
ஐக்கிய நாடுகள் சபையின் யுனெஸ்கோ அமைப்பினால் 2009 ஆம் ஆண்டுக்கான உலக பத்திரிகைச் சுதந்திர விருதை சண்டேலீடர் பத்திரிகையாசிரியர் லசந்த விக்ரமதுங்கவுக்கு வழங்கவுள்ளதாக யுனெஸ்கோவின் பணிப்பாளர் கொய்சிரோ மற்சூறா அறிவித்துள்ளார்.

ஸ்ரீலங்காவில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள போரியலுக்கெதிராக நடுநிலை நின்று செயற்பட்ட லசந்த விக்ரமதுங்க பரஸ்பர புரிந்துணர்வு, இணக்கப்பாடு, கருத்துவெளிப்பாட்டுச் சுதந்திரம் ஆகிய முக்கிய பண்புகளை தனது ஊடகவியலில் கடைப்பிடித்ததற்காக இவ்விருது அவருக்குப் பொருத்தமானது என்றும் பணிப்பாளர் கொய்சிரோ மற்சூறா தெரிவித்துள்ளார்.

14 பேரைக் கொண்ட சர்வதேச யூரிகள் சபையால் லசந்தவின் பெயர் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டதாகவும், தனக்கு ஏற்படவுள்ள ஆபத்தை உணர்ந்தும் தனது மரணம் வரை ஜதார்த்தத்தைப் பேசியதால் இவ்விருதுக்கான தெரிவுக்கு லசந்தவின் பெயர் ஏற்கப்பட்டதாக தேர்வாளர் குழுவின் தலைவர் ஜோ தொலோலோ தெரிவித்தார்.
சண்டேலீடர் பத்திரிகைக்காக லசந்தவினால் எழுதப்பட்ட ஆசிரிய தலையங்கம், அவர் கொல்லப்பட்ட ஜனவரி 8 ஆம் திகதிக்குப் பின்னரான மூன்று நாட்களின் பின்னரே ஜனவரி 11 ஆம் திகதியே பிரசுரமானதாகவும் தேர்வுக்குழுத் தலைவர் தெரிவித்தார்.
உலக பத்திரிகைச் சுதந்திர தினமான 2009.05.03 ஆம் திகதி டோகா - கட்டாரில் வைத்து இவ்விருது வழங்கப்படவுள்ளதாக யுனெஸ்கோ தெரிவித்துள்ளது.