாழும் மக்களைச் சந்தித்து அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியில் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா கடந்த வாரம் யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்டு மக்களைச் சந்தித்து வருகின்றார்.

அமைச்சரின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதியின் மூலம் நிர்மாணிக்கப்பட்ட எழுவைதீவு புனித தோமையார் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க கட்டடத்தை கடந்த 2009.04.13 ஆம் திகதி தீவகப் பகுதிகளுக்குச் சென்ற அமைச்சரினால் திறந்து வைக்கப்பட்டது.

கடந்த வருட இறுதியில் ஏற்பட்ட நிஷா புயல் மற்றும் மழை வெள்ளத்தினால் பாரிய அனர்த்தத்துக்குள்ளாகி புனரமைப்பு மேற்கொள்ளப்பட்டு வரும் தீவக இறங்கு துறைகளையும் அதனோடிணைந்த வீதிகளையும் நேரில் சென்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பார்வையிட்டார்.

நாதஸ்வர, மேள தாள இசையுடன் அனலைதீவு மக்களால் அழைத்து வரப்பட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அனலைதீவு மக்களின் நீண்ட நாட் கனவான மின்சார விநியோகத் திட்டத்தை கடந்த 2009.04.13 ஆம் திகதிஆரம்பித்து வைத்தார்.

இந் நிகழ்வில் அரசாங்க அதிபர் திரு.கே.கணேஷ், ஊர்காவற்றுறை உதவி அரசாங்க அதிபர் திரு.ஸ்ரீமோகனன், வடபிராந்திய இலங்கை மின்சார சபை உதவிப் பொது முகாமையாளர் திரு.முத்துரத்தினானந்தசிவம், தீவக கடற்படை கட்டளைத்தளபதி லெப்டினன் கொமாண்டர் வித்தானாச்சி, தீவக கடற்படை உயரதிகாரிகள், மதகுருமார் மற்றும் கிராம உத்தியோகத்தர்கள் அடங்கலாக பொதுமக்களும் பலரும் பங்கு கொண்டனர்.

நிஷா புயல், மழை மற்றும் வெள்ளம் காரணமாக தீவகப் பரப்பில் வீழ்ந்து கிடக்கும் பனை மரங்களையும், வயது முதிர்ந்த பனை மரங்களையும் வெட்டி விற்பதற்கு அனுமதி பெற்றுத் தருமாறு கோரிய தீவக பிரதேச பொதுமக்களின் பேச்சைச் செவிமடுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறிப்பிட்ட அப் பனை மரங்களை வெட்டி விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை பிரதேச பொது நோக்கங்களுக்கு பயன்படுத்த நடடிக்கை எடுக்குமாறு அரசாங்க அதிபருக்கு அமைச்சர் பணிப்புரை வழங்கினார்.

தீவகப் பகுதிகளுக்கு விஜயம் செய்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மக்களோடு மக்களாக எழுவைதீவிற்கு கால் நடையாகவே சென்று அப் பிரதேசம் எங்கும் சென்று பார்வையிட்டார். அனலைதீவிற்கு மக்களோடு மக்களாக இ.போ.சபையின் பேரூந்தில் பயணம் மேற்கொண்டார்.